சென்னை:மத்திய அரசின், 'ரிவேம்ப்டு டிஸ்ட்ரிபியுஷன் செக்டார் ஸ்கீம்' என்ற புதுப்பிக்கப்பட்ட மின் வினியோக திட்ட பணிகளை, தமிழகத்தில் செயல்படுத்த, 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி கேட்க, தமிழக மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு, நாடு முழுதும் தடையில்லாமல் சீராக மின் வினியோகம் செய்யவும், மின் இழப்பை பூஜ்யமாக குறைக்கவும், மின்சாரம் விற்பனையை துல்லியமாக கண்டறியவும், புதுப்பிக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது.
இரு பிரிவுகளை உள்ளடக்கிய, 3.03 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தை, 2025 - 26ல் முடிக்க 'கெடு' நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவின் கீழ், புதிய துணைமின் நிலையம், மின் வழித்தடம் அமைத்தல், மின் வழித்தடங்களில் மீட்டர் பொருத்துதல், மின் இணைப்பு களில், 'ஸ்மார்ட், ப்ரீபெய்டு' மீட்டர் பொருத்துதல் போன்றவை மேற்கொள்ளப்படும்.
இரண்டாவது பிரிவில் ஊழியர்களுக்கு பயிற்சி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் செயல்படுத்தப்படும்.இதுதொடர்பாக, தமிழக மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதுப்பிக்கப்பட்ட மின் திட்ட பணிக்கான நிதியை, மத்திய அரசு வழங்கும். இதற்காக மேற்கொள்ளப்படும் பணிகள்; செலவு உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய விரிவான திட்ட அறிக்கையை, இம்மாதத்திற்குள் தமிழக மின்வாரியம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மத்திய அரசு நிர்ணயித்துள்ள கால அவகாசத்திற்குள் திட்ட பணிகளை முடித்து விட்டால், திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் நிதியில், 60 சதவீதம் மானியமாக கிடைக்கும். எனவே, தமிழகத்தில் புதுப்பிக்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்த, 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி கேட்கும் வகையில், விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி நடக்கிறது. அறிக்கை விரைவில், மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE