நண்பர்கள் வந்ததும் அனைவருக்கும் இஞ்சி டீ கொடுத்தார், நாயர்.''ஆளுங்கட்சியினர் அடாவடி வசூல் வேட்டையில இறங்கிட்டாவ வே...'' என்றபடி பெஞ்சில் அமர்ந்தார், அண்ணாச்சி.
''அதெல்லாம் இனி நடக்கும்... நீங்க விஷயத்தை சொல்லுங்க...'' என, டீயை உறிஞ்சியபடியே கேட்டார், அந்தோணிசாமி.
''சென்னையில, 'தி.மு.க. கோட்டை'ன்னு சொல்ற இடங்கள்ல, எழும்பூர் சட்டசபை தொகுதி முக்கியமானது வே...''அங்கே, எம்.எல்.ஏ., பெயரை சொல்லி ஒரு கும்பல், ஒவ்வொரு மாதமும் பெட்டி கடையில ஆரம்பிச்சு, பெரிய ஓட்டல் வரைக்கும் போயி, வசூல் வேட்டை நடத்துதாவ வே...
''போதாக்குறைக்கு முதல்வரின் மகன் பெயரையும் சொல்லி, அடிக்கடி நிதி வசூல் பண்ணுதாவ...
இப்படியே போனா, எழும்பூர்ல நிம்மதியா தொழில் செய்ய முடியாதுன்னு வியாபாரிகள் புலம்புதாவ வே...'' என விஷயத்தை கொட்டினார் அண்ணாச்சி.
அப்போது, ''விஜயகுமார் வந்தால் பணம் ஏதும் கொடுக்காதீங்க நாயர்...'' என அறிவுறுத்தினார், அந்தோணிசாமி.
''ஆட்சி மாறியும் காட்சி மாறலையேன்னு புலம்புறாங்க பா...''என, அடுத்த தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.
''இந்த புலம்பல் எல்லா இடத்துலயும் கேட்கறது... நீர் எதை சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''கடந்த ஆட்சியில, போக்குவரத்து கழக சேலம் மண்டலத்துல இருக்குற 17 பணிமனைகள்ல, 340 பேர் அண்ணா தொழிற்சங்கத்துல உறுப்பினர்களாக இருந்தாங்க... ''அந்த தொழிற்சங்க நிர்வாகிகள் பலர், பணிக்கு போகாமலேயே சம்பளம் வாங்கினாங்க பா...
''ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், அண்ணா தொழிற்சங்கத்துல இருந்த 240 பேர், தி.மு.க., ஆதரவு பெற்ற தொ.மு.ச.,வுக்கு மாறிட்டாங்க பா...''அதனால அவங்க, இப்பவும் வேலை பார்க்காமலேயே சம்பளம் வாங்குறாங்க... வேலை பார்க்காமல் இருப்பவங்களுக்கு மாதம்தோறும், 1.5 கோடி ரூபாய் சம்பளம் போகுது பா...
''கூடுதல் பணி சுமையுடன் இருக்கும் தொழிலாளர்கள், 'ஆட்சி மாறியும் காட்சி மாறலையே'ன்னு புலம்புறாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
''ஒரு வழக்குக்கு, 1 கிராம் தங்கம்ன்னு மாமூல் கொடுக்கணுமாம் ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.
''பணத்துல இருந்து தங்கத்துக்கு முன்னேறிட்டாங்களா... நீங்க விஷயத்தை சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''குற்ற வழக்குகளை கையாள்ற அரசு நிர்வாகத்துல வேலை செய்யற, 'அம்சமான' பெண் அதிகாரிக்கு மதுரை, கோவை உட்பட எட்டு மாவட்டங்களுக்கு பொறுப்பு குடுத்துருக்கா ஓய்...
''அந்த பெண் அதிகாரி கோவையில தங்கி, அரசு தரப்பு வழக்குகளுக்கு ஒப்புதல் கொடுக்கறாங்க... அது தான், அவங்களோட கடமை... ஆனாலும், ஒரு வழக்குக்கு 1 கிராம் தங்கம்ங்கற கணக்குல, மாமூல் தந்தால் தான் ஒப்புதல் தருவாங்களாம் ஓய்...
''குற்ற வழக்குல சிக்கிய எதிரியிடம், போலீஸ் தரப்புல, 'கோட்டை' விட்ட விஷயங்களையும் எடுத்துச் சொல்லி, அதுக்கும் பொற்காசுகளை குவிக்கறாங்களாம்... ''இவாளுக்கு, உயர் பெண் அதிகாரி ஒருவரின் ஆதரவும் இருக்கறதால, தங்க மழையில நனையறாங்க ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''ஒமைக்ரான் வைரசை கூட ஒழிச்சிடலாம்... இந்த லஞ்சத்தை ஒழிக்கவே முடியாதுங்க...'' என்றபடியே அந்தோணிசாமி கிளம்ப, நண்பர்களும் இடத்தை காலி செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE