இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்: சிறுமிக்கு நான்காவது திருமணம்; 13 பேர் மீது வழக்கு| Dinamalar

இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்': சிறுமிக்கு நான்காவது திருமணம்; 13 பேர் மீது வழக்கு

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (2)
இந்திய நிகழ்வுகள்சிறுமிக்கு நான்காவது திருமணம் : 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவுஅவுரங்காபாத்-சிறுமிக்கு நான்காவது திருமணம் செய்து வைக்க முயன்ற புகாரில், அவரது தாய் உட்பட 13 பேர் மீது மஹாராஷ்டிரா போலீசார் வழக்கு பதிவு செய்துஉள்ளனர்.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள
இன்றைய, கிரைம், ரவுண்ட், அப்


இந்திய நிகழ்வுகள்சிறுமிக்கு நான்காவது திருமணம் : 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

அவுரங்காபாத்-சிறுமிக்கு நான்காவது திருமணம் செய்து வைக்க முயன்ற புகாரில், அவரது தாய் உட்பட 13 பேர் மீது மஹாராஷ்டிரா போலீசார் வழக்கு பதிவு செய்துஉள்ளனர்.

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள அவுரங்காபாத் மாவட்டம் போக்ரடன் பகுதியை சேர்ந்த, ௧௭ வயது சிறுமியிடமிருந்து போலீசாருக்கு ஒரு புகார் வந்தது.மூன்று முறை திருமணம்அதில் அந்த சிறுமி கூறியுள்ளதாவது:எனக்கு ௧௭ வயதாகிறது. என் தாயும், சகோதரர்களும் சேர்ந்து கடந்த இரண்டு ஆண்டுக்குள் மூன்று முறை எனக்கு திருமணம் செய்து வைத்தனர்.

ஆனால் என் கணவர்களிடமிருந்து பிரிந்து வந்துவிட்டேன். இப்போது நான்காவது முறையாக எனக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் சிறுமியின் வீட்டிற்கு விரைந்து சென்றனர். ஆனால் சிறுமியின் தாயும், சகோதரர்களும் தலைமறைவாகிவிட்டனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: சிறுமிக்கு ஏற்கனவே மூன்று முறை திருமணம் நடந்துள்ளது.

முதல் முறை திருமணம் நடந்த பின், ஒரு மாதத்தில் தாய் வீட்டுக்கு திரும்பிய சிறுமி, கணவன் வீட்டுக்கு செல்ல மறுத்துள்ளார். இதையடுத்து சிறுமிக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளனர். சில நாட்களிலேயே தாய் வீட்டுக்கு திரும்பிய சிறுமிக்கு, மூன்றாவது முறையாக திருமணம் செய்துஉள்ளனர். இப்போது ஒரு ஆண்டு கழித்து வீடு திரும்பிய சிறுமி, மூன்றாவது கணவரின் வீட்டுக்குச் செல்ல மறுத்துவிட்டார்.போலீசில் புகார்இதையடுத்து நான்காவது முறையாக திருமணம் செய்து வைக்க சிறுமியின் தாயும், சகோதரர்களும் முயற்சித்துஉள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியை அடித்து உதைத்துள்ளனர். தோழியின் உதவியுடன் போலீசில் சிறுமி புகார் செய்துள்ளார். மூன்று திருமணத்திலும் மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்து லட்சக்கணக்கில் சிறுமியின் தாயும், சகோதரர்களும் பணம் வாங்கிஉள்ளனர்.இவ்வாறு போலீசார் கூறினர். சிறுமியின் தாய், சகோதரர்கள், அவரது மூன்று கணவர்கள் உட்பட ௧௩ பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவான அவர்களை தேடி வருகின்றனர்.

5 மகள்களை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை

ஜெய்ப்பூர்-ராஜஸ்தானில் கணவருடன் ஏற்பட்ட தகராறால் ஐந்து பெண் குழந்தைகளை கிணற்றில் வீசிய தாய், தானும் தற்கொலை செய்தார்.ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

இங்கு கோட்டா மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஷிவ்லால் பஞ்சாரா. போர்வை மற்றும் துணி வியாபாரம் செய்து வருகிறார்.இவரது மனைவி பாதம்தேவி, 40. இந்த தம்பதிக்கு, 1 - 14 வயது வரையிலான ஏழு பெண் குழந்தைகள் இருந்தனர். பாதம் தேவிக்கும், அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் பாதம் தேவி விரக்தியில் இருந்து உள்ளார்.நேற்று முன்தினம் இரவு உறவினர் வீட்டில் நடந்த துயர நிகழ்ச்சியில் பங்கேற்க ஷிவ்லால் சென்று விட்டார்.

அப்போது, 1 வயதான மகள் அர்ச்சனா மற்றும் மேலும் நான்கு பெண் குழந்தைகளை வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் துாக்கி வீசிய பாதம்தேவி, தானும் குதித்து தற்கொலை செய்தார். பொதுமக்கள் தகவலை தொடர்ந்து, கிணற்றில் மிதந்த உடல்களை போலீசார் மீட்டனர். மேலும் இரு மகள்கள் வீட்டில் துாங்கியதால் உயிர் தப்பினர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தமிழக நிகழ்வுகள்

சிவகாசி அருகே பஸ் மோதி இருவர் பலி

சிவகாசி-சிவகாசி அருகே டூவீலரில் அரசு பஸ் மோதியதில் இருவர் பலியாகினர்.சிவகாசி பேர்நாயக்கன்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் அட்டை கம்பெனி தொழிலாளி குமார் 31. இதே பகுதியைச் சேர்ந்தவர் கட்டட தொழிலாளி பொன்னு பாண்டியன் 25. இருவரும் நேற்றிரவு 7:30 மணிக்கு டூவீலரில் மது போதையில் 'ஹெல்மெட் அணியாமல் சிவகாசி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.அப்போது சிவகாசியில் இருந்து ஏழாயிரம்பண்ணை சென்ற சித்து ராஜபுரம் ராதாகிருஷ்ணன் 50, ஓட்டிய அரசு பஸ், சித்துராஜபுரம் சசி நகர் அருகே சென்றபோது டூவீலரில் மோதியது. இதில் பொன்னுபாண்டியன் சம்பவ இடத்திலேயே பலியானார். குமார், சிவகாசி அரசு மருத்துவமனையில் இறந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


latest tamil news


விசாரணைக்கு சென்ற கல்லுாரி மாணவர் சாவு போலீசை கண்டித்து முதுகுளத்துாரில் மறியல்

முதுகுளத்துார்--முதுகுளத்துார் அருகே, போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கல்லுாரி மாணவர் வீட்டில் உயிரிழந்தார்.

போலீஸ் தாக்கியதில், அவர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் அருகே நீர்க்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணகுமார் மகன் மணிகண்டன், 21; கோட்டைமேடு அரசு கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.இவர் நண்பர்கள் இருவருடன், நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு, பரமக்குடியில் இருந்து கீழத்துாவலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

கீழத்துாவல் போலீஸ் ஸ்டேஷன் அருகே, வாகன சோதனையில் நிற்காமல் சென்றதால், போலீசார் விரட்டியதில் இருவர் இறங்கி தப்பினர். மணிகண்டனை மட்டும் விசாரணைக்கு ஸ்டேஷன் அழைத்து சென்று, இரவு 7:30 மணிக்கு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில், நேற்று அதிகாலை 1:00 மணிக்கு வீட்டில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மணிகண்டன் உயிரிழந்தார்.

போலீசார் தாக்கியதில் தான் அவர் உயிரிழந்ததாகக் கூறி, முதுகுளத்துார் - பரமக்குடி சாலையில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தியதை அடுத்து, கலைந்து சென்றனர்.மணிகண்டன் தம்பி அலெக்ஸ் கூறுகையில், ''வீட்டிற்கு வந்த மணிகண்டன், தன்னை போலீசார் தாக்கியதாக கூறினார். போலீசார் அடித்ததில் தான் மணிகண்டன் உயிரிழந்தார். எனவே எஸ்.பி., விசாரணை செய்து சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.கீழத்துாவல் போலீஸ் ஸ்டேஷனில், விசாரணைக்காக மணிகண்டன் வந்து செல்லும் 'சிசிடிவி' பதிவுகள் உள்ளன. 'பிரேத பரிசோதனை முடிவு வந்த பின், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என போலீஸ் தரப்பில் கூறுகின்றனர். மணிகண்டன் பிறந்த நாளில் உயிரிழந்தது, உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் தொல்லை ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

ராமநாதபுரம்--சக ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.ராமநாதபுரம் அருகே, சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆறு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வரலாறு பாடம் நடத்தியவர் சந்திரன், 52. இவர், சக ஆசிரியைக்கு ஆபாச செய்திகளை அனுப்பி, பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.புகாரின்படி, சத்திரக்குடி போலீசார் சந்திரனை கைது செய்து, பரமக்குடி கிளை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சந்திரனை சஸ்பெண்ட் செய்து, முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து உத்தரவிட்டுள்ளார்.


latest tamil news


வீடுகளில் கைவரிசை: 'பலே' ஆசாமிகள் கைது

திருப்பூர்:தாராபுரத்தில் வீடுகளில் கைவரிசை காட்டி வந்த, 'பலே' ஆசாமிகளை கைது செய்து டூவீலர், மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.தாராபுரம், காந்தி நகர் - அலங்கியம் ரோட்டை சேர்ந்தவர் குபேந்திரன், 24. இவர் வீட்டு முன் நிறுத்தியிருந்த டூவீலர் மாயமானது. வீட்டுக்குள் இருந்த, நான்கு மொபைல் போன்கள் திருட்டு போனது. புகாரின் பேரில், தாராபுரம் போலீசார் விசாரித்தனர்.இதுதொடர்பாக, தனிப்படை போலீசார், இருவரை பிடித்து விசாரித்தனர். மதுரையை சேர்ந்த யாசின் முகமது, 24 மற்றும் சென்னையை சேர்ந்த அசோக், 24 என்பது தெரிந்தது. இருவரும் திருட்டில் ஈடுபட்டனர். திருப்பூருக்கு வந்த அசோக்குக்கு, யாசின் முகமது உடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் மதுரைக்கு செல்லும் வழியில், திருட்டில் ஈடுபட்டனர். யாசின் முகமது மீது, 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X