பகுத்தறிவு, சுயமரியாதை இரண்டும் துாய தமிழ் வார்த்தைகள் தான். ஆனால், பெரும்பாலும் புழக்கத்தில் இல்லாத இந்த இரு வார்த்தைகளையும், தமிழகத்தில் அதிகமாக புழங்குவது திராவிடர் கழகத்தினரும், அதன் 'மெயின்' கிளையான திராவிட முன்னேற்ற கழகத்தினரும் தான்; அ.தி.மு.க.,வினர் அதிகமாக இந்த வார்த்தைகளை உபயோகிப்பதில்லை.இந்த இரண்டு வார்த்தைகளை வைத்து விளையாடி, தமிழக மக்களை மூளைச்சலவை செய்து, ஆட்சி கட்டிலிலும் அமர்ந்துள்ளது திராவிட முன்னேற்ற கழகம்.
மூளைச்சலவை
ஆனால், அந்த கட்சி, தமிழக மக்களை பகுத்தறிவுடனும், சுயமரியாதையுடனும் வைத்திருக்கிறதா என்றால், இல்லை என்பதே உண்மை. தி.மு.க., - அ.தி.மு.க., இரண்டும் தமிழக மக்களை பிச்சைக்காரர்களாக தான் நடத்திக் கொண்டிருக்கின்றன.பகுத்தறியும் உணர்வும், சுயமரியாதை சிந்தனையும் தமிழகத்தில் எத்தனை பேரிடம் இருக்கிறது? சிலரை சில நாள் ஏமாற்றலாம்; பலரை பல நாள் ஏமாற்றலாம். ஆனால், எல்லாரையும் எப்போதும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது.
ஆனால், ஒரு வருடமில்லை, இரண்டு வருடமில்லை, தொடர்ந்து, 50 ஆண்டுகளுக்கு மேலாக எப்போதும் ஏமாந்து கொண்டே இருக்கும் ஒரு கூட்டம் நாட்டில் உண்டு என்றால், அது தமிழக மக்கள் தான். தமிழக மக்கள் எப்படி இருக்கின்றனர் என்றால், இந்த கழகங்களில் தலைவர்கள், 'கேப்பையில் நெய் வடிகிறது பார்' என்றால், 'நெய்யோடு தேனும் சேர்ந்து வழிகிறது தலைவரே...' என்று சொல்லும் அளவுக்கு மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர்.
அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜானகி, ஜெயலலிதா, பன்னீர் செல்வம், பழனிசாமி, ஸ்டாலின் ஆகிய தமிழக முதல்வர்களில், அண்ணாதுரையும், எம்.ஜி.ஆரும் மட்டும் தான் தன் குடிமக்களை பிச்சை எடுக்க அனுமதிக்கவில்லை.
இத்தனைக்கும் எம்.ஜி.ஆர்., தான், திரைத் துறையில் ஈட்டிய பொருட்களில் பெரும் பகுதியை ஏழைகளுக்கு தானமாகவும், தர்மமாகவும் கொடுத்து இருக்கிறார். தானமும், தர்மமும் வேறு; பிச்சை என்பது வேறு. ஜானகி எம்.ஜி.ஆர்., சில நாட்களே முதல்வராக இருந்ததால், இந்த பிச்சையிடும் பட்டியலில் அவரது பெயரை இணைக்கவில்லை.
என்ன பிச்சை என்று பார்ப்போம்...பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் துாள், மிளகாய் துாள், மல்லித் துாள், கடுகு, சீரகம், மிளகு. புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு, ஒரு முழு கரும்பு இத்துடன் கருணாநிதி குடும்ப போட்டோ அச்சிடப்பட்ட ஒரு துணிப்பை. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு, தமிழக அரசால் வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசு தொகுப்பை தான், பிச்சை என்கிறேன்.
சிந்தித்து பாருங்கள்
இதைத் தான், தமிழகத்தில், 2.16 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப் போகிறார்களாம். இதற்காக, 1,088 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளதாம். இந்த இடத்தில் இருந்து கொஞ்சம் பகுத்தறிவோடு சிந்தித்து பாருங்கள்.பொங்கல் பரிசு தொகுப்பு தமிழகத்தில் மட்டும் தான் வழங்கப்படுவதாக தெரிகிறது. இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநிலத்திலும் ஒரு பண்டிகையை முன்னிட்டு பரிசு தொகுப்பு வழங்கப்படுவதாக தெரியவில்லை.
மேலும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு, ஹிந்துக்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகைக்கு மட்டும் தான் வழங்கப்படுகிறது. முஸ்லிம்கள் கொண்டாடும் ரம்ஜானுக்கு பாசுமதி அரிசி, ஆட்டுக்கறி மற்றும் பிரியாணி தயாரிக்கும் மசாலா பொருட்கள் அடங்கிய ரம்ஜான் பரிசு தொகுப்பு பை வழங்கப்படுவதில்லை.
இனிப்பு, கார வகைகள்
அதுபோல, கிறிஸ்துவர்கள் கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கேக் தயாரிக்கும் மைதா, வெண்ணெய், கிரீம், சர்க்கரை, பாசுமதி அரிசி மற்றும் பிரியாணி மசாலா பொருட்கள் அடங்கிய கிறிஸ்துமஸ் பரிசு தொகுப்பு பை வழங்கப்படுவதில்லை.
ஹிந்துக்களுக்கு வழங்கப்படும், ஹிந்துக்கள் ஏற்றுக் கொள்ளும் இந்த பரிசுத் தொகுப்பை, முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் ஏற்றுக் கொள்வரா... ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. அதனால் தான், வழங்கவும் படுவதில்லை.அவ்வாறு கொடுப்பது அவர்களை ஏளனம் செய்யும் செயல் அல்லவா?
இதை இன்னொரு கோணத்திலும் சிந்திக்கலாம். தமிழகத்தில் வசிக்கும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மக்கள், அவர்கள் கொண்டாடும் பண்டிகைகளை, அவர்கள் சொந்த செலவிலேயே கொண்டாடும் அளவுக்கு பொருளாதார வசதி வாய்ப்புகளோடு இருக்கின்றனர்.ஆனால், தமிழகத்தில் வசிக்கும் ஹிந்துக்கள் மட்டும் தான், பொங்கல் பண்டிகையை, அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி, கொண்டாடும் நிலையில் இருக்கின்றனர்.
இந்த பொங்கல் பரிசு தொகுப்பு, பத்தாண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படுகிறது. புயல் அடித்தாலும், வெள்ளம் வந்தாலும் வழங்கப்படுகிறது. ஆட்சியில் இருந்தவர்களும், இப்போது இருப்பவர்களும் வெட்கி தலை குனிய வேண்டிய விஷயம் இது. சாதாரண, எளிமையான பொங்கல் பண்டிகையைக் கூட தங்கள் சுயசம்பாத்தியத்தில் கொண்டாட முடியாத அளவுக்கு, நாட்டு மக்களை இன்னமும் வைத்திருக்கிறோமே என, ஆட்சியாளர்கள் விசனப்பட வேண்டும்; வேதனைப்பட வேண்டும்.
'எஸ்கேப்' ஆக முடியாது
ஆனால், அவர்களோ கொஞ்சம் கூட மானம், ரோஷம், சூடு இல்லாமல் பொங்கல் பரிசு பையில் ஏலக்காய், முந்திரி பருப்பை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.இதற்காக கொஞ்சம் கூட கூச்ச நாச்சமோ, வெட்கமோ, வேதனையோ, நாணமோ, தலை குனிவோ அவர்களுக்கு இல்லை. அத்துடன் விட்டாலும் பரவாயில்லை...
முன்னாள் முதல்வர்களில் ஒருவரான பன்னீர் செல்வம், 'பொங்கல் பரிசு தொகுப்போடு, 2,500 ரூபாயும் கொடுக்க வேண்டும்' என்று அறிக்கை விடுத்து அகம் மகிழ்கிறார்.ரேஷன் கடை ஊழியர்களின் வேதனையை அறியாமல், ஆட்சியில் இருப்பவர்களும், இந்த பொங்கல் பரிசு பிச்சை தொகுப்பை, இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக ஆனந்தம் அடைந்து கொண்டிருக்கின்றனர்.
பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும் ஆட்சியாளர்கள், ஹிந்துக்களின் இன்னொரு முக்கிய பண்டிகையான தீபாவளிக்கு ஏன் வழங்குவதில்லை? தீபாவளிக்கு இனிப்பு மற்றும் கார வகைகள் செய்ய தேவையான பொருட்களோடு, குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் புத்தாடைகள், பட்டாசுகள், இறைச்சியும் சேர்த்து வழங்கலாம் அல்லவா?
பொங்கலை எப்படி நாடு முழுதும் மக்கள் கொண்டாடுகின்றனரோ, அது போல தீபாவளி பண்டிகையையும் நாடு முழுதும் உள்ள மக்கள் கொண்டாடத் தானே செய்கின்றனர்... தீபாவளி பண்டிகையை மட்டும் ஏன் ஒதுக்கி வைக்க வேண்டும்?தீபாவளி, வட மாநிலத்து ஹிந்துக்கள் கொண்டாடும் பண்டிகை என்று கூறி, 'எஸ்கேப்' ஆக முடியாது. ஏனெனில், தீபாவளிக்கு மறு நாள், கழக கண்மணிகள் அத்தனை பேர் வீடுகளிலும், 'தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது' என, படத்துடன் செய்தி பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வருகின்றன.
பகுத்தறிவும், தன்மானமும் உள்ள தமிழர்களே... தமிழகத்தில் வசிக்கும் தமிழர்களே... கொஞ்சம் பகுத்தறிவையும், தன்மானத்தையும் இணைத்து பாருங்கள்.
ராஜசூய யாகம்
தைப் பொங்கல் பண்டிகையை, நீங்கள் சம்பாதிக்கும் உங்கள் வருமானத்தில் இருந்து கொண்டாட முடியாதா; அதற்கு அரசின் பரிசுத்தொகுப்பு அவசியமா?தமிழகத்தில் வசிக்கும் சிறுபான்மையின மக்களுக்கு இருக்கும் ரோஷத்தில் ஒரு சிறு விழுக்காடு கூடவா, ஹிந்துக்களுக்கு இல்லாமல் போயிற்று?அந்த பகுத்தறிவை பயன்படுத்தி சிந்தித்து, சுயமரியாதையோடு யாரும் செயல்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தான், சாராய கடைகளை திறந்து வைத்திருக்கின்றனரோ என்ற சந்தேகம் எழுகிறது. அதுவும் வாஸ்தவம் தான். மூளை மழுங்கி கிடந்தால், சிந்தனை எப்படி செயல்படும்?
பகுத்தறிவு மற்றும் சுயமரியாதையோடு, 'தன்மானம்' என்றொரு 'கழக வார்த்தை'யும் உள்ளது. இட நெருக்கடி கருதி அந்த வார்த்தையை நாம் இந்த கட்டுரையில் பயன்படுத்தவில்லை.
பாண்டவர்களின் மூத்தவனான தர்மர், ராஜசூய யாகம் செய்தார். அந்த யாகம் செய்ததும் தர்மரின் மனதில், 'தான்' என்ற அகம்பாவம் தலைதுாக்கி விட்டது. உலகில் தனக்கு நிகர் யாரும் கிடையாது என்ற கர்வம் தலைக்கேறி விட்டது. இதை உணர்ந்த கிருஷ்ணர், அந்த கர்வத்தை அடக்க, தர்மரை அழைத்துக் கொண்டு பாதாள லோகம் சென்றார். மஹாவிஷ்ணு, வாமன அவதாரம் எடுத்து, மஹாபலியிடம் மூன்றடி மண் கேட்டு, விண், மண்ணை அளந்த பின், மூன்றாவது காலடியை மஹாபலியின் சிரசின் மீது வைத்ததால், மஹாபலி பாதாள லோகத்திற்கு சென்று இருந்தார். மஹாபலியின் ஆட்சி காலத்தில் மக்கள் எவ்வித குறைகளும் இல்லாமல், மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருந்தனர்; நாடும் சுபிட்ஷமாக இருந்தது.
தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை போல, கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் போது, சிரஞ்சீவியான மஹாபலி, தன் மக்களைக் காண வருவதாக ஐதீகம், இன்றளவும் கடை பிடிக்கப்படுகிறது.கிருஷ்ணனும், தர்மனும் சென்று மஹாபலியை சந்தித்தனர். மஹாபலி, தர்மனை பார்த்து, 'இவர் யார்?' என வினவி இருக்கிறார். அதற்கு கிருஷ்ணன், 'இவர் அஸ்தினாபுரத்து மாமன்னர் தர்மர்; தர்மப்பிரபு, தினமும் ஒன்பதாயிரம் பேர்களுக்கு உணவளித்த பிறகே உண்ணும் வழக்கம் உடையவர்' என்று அறிமுகப்படுத்தினார்.
அதை கேட்ட மஹாபலி, முகத்தை திருப்பிக் கொண்டு, 'தினமும் ஒன்பதாயிரம் பேர் இவர் போடும் சோற்றுக்காக காத்திருக்கின்றனர் என்றால், இவரது ஆட்சி எந்த லட்சணத்தில் இருக்கும். 'இவர் மாமன்னரா... இவர் முகத்தையே எனக்கு பார்க்க பிடிக்கவில்லை. வெளியே போகச் சொல்' என்றார். தர்மர் தலை குனிந்து வெளியேறினார். அங்கேயே, அப்போதே தர்மரின் கர்வம், அகம்பாவம் இரண்டும், 'அம்பேல்' ஆனது.
தமிழகத்தில் இருக்கும் கழகங்களும், பொங்கல் பரிசு பிச்சை தொகுப்பு விவகாரத்தில் அகம்பாவத்தோடும், கர்வத்தோடும் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
பிறவிப் பயன்
தர்மரின் கர்வத்தையும், அகம்பாவத்தையும் அடக்கவும், அகற்றவும் கிருஷ்ணன் இருந்தான். தமிழக மக்களை பிச்சைக்காரர்களாகவே கருதும் கழகத்தினரின் கர்வத்தையும், அகம்பாவத்தையும் அடக்க எந்த கிருஷ்ணன் வர போகிறானோ; எப்போது வரப் போகிறானோ? எனவே, தமிழக ஹிந்துக்கள், இந்த பொங்கல் பரிசு தொகுப்பை புறக்கணித்து, தங்கள் சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்வரா அல்லது வழக்கம் போல, வரிசையில் நின்று, பொங்கல் பரிசு தொகுப்பு பையையும், ஒரு முழு கரும்பையும் வாங்கிச் சென்று, பிறவிப் பயன் எய்தப் போகின்றனரா; என்ன செய்யப் போகின்றனரோ?
எஸ்.ராமசுப்ரமணியன்
எழுத்தாளர்
தொடர்புக்கு: இ-மெயில்: essorres@gmail.com