புதுச்சேரி-பழமை வாய்ந்த புதுச்சேரி பான்சியோனா அரசு பெண்கள் பிரஞ்சுப் பள்ளி கட்டடத்தை ஓட்டலாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாதா கோவில் தெருவில் 1827ல் பான்சியோனா பெண்கள் பிரஞ்சுப் பள்ளி (Pensionnat de jeunes filles) ஆரம்பிக்கப்பட்டது. புதுச்சேரி மாநிலத்திலேயே மிகவும் பழமையான பள்ளியாக இது உள்ளது. 1954க்குப்பிறகு புதுச்சேரி அரசு நடத்தி வரும், 4 பிரஞ்சுப் பள்ளிகளில் இதுவும் ஒன்று. துவக்ககாலத்தில் இப்பள்ளியில் வெள்ளைக்காரர்களின் குழந்தைகள் மட்டுமே சேர்க்கப்பட்டனர். 1829ல் ஆங்கிலோ இந்தியன் பிரிவு பெண் குழந்தைகளும், 1879ல் உள்ளூர்ப் பெண் குழந்தைகளும் பள்ளியில் சேர்ந்து பயில துவங்கினர்.இவ்வகையில், புதுச்சேரியின் கல்வி வரலாற்றிலும், பண்பாட்டிலும், இப்பள்ளிக்குத் தனி இடம் உண்டு. இத்தகைய சிறப்பு வாய்ந்த பிரெஞ்சு பள்ளியின் துாய்மா வீதியில் உள்ள பாரம்பரிய கட்டடத்தை ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் தற்போது பாரம்பரிய ஓட்டலாக மாற்ற முடிவு செய்துள்ளது.இதன்படி தற்போது கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி கல்வித் துறைக்கு கடிதம் எழுதி, அதன் முடிவினை கேட்டுள்ளது. இது பெற்றோர், மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பான்சியோனா பெண்கள் பிரஞ்சுப் பள்ளி கட்டடம் புதுச்சேரி வரலாற்றோடு நீண்ட தொடர்பு உள்ளது. இப்பள்ளியை 1903 வரை பிரான்சு நாட்டைச் சேர்ந்த குளூனி சகோதரிகள் ஏற்று நடத்தினர். பின்னர் அதை மதம் சாரா பள்ளியாக மாற்றி அரசே நடத்தத் துவங்கியது. இப்பள்ளிக்கு சொந்தக் கட்டடம் துாய்மா வீதியில் உள்ளது. கட்டடம் பழுதான நிலையில் கடந்த சில ஆண்டுகளாகப் பள்ளி மாதாகோயில் வீதியிலுள்ள 'கர்தினால் லுார்துசாமி' பெண்கள் பள்ளிக் கட்டடத்தில் 246 மாணவிகளோடு இயங்கி வருகிறது.ஓட்டலாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ள துாய்மா வீதி பிரெஞ்சு பள்ளிக் கட்டடம் உள்ள இடம் மதாம் ஸ்மித்து என்ற பெண்மணியால் பள்ளி அமைப்பதற்கு நன்கொடையாக 1848ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி அளிக்கப்பட்டதாகப் ஆவணத்தில் உள்ளது.கவர்னர் திவாரி காலத்தில் அக்கட்டடம் பெண் குழந்தைகள் கல்வி பயில்வதற்காக மட்டும் பயன்படும் என்று 1984ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு பள்ளியின் கட்டடம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படும் என, தொடக்கத்தில் உறுதியளிக்கப் பட்டது. ஆனால் தற்போது 194 ஆண்டுகள் பழமையான பள்ளிக் கட்டடத்தை ஓட்டலாக மாற்ற முடிவெடுத்துள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரியின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றான, பான்சியோனா அரசு பெண்கள் பிரெஞ்சு பள்ளிக் கட்டடத்தை ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் புனரமைத்துப் பெண் குழந்தைகள் மீண்டும், பயில பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE