கோவை: அரியர் தேர்வு எழுதிய பெரும்பாலான மாணவர்கள் தோல்வி அடைந்ததாக, வேளாண் பல்கலை அறிவித்துள்ளதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை இளங்கலைப் பிரிவில் வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட 12 பட்டப்படிப்புகள் உள்ளன. 14 உறுப்புக் கல்லுாரிகள், 29 இணைப்புக் கல்லுாரிகள் என, 44 கல்லுாரிகளில் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2018 - 19 மற்றும் 2019 - 20ம் கல்வியாண்டில், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு பயின்ற மாணவர்களில், செமஸ்டர் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான மறுதேர்வு நடத்தப் பட்டது. கடந்த ஜூலை மாதம் ஆன்லைன் முறையில் எழுத்து தேர்வுகளும், செப்., மாதம் நேரடியாக செய்முறை தேர்வுகளும் நடத்தப்பட்டன.
இதற்கான முடிவுகள்வெளியிடப்பட்டன. இதில் பெரும்பாலான மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதால், தோல்வி அடைந்ததாக பல்கலை அறிவித்துள்ளது.
முதல்வரிடம் முறையீடு
மாணவர்கள் சார்பில், முதல்வருக்கு அனுப்பிஉள்ள மனு:ஒட்டுமொத்த மாணவர்களும் தேர்ச்சி அடையவில்லை என்பது சரியல்ல. ஆன்லைன் வகுப்புகளில் தவறு நடக்காதபோது, தேர்வில் மட்டும் எப்படி தவறு நடக்கும். முறைகேடாக தேர்வு எழுதியதால் விடைத்தாள்களை திருத்த வில்லை. அதனால், தேர்வுகளில் தேர்ச்சி பெறவில்லை என, பல்கலை குறிப்பிட்டுள்ளது.
பல்கலை வளாகத்தில் ஆசிரியர்கள் முன்னிலையில் நடந்த செய்முறை தேர்வுகளின் விடைத் தாள்களும் திருத்தப்படாமல், தேர்ச்சி பெறவில்லை என, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. எனவே இப்பிரச்னையில் தாங்கள் தலையிட்டு தீர்வு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதமே மறுதேர்வு
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சூரிநாதசுந்தரம் கூறியதாவது:தேர்வு எழுதியவர்களில், 50 சதவீத மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இவர்களில் அனைவருமே முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அல்ல. தேர்வுத்தாள் திருத்தவில்லை என்பது கிடையாது. இது ஏற்கனவே தோல்வி அடைந்தவர்களுக்கான தேர்வு.
வீட்டில் இருந்து தான் அவர்கள் தேர்வு எழுதினர். பல்கலை விதிப்படி, ஒரு பாடத்தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டிருந்தாலும் அனைத்து பாடங்களிலும் அவர் தோல்வியுற்றதாகவே அறிவிக்கப்படும்.வழக்கமாக முறைகேட்டில் ஈடுபட்டால், அவர்கள் இரு ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தேர்வு அனுமதிக்கப்பட மாட்டார்கள். தற்போது, மாணவர்களுக்கு இந்த மாதத்திலேயே தேர்வுகள் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE