தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் சமீபத்தில் கைப்பற்றினர். அங்கு கடுமையான உணவு பஞ்சம் நிலவுகிறது. 90 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில்வாடுகின்றனர். ஊட்டச்சத்து இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
ஐ.நா., அறிக்கை
ஆப்கன் மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் கடும் பசி பட்டினியால் வாடுவதாக, ஐ.நா., அறிக்கை வெளியிட்டுஉள்ளது. அங்கு விரைவில் குளிர்காலம் துவங்க உள்ளது. இந்த ஆண்டு கடும் குளிர் நிலவும் என, ஆப்கன் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.'அந்த கணிப்பு உண்மையானால் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டு, குழந்தைகள் உட்பட கோடிக்கணக்கான ஆப்கானியர்கள் பட்டினியால் உயிரிழக்க நேரிடும்' என, பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
ஆப்கன் மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 10 லட்சம் டன் கோதுமையை அளித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 75 ஆயிரம் டன் கோதுமையை அளித்து உதவியது. இந்நிலையில் தலிபான்களின் கட்டுப்பாட்டில் சிக்கி வறுமையில் வாடும் ஆப்கன் மக்களுக்கு, மனிதாபிமான உதவிகள் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டது.
இதன்படி 50 ஆயிரம் டன் கோதுமை மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்க அறிவிப்பு வெளியிட்டது.
'பஞ்சாபின் வாகா எல்லையில் இருந்து பாகிஸ்தான் வழியாக, இந்தியாவுக்கு சொந்தமான லாரிகளில் இந்த உதவிப் பொருட்கள் ஆப்கனுக்கு அனுப்பி வைக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது.இதை பாக்., அரசு ஏற்க மறுத்தது. 'வாகா எல்லையில் இருந்து பாக்.,குக்கு சொந்தமான லாரிகள் வாயிலாக மட்டுமே உதவி பொருட்களை அனுப்ப வேண்டும்' என வலியுறுத்தியது. இந்த நிபந்தனையை ஏற்க மத்திய அரசு மறுத்தது.
'உதவிப் பொருட்கள் வழியில் திசை மாறிவிடக் கூடாது. உரிய பயனாளிகளை முறையாக சென்றடைவதை உறுதி செய்ய விரும்புகிறோம். 'மேலும், நம்பகமான சர்வதேச நிறுவனம் வாயிலாகவே நிவாரணப் பொருட்களை வினியோகிக்க விரும்புகிறோம்' என, மத்திய அரசு
தெரிவித்தது.
முரண்டு பிடித்தது
இந்த விவகாரம் தொடர்பாக இரு நாட்டு அதிகாரி கள் இடையே பேச்சு நடந்து வந்தது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்பதாக பாக்., அரசு கடந்த வாரம் அறிவித்தது. ஆனால் 'கோதுமை எடுத்து செல்ல அனுமதி அளிக்க முடியாது' என, திடீரென நேற்று முன் தினம் முரண்டு பிடித்தது.'மனிதாபிமான அடிப்படையில் செய்யும் உதவிகளுக்கு நிபந்தனைகள் விதிப்பதை ஏற்க முடியாது' என, வெளியுறவுத்துறை செயலர் அரிந்தம் பாக்சி திட்டவட்டமாக தெரிவித்தார்.
இது குறித்து பாக்., வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:வாகா எல்லையில் இருந்து பாக்., வழியாக 50 ஆயிரம் டன் கோதுமை மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அளிக்கும் இந்திய அரசின் மனிதாபிமான உதவிக்கு விதிவிலக்கு அடிப்படையில் அனுமதி அளித்துள்ளோம். இந்த உதவி பொருட்கள் வாகா எல்லையில் இருந்து ஆப்கன் லாரிகள் வாயிலாக டோர்க்ஹாமுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த தகவல் இந்திய வெளியுறவுத்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE