சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

ஆண்டுதோறும் தொடரும் அவலம்!

Updated : டிச 07, 2021 | Added : டிச 05, 2021 | கருத்துகள் (8) | |
Advertisement
ரமணா என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சி: ஊழல் செய்யும் அதிகாரிகளை தொடர் கொலைகள் செய்வான், கதாநாயகன். ஊழல்வாதிகளை அடையாளம் காட்டுவதற்காக, தனக்கு வேண்டப்பட்ட படித்த, நேர்மையான இளைஞர்களை ஒவ்வொரு அரசு துறை அலுவலகங்களிலும் வேலையில் அமர்த்தி, உளவு சொல்ல ஏற்பாடு செய்திருப்பான், கதாநாயகன்.கொலையாளிகளை கண்டுபிடிக்க காவல் துறை அதிகாரிகள் நட்சத்திர ஓட்டலில் கூட்டம்
 ஆண்டுதோறும் தொடரும் அவலம்!

ரமணா என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சி: ஊழல் செய்யும் அதிகாரிகளை தொடர் கொலைகள் செய்வான், கதாநாயகன். ஊழல்வாதிகளை அடையாளம் காட்டுவதற்காக, தனக்கு வேண்டப்பட்ட படித்த, நேர்மையான இளைஞர்களை ஒவ்வொரு அரசு துறை அலுவலகங்களிலும் வேலையில் அமர்த்தி, உளவு சொல்ல ஏற்பாடு செய்திருப்பான், கதாநாயகன்.
கொலையாளிகளை கண்டுபிடிக்க காவல் துறை அதிகாரிகள் நட்சத்திர ஓட்டலில் கூட்டம் போட்டு, வகை வகையான அசைவ உணவு மற்றும் வெளிநாட்டு சரக்கு சகிதம், உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை அவ்வப்போது நடத்தி காலம் கடத்துவர். அதற்குள் இன்னும் நான்கு கொலைகள் விழும். ஆட்சியாளர்களிடம் பதில் சொல்ல அப்பாவிகளை பிடித்து உலுக்கி எடுப்பர்.-இப்படி கதை செல்லும்...
அதுபோலத் தான் இருக்கிறது, பொதுப்பணித் துறையினரின் செயல்பாடுகள். சமீபத்தில் அவர்கள் கூறிய அதிமேதாவித்தனமான யோசனை தான், ரமணா திரைப்படத்தை நினைவுபடுத்தியது. அதாவது, 'ஏரி, குளங்களை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்களுக்கு பல வழிகளில் வருமானம் வருகிறது; நிறைய ஆட்களும் இருக்கின்றனர். இது குறித்து, முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும்' என்று திருவாய் மலர்ந்துள்ளனர் பொதுப்பணித் துறை உயரதிகாரிகள்.
சி.எஸ்.ஆர்., எனப்படும் சமூக பொறுப்பு நிதி, சென்னை நதிகளின் சீரமைப்பு அறக்கட்டளை, பிரதமர் நீர் பாசன திட்டம், எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களின் நிதி என பலமுனைகளில் இருந்து வரும் வருமானத்தை பயன்படுத்தி ஏரிகளை மேம்படுத்தலாம். அதற்கு ஏரிகளை மாநகராட்சியின் சொத்தாக மாற்ற வேண்டும் என்ற கருத்து பேசப்பட்டு வருகிறது. இதையும் கெட்டியாக பிடித்துக் கொண்டனர்.
வெள்ள பாதிப்புக்கு அதிக மழை தான் காரணம் என்று ஒரு, 'ஸ்டேட்மென்ட்' விடுத்து, ஆரம்ப புள்ளியிலேயே தான் இன்னமும் நின்று கொண்டுள்ளனர்.திரைப்படத்தில் குற்றவாளிகளை தேடி கண்டுபிடிப்பர். ஆனால் இங்கு, எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற ரீதியில், தானே வந்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நீர்நிலைகளை பாதுகாக்காதது, ஆக்கிரமிப்பு மற்றும் முறையான பராமரிப்பும் இல்லாததும் தான் வெள்ள பாதிப்புக்கு மூல காரணம் என்று, ஏரிகளை இத்தனை காலமும் தங்கள் பொறுப்பில் வைத்திருந்த பொதுப்பணி துறையினருக்கு தெரியாதா?தங்களது அதிகார துஷ்பிரயோகத்தை மறைக்கவும், பொறுப்பை தட்டிக்கழிக்கவும் தான் மேற்கூறிய யோசனையை தெரிவித்துள்ளனர்.
இதை, 2015ல் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போதே செய்திருக்க வேண்டியது தானே. ஆறு ஆண்டுகள், பொறுப்பை யார் தலையில் சுமத்தலாம் என்று சிந்தித்தனரோ?ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் வருகிறது; மழை, வெள்ளத்தால் பல பகுதிகள் மூழ்கவே செய்கின்றன. அப்போதெல்லாம் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் வரிந்து கட்டி, பாதுகாப்புடன் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு 'விசிட்' அடித்து, புகைப்படத்துக்கு 'போஸ்' கொடுத்து, 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நிவாரண உதவிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன...' என்று எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் செய்து, ஒப்பித்து விட்டு சென்று விடுகின்றனர்.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவெனில், கணுக்கால் அளவுக்கு தேங்கியுள்ள தண்ணீரில் படகில் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறிய கூத்தும் நடைபெற்றது; ஆனால், நிரந்தர தீர்வு தான் ஏற்படுவதில்லை.பல தொலைக்காட்சி சேனல்களும், தங்கள் பங்குக்கு அடாத மழையிலும் கொடாகண்டர்களாக, மழை நிலவரத்தை சுட்டிக்காட்டுவதாக பம்மாத்து செய்து, பாதிக்கப்பட்ட மக்களிடம் பேட்டி எடுத்து ஒளிபரப்பி, தங்கள் 'ரேட்டிங்கை' ஏற்றிக் கொண்டது தான் மிச்சம்.
தற்போதைய சென்னை மாநகராட்சி விரிவாக்கத்துக்கு முன், 400 ஏரி, குளங்கள் இருந்ததாக 1909 - -1970 வரையிலான அரசு ஆவண வரைபடம் தெளிவாக குறிப்பிட்டு உள்ளது. ஆனால், இப்போதோ சென்னை மாநகராட்சியில் வெறும் 30 ஏரிகள் மட்டுமே உள்ளன; அதுவும் சுருங்கியுள்ளதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது. இதை, 'கூகுள்' மேப்பும் சுட்டிக்காட்டியது நினைவிருக்கலாம்.மற்ற ஏரி, குளங்கள் என்னவாயிற்று?
பொதுப்பணித்துறை, வருவாய் துறை உள்ளிட்ட இதர அரசு துறைகள் பராமரிப்பில் இருந்த, 368 நீர் நிலைகள் இருந்த தடம் கூட தெரியாமல் அழிக்கப்பட்டு விட்டன.ஏரிகள், குளங்கள் மீது பெரிய கட்டடங்கள் கட்ட அனுமதி அளித்து, ஆக்கிரமிப்புக்கு துணை போனது யார்? மழை வெள்ளம் ஊருக்குள் புகுந்து, பிரச்னை ஏற்பட்டதும், ஏரிகளை பராமரிக்கும் பொறுப்பை மாநகராட்சியிடம் விட வேண்டும் என்று கூறுவது, இவர்களது நரித்தனத்தையே காட்டுகிறது.
'நல்லாயிருக்கய்யா உங்க ஞாயம்...' என்று, நடிகர் வடிவேலு 'ஸ்டைலில்' கூறி, சமூக வலைதளங்களில் 'மீம்ஸ்' போட்டு ஆறுதல்பட்டு கொள்ள வேண்டியது தான்.இனியாவது பதவியில் உள்ளவர்கள் விழித்து, நம் முன்னோர்களின் நீர் மேலாண்மையை சற்று திரும்பி பார்க்க வேண்டும்.
இன்னொன்றையும் இங்கே கூற விரும்புகிறேன்...ஏரியும், குளங்களும், மலைகளும் சூழ்ந்த அழகிய சிற்றுார் தான் என் பூர்வீகம். பல ஏக்கர் பரப்பளவு கொண்டதும், 18 பட்டிகளுக்கு நீர் வளத்தை வாரி வழங்கிய ஏரியின் இன்றைய நிலை பரிதாபமானது.பல ஆண்டுகளாக துார் வாரப்படாமல், ஆக்கிரமிப்புகளால் சுருங்கியதோடு, கோடை காலத்தில் வறண்டும், பொலிவு இழந்தும் காணப்பட்ட அந்த ஏரியை, மக்களின் பங்களிப்புடன் துார் வாரி, கரைகளை உயர்த்தி கட்டி, சீராக பராமரிக்க நல்லெண்ணம் கொண்ட ஒரு சமூக சேவை நிறுவனம் அரசிடம் அனுமதி கோரியது.
ஆனால், 'கமிஷன் பார்ட்டிகள்' கல்லா கட்ட முடியாதே என்று, தனியார் அமைப்புக்கு வழி விடாமலும், அரசு இயந்திரத்தை செயல்பட விடாமலும், சூழ்ச்சி செய்து முட்டுக்கட்டை போட்டு விட்டது.விளைவு, சமீபத்தில் பெய்த மழை நீர், ஏரியில் தங்க முடியாமல் ஊருக்குள் பாய்ந்து, சின்னாபின்னமாக்கி விட்டது. எம் முன்னோர்களும், என் தந்தையும், தாயும் குலாவி மகிழ்ந்த, சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்த்த ஊர் என்று தினம் எண்ணி மகிழ்ந்த என் ஊரின் இன்றைய நிலையை பார்த்து கண்கள் கலங்குகின்றன.
வருங்காலத்திலாவது இது போன்ற துயரங்கள் ஏற்படாமல் இருக்க, அரசு முனைப்புடன் செயல்படுமா? மக்களும், அரசுடன் ஒத்துழைத்து தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்சொல்லணும் வல்லது அமைச்சு
இந்த திருக்குறள் செய்யுளின் பொருள்: செய்யத்தக்க செயலை ஆராய்தலும், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும், துணிவான கருத்தை சொல்லுதலும் வல்லவனே அமைச்சன்.எல்லா வளங்களும் பெற்றிருந்தும், தண்ணீரை சேமித்து வைக்க, வகை செய்ய தவறி, கோடை காலத்தில் அண்டை மாநிலத்திடம் கையேந்தி பிச்சை எடுப்பதும் தொடர்கதையாக உள்ளது.இதற்கு முடிவு கட்டினால், வருங்கால சந்ததியினர் வாழ்த்துவர். செய்வரா?
சித்திரைச்செல்வி
சமூக ஆர்வலர்
தொடர்புக்கு:
இ - மெயில்: sel.dharam@gmail.com

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan - Coimbatore ,இந்தியா
06-டிச-202114:45:43 IST Report Abuse
Krishnan என்ன பண்ண போறீங்க, Simply say celebrate பண்ணுங்க, இந்திய சட்டத்துல பெரிய ஓட்டை இருக்குமா, போக்சலே வெளில வர்ணாம். அப்புறம் என்ன........
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
06-டிச-202114:21:24 IST Report Abuse
sankaseshan தமிழ்நாட்டுக்கு கிடைத்த தண்டனை 50 ஆண்டுகால திராவிட ஆட்சி மக்கள் தாங்களே தங்கள் தலையில் மண்ணைவாரி போட்டுக்கொண்டார்கள்
Rate this:
Cancel
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
06-டிச-202110:33:32 IST Report Abuse
Mirthika Sathiamoorthi சென்னையின் வெள்ளப் பிரச்சனை இன்னும் 10 ஆண்டுகளுக்கு தீர்க்கப்படாது... இது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தெரியும் படகு விட்ட அண்ணாமலை உட்பட.... இருந்தும் திமுகவென்னு கூவுவோம் அதுதானே அரசியல்...ஏன் தீர்க்கப்படாது? கடல் மட்டத்திற்கு மிக அருகில் உள்ள பகுதியில் விவசாய நடவடிக்கைகளுக்கு ஆயிரக்கணக்கான பெரிய மற்றும் ஆழமற்ற ஏரிகள் தொண்டப்பட்டது. மழைநீர் அங்கே சென்று வடிய அமைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக நகரத்தின் அளவு வளர்ந்தது தென் சென்னை போன்ற பல இடங்கள் தாழ்வான பகுதிகள் மற்றும் ஈரநிலங்களாக விரிவடைந்தது. அடையாறு ஆற்றின் வெள்ளப்பெருக்கு மற்றும் பிற ஓடைகளை நகர்ப்புறங்களாக மாற்றியது, குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளுக்கு இடமளித்தது. இன்று, இந்த வளாகங்களில் பலவற்றை காலி செய்ய இயலாது..அப்படியே காலிசெய்யணும்ன்னா அவர்கள் நீதிமன்றம் போயி தடையாணை வாங்கிடுவானாக..அந்த கேஸ் முடிய பத்துவருசத்துக்கு மேலாகும்... எப்புடி என் வீடு தண்ணிவராம எனக்கு வேணும் அவனை காலிசெயுங்கன்னு நாம சொன்ன, அவன் உன் வீட்டை காலிபண்ணிட்டு ஓடிப்போயிடும்பங்க. சென்னையில் இயற்கையாய் மழை நீர் வடியாதபோது, செயற்கையான உள்கட்டமைப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். இருப்பினும், நகரின் தெருக்கள் மற்றும் மழைநீர் வடிகால்களின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் மிகவும் மோசமான தரத்தில் உள்ளன, மேலும் அவை நகரத்திற்கு எந்த விதத்திலும் உதவவே இல்லை.ஒரு காலத்தில் விவசாய நிலங்களுக்கு இடையகமாக சேவையாற்றிய செயற்கை ஏரிகளை எந்த அரசாங்கமும் மறுசீரமைத்து மறுவடிவமைப்பு செய்திருக்க முடியும். இருப்பினும், அவற்றில் பல தொலைந்துவிட்டன அல்லது நிறைய கழிவுநீரைக் சேகரிக்கும் இடமாக கொண்டிருக்கின்றன. எனவே, அவை buffers ஆக செயல்படும் திறன் குறைவாக உள்ளது. சென்னை நகரின் மாஸ்டர் பிளானோ அல்லது நகரத்தின் பேரிடர் மேலாண்மை திட்டமோ இந்த பிரச்சனைகளை அறிவியல் பூர்வமாக கையாளவில்லை. பேரிடர் மேலாண்மை திட்டம், ( 2017 தேதியிட்டது) சில நிலையான இயக்க நடைமுறைகளைக் கொண்டுள்ளது அவ்வளவே. இருப்பினும், நகரத்தின் நீர் ஆதாரங்களைப் பற்றி விரிவான, இருப்பிடம் சார்ந்த செயல் திட்டங்கள் அல்லது அவற்றை அடைவதற்கான எந்த roadmaps இல்லை. சென்னையின் வெள்ளப் பிரச்சினைக்கான தீர்வு தொழில்நுட்ப வெற்றியில் மட்டும் சாத்தியம் இல்லை மாறாக சிறந்த நிர்வாகத்தில் உள்ளது. ஆறு ஆண்டுகளாக, நகரத்திற்கு மேயர் அல்லது கவுன்சிலர்கள் இல்லை..அப்புறம் அதிகாரிகள் யாரின் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுப்பார்கள்? அதனை அதிகாரிகளும் சென்னையில் வசிப்பவர்கள் தாங்கள் இருக்கும் ஏரியாவில் வெள்ளம்வந்தாலும் ஒன்னும் பண்ணமுடியாத சூழலில்? தெரு வடிவமைப்புகளை புதுப்பித்தல், அறிவியல் பூர்வமாக வடிவமைத்து மழைநீர் வடிகால்களை உருவாக்குதல் மற்றும் இரண்டையும் முறையாகப் பராமரித்தல் ஆகியவை கோடிக்கணக்கான ரூபாய் செலவாகும் மற்றும் பல ஆண்டுகளாகும் அதற்கான நிலத்தடி வேலைகள் முடிய - அந்த வேலையாட்களை நாம் இன்று தொடங்கினாலும் கூட. இதனால் அடுத்த 10 ஆண்டுகளில் சென்னையின் வெள்ளப் பிரச்னை தீர்ந்துவிடாது. தீர்க்கவும் முடியாது.. 2011 இலிருந்து 2021 வரை இருந்த அதிமுக இதை செய்திருந்தால் இந்த பிரச்சனையே இந்நேரம் பாதியளவு நமக்கு சாதகமாக முயற்சித்திருக்கலாம்..2015 இல் தானே இந்த பிரச்னை பூதகிரமாக வெடித்தது. அப்புறம் அம்மாவின் மரணம் ஆட்சி குழப்பம்ன்னு தள்ளிப்போயிடுச்சு...முடிஞ்சு போன ஓன்று, அதை பேசவேண்டாம்... இனிவரும் 10 ஆண்டுகளில், சென்னை ஒப்பீட்டளவில் மிகவும் பாதுகாப்பானதாகவும், வாழக்கூடியதாகவும் இருக்கும் வகையில் - குறைந்தபட்சம் இந்த ஆட்சியிலாவது - ஒரு long-term roadmap தயாரிக்கப்படும் என நான் நம்புகிறேன். அது நடக்கத்தவரை ஊரே தண்ணியில் மிதந்துகொண்டு இருக்கும்..யார் ஆட்சிக்குவந்தாலும் இதே நிலை..இதை வச்சுக்கிட்டு யார் வேணும்னாலும் ஆளும் அரசை குறைகூறலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X