தமிழக நிகழ்வுகள்
போதை வஸ்து பறிமுதல்: கூடலூரில் ஒருவர் கைது
கூடலுார்:கர்நாடகாவிலிருந்து, கூடலுாருக்கு கடத்திவரப்பட்டபோதை வஸ்து பாக்கெட்களை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.

தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட போதை வஸ்துகளை, கர்நாடகாவில் இருந்து, காய்கறி மூட்டைகளில், சிலர் கூடலுாருக்கு கடத்தி வந்து, விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் வந்தது.தொடர்ந்து, எஸ்.ஐ., வெங்கடசாலம், எஸ்.எஸ்.ஐ., ராஜன் மற்றும் போலீசார் நேற்று, காலை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, அக்ரஹாரம் சாலையில் உள்ள, காய்கறி கடையில், மூட்டைகளை ஆய்வு செய்தனர்.
அதில், மூன்று மூட்டைகளில் போதை வஸ்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதிலிருந்து, 3,950 போதை வஸ்து பாக்கெட்டுகள், 10 ஆயிரத்து 850 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கூடலுாரைசேர்ந்த காய்கறி வியாபாரி செல்வகுமார், 45, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
செம்மரம் வெட்ட சென்ற இருவர் சாவு
அரூர்:ஆந்திராவிற்கு செம்மரம் வெட்ட சென்று இரண்டு தொழிலாளர்கள்உயிரிழந்தது குறித்து புரோக்கரிடம் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த சித்தேரி மலை பஞ். மிதிகாடுவை சேர்ந்த ராமன் 42 என்பவர் நவ., 27ல் சித்தேரி பஸ் நிறுத்தம் அருகே தலையில் காயத்துடன் இறந்து கிடந்தார். அதே போல் அழகூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் 44 கடப்பா பகுதியில் தலை வெட்டப்பட்டு இறந்து உள்ளதாகவும் அவரது உடலை கொண்டு வருவதற்கு உதவி செய்யுமாறு அரூர் போலீசாரிடம் நவ.,28ல் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் ஆந்திராவிற்கு செம்மரம் வெட்ட சென்றதில் ராமன்,பாலகிருஷ்ணன் உயிரிழந்ததும், காயமடைந்த மோகன்வேலுார் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவதும் தெரிந்தது.மேலும் கிருஷ்ணகிரியில் இருந்து காரில் ராமனின் உடலை சித்தேரிக்கு ஏற்றி வந்த அரூரை சேர்ந்த கார் உரிமையாளர் சண்முகம், ஓட்டுனர் பார்த்தீபனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் சித்தேரியை சேர்ந்த புரோக்கர் ரகு என்பவர் ராமனின் உடலை ஏற்றி வர சண்முகத்திடம் கூறியுள்ளார். இதையடுத்து ஊட்டியில் தலைமறைவாக இருந்த ரகுவை தனிப்படைபோலீசார் பிடித்துவிசாரித்து வருகின்றனர்.
கோர்ட் வளாகத்தில் செருப்பு கேட்டு 'அடம்'
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் கைது செய்து அழைத்து வரப்பட்ட, முன்னாள் அ.தி.மு.க., பிரமுகர், கோர்ட் வளாகத்தில் புதிய செருப்பு வாங்கித்தரச் சொல்லி, போலீசாரிடம் 'சேட்டை' செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி, கோமங்கலம்புதுாரை சேர்ந்தவர் அருண்பிரசாத்,28. இவர், அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளராக இருந்தார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால், கடந்த மாதம், 14ம் தேதி, அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், கோமங்கலம் கிளை செயலாளர் சிவக்குமார் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். சிவக்குமாரின் மனைவி கொடுத்த புகாரின்படி, கோமங்கலம் போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சி ஜே.எம்., எண் 2 கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, 15 நாட்கள் சிறை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் செல்லையா உத்தரவிட்டார்.
பொள்ளாச்சி கிளை சிறைக்கு வர, போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்காமல், போலீசாரை ஒருமையில் பேசியதுடன், செருப்பு வாங்கி கொடுத்தால் தான் வருவேன் என, அடம் பிடித்துள்ளார். அதன்பின், போலீசார் புதிய செருப்பு வாங்கி கொடுத்து சமாதானப்படுத்தினர். இந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.
போலீசார் கூறுகையில், 'அருண்பிரசாத், கோவிலுக்கு மாலை அணிந்து இருந்ததால் செருப்பு அணியாமல் இருந்தார். சிறையில் அடைப்பதற்கு முன், மாலையை கழற்றியதால் செருப்பு வேண்டும் என்று கேட்டார். வாங்கி கொடுத்தோம்' என்றனர்.
கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை:சென்னையில், கவர்னர் மாளிகை உட்பட நான்கு இடங்களில் நேற்று வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ரயில் நிலைய அதிகாரிக்கு நேற்று, மர்ம கடிதம் ஒன்று வந்தது. அதில், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை, தலைமை செயலகம், எழும்பூர் மற்றும் மேல்மருவத்துார் ரயில் நிலையங்களில் குண்டு வெடிக்கும் என எழுதப்பட்டிருந்தது.
இது குறித்து, சென்னை ரயில்வே போலீசாருக்கும், மாநகர போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது. அனைத்து இடங்களிலும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். எங்கும் குண்டு ஏதும் சிக்கவில்லை.
இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.கடிதம் எழுதிய மர்ம நபர் குறித்து, செங்கல்பட்டு ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், மிரட்டல் விடுத்தவர், மேல்மருவத்துாரை சேர்ந்த, கங்காதரன், 60, என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

தூங்கு வாகை மரம் வெட்டி சாய்ப்பு: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி
கோவை:கோவையில், 40 ஆண்டுகள் பழமையான மரம் வெட்டப்பட்டதற்கு சூழல் ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்தனர். ரேஸ்கோர்ஸ் தனியார் கல்லூரி ரோட்டில், 40 ஆண்டுகள் பழமையான தூங்கு வாகை மரம் இருந்தது.
இந்த மரம் அங்குள்ள வீட்டை மறைப்பதாக சொல்லி, வீட்டு உரிமையாளர் வெட்ட முயற்சித்தார். இதனை அறிந்த சூழல் ஆர்வலர்கள், மரத்தின் கிளைகளை வெட்டலாம், ஆனால் எக்காரணம் கொண்டும் பொது இடத்தில் ரோட்டிலுள்ள மரத்தை வெட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். 5 ஆண்டுகளாக மரத்தை வெட்ட விடாமல் தடுத்து வந்தனர்.
இச்சூழலில், நேற்று இம்மரத்தை எலக்ட்ரிக் ரம்பம் மூலம் ஊழியர்கள் வெட்டி சாய்த்தனர். இதனால் சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்தனர். சூழல் ஆர்வலர் சையது கூறுகையில், ''அம்மரம் நல்ல நிலையில் இருந்த மரம். விழும் நிலையில் இல்லை. மரங்களை வெட்டும் முன் பசுமைக்கமிட்டியிடம் அனுமதி பெற வேண்டும்.
ஆனால், எவ்வித அனுமதியும் பெறவில்லை. மரத்தில் ஆணி அடிக்கவே அனுமதியில்லாத போது, மரத்தை வெட்டியது கண்டிக்கத்தக்கது. மரத்தை மறுநடவு செய்ய ஆலோசனை மேற்கொண்டிருக்கலாம்,'' என்றார்.
ஆசிரியை கன்னத்தில் 'பளார்' மாணவன் மீது நடவடிக்கை?
ஓசூர்:அரசு பள்ளியில் பெண் ஆசிரியையை தாக்கிய மாணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மாசிநாயக்கனப்பள்ளியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு முதுகலை பட்டதாரி பெண், ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் 1ம் தேதி பிளஸ் 1 வகுப்பிற்கு பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது, மாணவர் ஒருவரை ஒழுங்கீனமாக செயல்பட்டதாக கூறி கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவன், ஆசிரியை கன்னத்தில் அடித்து கீழே தள்ளினார். இச்சம்பவம், மற்ற மாணவர்கள் முன்னிலையில் நடந்தது. தலைமை ஆசிரியரிடம், பாதிக்கப்பட்ட ஆசிரியை புகார் செய்தார். ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மாணவன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இச்சம்பவத்திற்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் பள்ளிக்கல்வி ஆணையருக்கு, 'வாட்ஸ் ஆப்' பில் புகார் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி கூறுகையில், ''இது தவறான செய்தி. கல்வி மாவட்ட அலுவலர் விசாரணை நடத்தியுள்ளார். சங்கத்தினர் தேவையில்லாமல் பிரச்னை செய்து வருகின்றனர்,'' என்றார்.
ஆசிரியையை மாணவர் தாக்கினார் என்ற தகவல் வெளியே கசிந்தால், பள்ளிக்கு அவப்பெயர் வந்து விடும் என, நடந்த சம்பவத்தை கல்வித் துறை உயர் அதிகாரிகள் மறைப்பதாகவும், சம்பந்தப்பட்ட ஆசிரியையிடம் சமரசம் பேசப்படுவதாகவும் தகவல் வெளியாகிஉள்ளது.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் டிரைவர் தீக்குளிக்க முயற்சி
திருப்பூர்:உறவினரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாயை பெற்று தரக்கேட்டு, கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயற்சித்தார்.
திருப்பூர், எஸ்.ஆர்., நகரை சேர்ந்தவர் வரதராஜ், 38; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சத்யா. நேற்று காலை, வரதராஜ், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன், கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். திடீரென, கொண்டு வந்த டீசலை உடலில் ஊற்ற முயன்றார்.
இதைப்பார்த்த போலீசார், தடுத்து நிறுத்தினர்.போலீசாரின் விசாரணையில், வரதராஜ், தனது உறவினருக்கு, ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்கியுள்ளார். தற்போது, வரதராஜூக்கு, ஆபரேசன் செய்ய பணம் தேவைப்படுகிறது. கொடுத்த பணத்தை கேட்டதற்கு, வழங்க மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்து, தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. வீரபாண்டி போலீசார், அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று, விசாரணை நடத்தினர்.
ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது
சத்திரக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் சந்திரன் 52, கைது செய்யப்பட்டார்.
சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் நாகாச்சி கிராமத்தைச் சேர்ந்த, ராமநாதபுரத்தில் வசிக்கும் சந்திரன் 52. இவர் ஆசிரியை ஒருவருக்கு அலைபேசி மூலம் ஆபாச செய்திகளை அனுப்பி பாலியல் சீண்டல் செய்துள்ளார். ஆசிரியை சத்திரக்குடி போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதன்பேரில் சந்திரனை சத்திரக்குடி போலீஸ் எஸ்.ஐ., நாகராஜன் கைது செய்தார்.
மாணவரின் உயிரை பறித்த 'வீடியோ கேம்'
திண்டுக்கல்:அலைபேசியில் 'வீடியோ கேம்' ஆடியதை தாய் கண்டித்ததால், பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
தற்போதைய கொரோனா தொற்று சூழலால், ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்காததால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்தன. இதை பயன்படுத்தி, மாணவர்கள் வீடியோ கேம் ஆடுவது அதிகரித்தது.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே செங்குறிச்சி புளியம்பட்டியைச் சேர்ந்தவர் செல்லத்துரை, 17; இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அலைபேசியில் அடிக்கடி வீடியோ கேம் ஆடியதை, தாய் அழகம்மாள் கண்டித்தார்.இதில் விரக்தியான செல்லத்துரை விஷக் கிழங்கை தின்று மயங்கி கிடந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.
ரூ.20 ஆயிரம் லஞ்சம் மின் பொறியாளர் கைது
திருமங்கலம்:இலவச மின் இணைப்பு வழங்க, 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி மின்பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே முத்தையா புரத்தைச் சேர்ந்தவர் விவசாயி காட்டுராஜா, 46. இவரது தோட்டத்திற்கு இலவச மின் இணைப்பு கேட்டு, மேற்கு மின் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். மின் இணைப்புக்கு 25 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டது.
முன்பணமாக, 500 ரூபாய் செலுத்திய நிலையில், 10 நாட்களுக்கு முன் இலவச மின் இணைப்பு வழங்க அனுமதி கிடைத்தது.இந்நிலையில், காட்டுராஜாவை தொடர்பு கொண்ட உதவி மின் பொறியாளர் முகமது உவைஸ், 37, அனுமதி அளித்த விபரத்தை தெரிவித்து, தனக்கு 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார்.
இருவருக்கும் நடந்த பேச்சில் 20 ஆயிரம் ரூபாய் என முடிவானது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சத்தியசீலனிடம் காட்டுராஜா புகார் செய்தார்.நேற்று மாலை அலுவலகத்திற்கு வந்த காட்டுராஜாவிடம், 20 ஆயிரம் ரூபாயை வாங்கிய முகமது உவைசை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
ஏரி மீன் சாப்பிட்ட இருவர் வாந்தி, பேதியால் பலி
வேலுார்,:வேலுார் அருகே, ஏரியில் பிடித்த மீனை சமைத்து சாப்பிட்ட இருவர் வாந்தி, பேதி ஏற்பட்டு இறந்தனர்.
வேலுார் மாவட்டம், அல்லிவரம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. அவர்கள் வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் அப்பாசாமி, 60; கலித்ராஜா, 4 ஆகியோர் நேற்று காலை இறந்தனர்.
வருவாய் துறையினர் கூறுகையில், 'வேலுார் அரசு மருத்துவமனை கழிவுநீர், அல்லிவரம் ஏரியில் கலப்பதே இதற்கு காரணம்' என்றனர்.சுகாதாரத் துறையினர், ஏரியில் இருந்த மீன்கள் மற்றும் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள தண்ணீர் ஆகியவற்றை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
அல்லிவரம் மட்டுமின்றி, அப்பகுதிகளில் உள்ள ஏரிகளில் மீன் பிடிக்க தடை விதித்து, கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டு உள்ளார். இது குறித்து, தண்டோரா போட்டு மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் 'அட்மிட்'
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே தேவிபட்டணம் காமராஜர் நகர் அங்கன்வாடி மையத்தில் 25 குழந்தைகள் படிக்கின்றனர்.நேற்று எட்டு குழந்தைகள் மட்டுமே வந்திருந்தனர். மதியம் குழந்தைகள் சாப்பிட்டபோது, உணவில் பல்லி கிடந்ததை பார்த்தனர்.இதையடுத்து, குழந்தைகளை அங்கன்வாடி பணியாளர்கள், சிவகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
ஆசிரியை வேலை பெற்று தறுவதாக ரூ.13 லட்சம் மோசடி
செங்கல்பட்டு : கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை பெற்று தறுவதாக, 13 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
செங்கல்பட்டு, பெரியநத்தம் கெங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த லோகநாதன் மனைவி வேதவல்லி, 32; தனியார் பள்ளி ஆசிரியை.இவரிடம், புலிப்பாக்கம் சதீஷ்குமார் என்பவரின் மூலமாக, சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ரவிகுமார், 50, என்பவர் அறிமுகமாகியுள்ளார்.மத்திய அரசின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணி வாங்கி தருவதாக, வேதவள்ளியிடம் பேசியுள்ளார்.
இதை நம்பிய அவர், 13 லட்சம் ரூபாயை, ரவிகுமார் வங்கி கணக்குக்கு, 2019ம் ஆண்டு, அனுப்பி வைத்தார். வேலை வாங்கி தருவதாக கூறிய, ரவிகுமார் தொடர்ந்து ஏமாற்றி வந்தார்.இது குறித்து வேதவள்ளி புகாரின்படி, வழக்கு பதிந்த செங்கல்பட்டு போலீசார், ரவிகுமாரை போலீசார் கைது செய்து, செங்கல்பட்டு மாவட்ட சிறையில் நேற்று அடைத்தனர்.
இந்திய நிகழ்வுகள்
மருமகனிடம் சில்மிஷம் செய்த அத்தை 'போக்சோ'வில் கைது
ஐதராபாத்:ஒன்பதாம் வகுப்பு படிக்கும், 14 வயது சிறுவனுடன் பாலியல் ரீதியில் உறவு வைத்து, அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த பெண் 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் வசிக்கும் ஒரு பெண், ஒன்பதாம் வகுப்பு படிக்கும், 14 வயதான தன் மருமகனை சந்திக்க, அடிக்கடி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்துக்கு வருவது வழக்கம். அங்கு பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி, மருமகனுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்துஉள்ளார்.
இதை, தன் முன்னாள் கணவர் உதவியுடன் மொபைல் போனில் அந்த பெண் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை வெளியிட்டு விடுவதாக மருமகனை மிரட்டி, இதுவரை தங்க நகைகள் மற்றும் 6 லட்சம் ரூபாய் பணம் பறித்துள்ளார்.
வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணம் காணாமல் போனதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தாய், விசாரித்த போது அத்தையின் நாடகம் வெளிச்சத்துக்கு வந்தது. சிறுவனின் தாய் அளித்த புகார் அடிப்படையில், அந்த பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE