கொரோனா தளர்வுக்குப் பின் பக்தர்கள் வருகையால் பழநி இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. கார்த்திகை துவங்கிய பின் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மற்றும் முருக பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வரத்துவங்கி உள்ளனர்.
வரும் ஜனவரியில் தைப்பூசம், தொடர்ந்து மாசித்திருவிழா, பங்குனி உத்திரம், சித்திரை அக்னிநட்சத்திரம், வைகாசி விசாகம் என தொடர்ந்து பல மாதங்களுக்கு விழாக்கள் அதிகளவில் வர உள்ளன. இவற்றையொட்டி பழநி வரும் பக்தர்களுக்கு குறைவிருக்காது. குறிப்பாக தைப்பூசத்தை முன்னிட்டு பல ஆயிரம் பேர் தினமும் பாதயாத்திரையாக அணிவகுப்பர்.நடைபாதை சேதம்ஆண்டுதோறும் இதற்காக மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் நடந்து வருகின்றனர். இதனால் அவ்வப்போது விபத்துகளும் நடந்து விடுகிறது. இதை தவிர்க்க நெடுஞ்சாலையோரங்களில் பக்தர்கள் நடந்து செல்வதற்கென பேவர் பிளாக் பதித்த பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதைகள் தற்போது பல இடங்களில் சேதமடைந்துள்ளன.
பல இடங்களில் முட்புதர்கள் மண்டிக் கிடக்கின்றன.ஒட்டன்சத்திரம் பகுதியில் சிலநாட்களுக்கு முன் சிலர் பேவர் பிளாக் கற்களை பெயர்த்துச் சென்றுவிட்டனர். மேலும் நத்தம் - திண்டுக்கல், திண்டுக்கல் - பழநி என பல்வேறு பகுதிகளில் ரோடுகளை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இதனால் பக்தர்கள் ரோட்டில் நடந்து செல்கின்றனர். வரும் நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் இப்போதே பாதையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை தேவை
பழநி பக்தர் குணா கூறியதாவது: மார்கழி பிறந்ததும் மாலை அணிந்து பல ஆயிரம் பேர் தினமும் பழநி வரத்துவங்குவர். குறிப்பாக தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் வருவர். இவர்களுக்காக 5 ஆண்டுகளுக்கு முன் ரோட்டோரம் பாதை அமைக்கப்பட்டது. தற்போது கடும் மழையால் இப்பாதை சேதமடைந்தும், புதர்மண்டியும் பக்தர்கள் நடக்க முடியாத அளவுக்கு உள்ளது. இதனை உடனே சரிசெய்து, இரவு நேரத்தில் நடப்பதற்கேற்ப மின்விளக்கு வசதியையும் ஏற்படுத்த வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE