பொது செய்தி

தமிழ்நாடு

மாம்பலம் கால்வாய் சீரமைப்பு குளறுபடியில் மர்மம்: டெண்டரில் தாறுமாறாக விளையாடிய அதிகாரிகள்

Updated : டிச 05, 2021 | Added : டிச 05, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
விஜிலென்ஸ் விசாரணையில் உண்மை வெளியாகுமா?மாம்பலம் கால்வாயை துார் வாரி, சீரமைக்க, 13 ஆண்டுகளில் 200 கோடி ரூபாய் செலவழித்தும், தி.நகர் சுற்றுவட்டார பகுதி வெள்ளத்தில் தத்தளிப்பது பெரும் மர்மமாக உள்ளது. தற்போதைய சீரமைப்பு பணி டெண்டரிலும், அதிகாரிகள் தாறுமாறாக விளையாடி இருப்பது தெரிய வந்துள்ளதால், இது குறித்து விஜிலென்ஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதில்
மாம்பலம், கால்வாய், சீரமைப்பு, குளறுபடி, மர்மம், டெண்டர்,  அதிகாரிகள், விஜிலென்ஸ், விசாரணை, உண்மை, வெளியாகுமா?


விஜிலென்ஸ் விசாரணையில் உண்மை வெளியாகுமா?


மாம்பலம் கால்வாயை துார் வாரி, சீரமைக்க, 13 ஆண்டுகளில் 200 கோடி ரூபாய் செலவழித்தும், தி.நகர் சுற்றுவட்டார பகுதி வெள்ளத்தில் தத்தளிப்பது பெரும் மர்மமாக உள்ளது. தற்போதைய சீரமைப்பு பணி டெண்டரிலும், அதிகாரிகள் தாறுமாறாக விளையாடி இருப்பது தெரிய வந்துள்ளதால், இது குறித்து விஜிலென்ஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதில் பல்வேறு உண்மைகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, வள்ளுவர்கோட்டம், தி.நகர், மேற்கு மாம்பலம், பாண்டி பஜார் ஆகிய பகுதிகளில் இருந்து மழை நீர் வடியும் வகையில், மாம்பலம் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயை துார் வாரி சீரமைப்பதில் ஏற்பட்ட அலட்சியம் காரணமாக, சமீபத்திய மழைக்கு, தி.நகர், மாம்பலம் ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன.


ரூ.200 கோடி


இதையடுத்து, சீரமைப்பு பணி மேற்கொண்ட ஒப்பந்த நிறுவனங்கள், அப்பணிகளுக்கு பொறுப்பான மாநகராட்சி அதிகாரிகளிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 5.6 கி.மீ., நீளம் உடைய மாம்பலம் கால்வாய் துார் வாரி சீரமைக்கும் திட்டத்திற்காக, 2008ம் ஆண்டு முதல் தற்போது வரை, 200 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ள விபரம் வெளியாகி உள்ளது. இவ்வளவு தொகை செலவழிக்கப்பட்டும், தி.நகர், மாம்பலம் ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news
ஒன்பது பிரிவு


சென்னை 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், 106.77 கோடி ரூபாய் செலவில், மாம்பலம் கால்வாயை மேம்படுத்த ஒன்பது பிரிவுகளாக திட்டமிடப்பட்டது. ஒன்பதில், ஐந்து பிரிவுகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, பணி அனுமதி வழங்கப்பட்டது. மூன்று பிரிவுகளுக்கு 'டெண்டர்' வழங்கப்பட்டு, பணிகள் இதுவரை துவங்கப்படவில்லை. ஒரு பிரிவுக்கு திட்ட மதிப்பீடே தயார் செய்யப்படவில்லை.

கால்வாயின் துவக்கம் முதல், 2.3 கி.மீ., வரை, ஐந்து பிரிவுகளாக வழங்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு, கடந்த பிப்ரவரியில் பணி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. சட்டசபை தேர்தல், கொரோனா பெருந்தொற்று போன்ற காரணங்களால், பணி செய்யப்படவில்லை. ஜூன் மாதம் முதல் தான் பணிகள் துவங்கின. இந்த ஐந்து பிரிவுகளிலும், பணி செய்ய ஏதுவாக கால்வாயில் கட்டட கழிவுகள் கொட்டி, வாகனங்கள் செல்ல வழி செய்யப்பட்டது. அதே நேரத்தில், கால்வாயில் தண்ணீர் செல்ல, 1 மீட்டர் அளவில் இடம் ஒதுக்கி, ஒப்பந்ததாரர்கள் பணிகளை செய்து வந்தனர்.


23 செ.மீ., மழை


பணி நடந்து வந்த நிலையில், அக்., 25ம் தேதியில் இருந்து சென்னையில் கன மழை பெய்தது. நவ., 6ம் தேதி ஒரே நாளில், 23 செ.மீ., மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, மாநகரில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் மழை நீர் தேங்கியது. மாம்பலம், தி.நகர் பகுதிகளும் மூழ்கின.மாம்பலம் கால்வாய்க்கு ஒன்பது இடங்களில் மழை நீர் வடிகால் வாயிலாக இணைப்பு உள்ளது.

ஆனாலும், ஜி.என்., செட்டி சாலை வழியாக உள்ள இரண்டு மழை நீர் வடிகால் இணைப்பு வாயிலாகவே, அதிகளவில் கால்வாய்க்கு நீர்வரத்து இருந்தது. மற்ற இணைப்புகளில், அடைப்பு மற்றும் சேதம் காரணமாக, மழை நீர் கால்வாயில் விழவில்லை. இதுவே, பெருமளவில் பாதிப்பு ஏற்பட காரணமானது.
குறிப்பாக, பராசங்குபுரம், அஜிஸ் நகர், ரங்க ராஜபுரம், சுப்பிரமணிய தெருகளில் இருந்து வரும் நீர் அனைத்தும், ஜி.என்., செட்டி சாலையில் உள்ள, மழைநீர் வடிகாலுக்கு வந்தது. ஜி.என்., செட்டி சாலை மழைநீர் வடிகால், மாம்பலம் கால்வாயில் இருந்து, 1.5 மீட்டர் உயரம் உடையது. மாம்பலம் கால்வாயிலும், ஆங்காங்கே பணிகளுக்காக கட்டட கழிவுகள் கொட்டி தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்ததால், மாம்பலம் கால்வாயில் நீர் செல்லாமல் தேங்கி, பாதிப்பை ஏற்படுத்தியது.


யார் பொறுப்பு?


தி.மு.க., ஆட்சி அமைந்ததும், மாநகராட்சி கமிஷனராக இருந்த பிரகாஷ் மாற்றப்பட்டு, ககன்தீப் சிங் பேடி கமிஷனராக நியமிக்கப்பட்டார். அப்போது, கொரோனா சென்னையில் அதிகளவில் இருந்ததால், புதிய கமிஷனர், கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். கொரோனா கட்டுக்குள் வந்த பின்னரே, அவர் மற்ற வழக்கமான பணிகளில் ஈடுபட்டார். அதே போல, மழைநீர் வடிகால், சாலைகள், சிறப்பு திட்டம், ஸ்மார்ட் சிட்டி போன்ற துறைகளை கவனித்து வந்த அப்போதைய பொது தலைமை பொறியாளர் நந்தகுமார், செப்., 27ம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதில், மழை நீர் வடிகால், சாலைகள் போன்ற துறைகள், மற்றொரு தலைமை பொறியாளராக இருந்த ராஜேந்திரனுக்கு மாற்றப்பட்டதுடன், பொது தலைமை பொறியாளராகவும் நியமிக்கப்பட்டார். அதேபோல், கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், இளநிலை பொறியாளர்களும் மாற்றப்பட்டனர்.ஆட்சி மாற்றம், அதிகாரிகள் மாற்றம் காரணமாக மாம்பலம் கால்வாய் சீரமைப்பு பணி மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகளும் முடங்கியதே வெள்ள பாதிப்பிற்கு காரணம் என்கிறது மாநகராட்சி வட்டாரம்.


பணியிட மாற்றம்!


மாம்பலம் கால்வாயில், ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் பணி மேற்கொள்ளப்பட்டு, முடிக்கப்படாமல் இருந்தது. பல்வேறு இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கால்வாயை மாநகரில் அழகான நீர்வழித்தடமாக மாற்றும் வகையில், ஸ்மார்ட் சிட்டி திட்ட குழும அனுமதி பெற்று பணிகள் துவக்கப்பட்டன. இதற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டு, பூர்வாங்க பணி துவங்கி நடந்து வந்தபோதே, நான் பணியிட மாற்றம் செய்யப்பட்டேன்.- நந்தகுமார், தலைமை பொறியாளர், சென்னை மாநகராட்சி


தீர்வு காணப்படும்!


மழை நீர் வடிகால் துறையில், செப்., 30 முதல் தான் பணி மேற்கொள்ள துவங்கினேன். மாம்பலம் கால்வாய் பணிகளை பார்வையிட்டு, ஒப்பந்ததாரர்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கினேன். மழை பெய்தபோது பணியை நிறுத்தி, கால்வாய்களில் உள்ள கழிவுகளை அகற்ற ஒப்பந்ததாரர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்தோம். வரும் காலங்களில் மழை நீர் தேங்க காரணமானவற்றை கண்டறிந்து தீர்வு காணப்படும்.-
ராஜேந்திரன்,தலைமை பொறியாளர், சென்னை மாநகராட்சி


ஒப்பந்த பணிகளும், கான்ட்ராக்டர்களும்!


latest tamil news
மாம்பலம் கால்வாய் ஒப்பந்தம், பல்வேறு பணிகளை உள்ளடக்கியதாக இருந்தது. இதன்படி, ஐந்து ஒப்பந்ததாரர்கள் பணிகளை ஏற்றனர்.கால்வாய் துார் வாரி சீரமைக்கப்படுவதுடன், இருபுறங்களிலும் வெள்ளத்தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். வெள்ள தடுப்பு சுவரில் இருந்து, அரை மீட்டர் அல்லது ஒரு மீட்டர் இடைவெளி விட்டு, இரண்டு புறங்களிலும், 12 அடி உயரம் வரை தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும்.மேலும், 5.6 கி.மீ., நீளம் கால்வாய் முழுதும், கான்கிரீட் வாயிலாக மூடப்பட்டு, நடைபாதை, சைக்கிள் பாதை, குழந்தைகள் விளையாட்டு திடல் மற்றும் பசுமை பூங்காவாக மாற்ற வேண்டும். இதன்படி, ஐந்து ஒப்பந்ததாரர்களும், தங்கள் பகுதி கால்வாயில், கட்டட கழிவுகள் கொட்டி, வாகனங்கள் செல்ல வழி செய்தனர். பின், கால்வாயில் தண்ணீர் செல்ல, ஒரு மீட்டர் அளவில் இடம் ஒதுக்கி, பணிகளை செய்து வந்தனர்.மாம்பலம் கால்வாய் சீரமைப்பு பணி செய்த ஐந்து ஒப்பந்ததாரர்களுக்கும் இதுவரை பணம் விடுவிக்கப்படவில்லை. அவர்கள் சரியாக பணியாற்றவில்லை என, அதிகாரிகள் குற்றம் சாட்டுவதால், அவர்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும், கால்வாய் சீரமைப்பு திட்டமும் மறுவடிவம் பெற்று, கான்கிரீட் போட்டு கால்வாய் மூடப்படாது எனவும், மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


ஒப்பந்ததாரர்கள் சொல்வது என்ன?


latest tamil newsமாம்பலம் கால்வாய் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள் கூறியதாவது: சென்னையில் மற்ற இடங்களை போல், மாம்பலம் கால்வாய் பகுதியில் பணிகளை மேற்கொள்ள முடியாது. அருகிலேயே குடியிருப்புகள் இருப்பதால் பாதுகாப்பு தடுப்பு அமைத்த பின் தான் பணி மேற்கொள்ள வேண்டும். நவம்பர் வரை எங்களை பணியாற்ற அனுமதித்தனர். இதனால், கால்வாயில் இருந்த கட்டட கழிவுகளை அகற்ற முடியவில்லை. நீர் தேங்கிய பின் தான் கழிவுகள் அகற்றப்பட்டன. ஆனாலும், நீர் வடியவில்லை. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.மாம்பலம் கால்வாய் பணி, ஒன்பது பகுதியாக பிரிக்கப்பட்டது. இதில், ஐந்து பகுதிகளில் மட்டுமே பணிகள் துவங்கப்பட்டன. குறிப்பாக, நீர் அடையாறு ஆற்றில் சேரக்கூடிய பகுதிகளில் பணி செய்யப்படவில்லை. வள்ளூவர் கோட்டம் பகுதியில் இருந்தே பணி துவங்கியது. அங்கு, நாங்கள் துார் வாரி ஆழப்படுத்தி வைத்திருந்தோம். மாம்பலம் கால்வாயில் இருந்த கழிவுகள் அகற்றப்பட்ட பின்பும், மாம்பலம், தி.நகர் பகுதியில் மழைநீர் தேங்கியது. அனைத்து வடிகால்களையும் முறையாக துார் வாரமல், ஒட்டுமொத்த வெள்ள பாதிப்புக்கும் நாங்கள் தான் காரணம் என்பது போல் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


ரகசியம் காப்பது ஏன்?


மாம்பலம் கால்வாய் பணிகளை டெண்டர் எடுத்த ஐந்து ஒப்பந்ததாரர்களும், தற்போது 50 கோடி ரூபாய்க்கும் மேல், நடைபாதை, சாலை, மழைநீர் வடிகால், குளம் மேம்பாடு போன்ற பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.இந்த பணிகள் அனைத்தும் அ.தி.மு.க., ஆட்சி முடியும் நேரத்தில், இவர்களுக்கு ஒதுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அந்த பணிகளின் விபரங்களை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பொதுவாக, எந்த ஒரு சிறிய பணிகளுக்கும், பணியின் மதிப்பீடு, பணி செய்யும் ஒப்பந்ததாரர், பணி விபரம் ஆகியவற்றை குறிப்பிட்டு, அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், தகவல் பலகை வைக்க வேண்டும் என்பது விதி. ஆனால், அப்படி வைத்தால், எந்த முறைகேடு செய்தாலும் சிக்கிக் கொள்வோம் என்பதால், ஒப்பந்ததாரர்களும் தகவல் பலகை வைப்பதில்லை; அதிகாரிகளும் அதை ஆதரிப்பதில்லை.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
06-டிச-202103:53:53 IST Report Abuse
Bhaskaran மொத்தமும் ஸ்வாகா அதிகாரிகள் குடும்பம் பல்லாண்டு நன்றாக இருக்கவேண்டும்
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
05-டிச-202123:05:26 IST Report Abuse
Mohan தாறு மாறா தூரு வாரிருக்காங்க.
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
05-டிச-202122:22:39 IST Report Abuse
DARMHAR லஞ்ச ஒழிப்பு துறை கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்தால் கான்ட்ராக்டர்களுக்கு செம குஷி என்பதை தவிர வேறென்ன சொல்வது ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X