மதுரை: மதுரை ஆவினில் தற்காலிக ஊழியர்களுக்கு இரண்டு மடங்கு சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து தனி அலுவலரான கலெக்டர் அனீஷ்சேகர் விசாரிக்க ஓய்வு பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
ஆவினில் கொள்முதல், பதப்படுத்துதல், பாலை பாக்கெட்டில் அடைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர். நவம்பரில் 250 பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 350 - 450 வரை சம்பளம் நிர்ணயிக்க வேண்டும். திண்டுக்கல், தேனி, விருதுநகர் ஆவினில் இந்தளவு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் மதுரையில் மட்டும் இரண்டு மடங்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ஆவின் ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ஆவினுக்கு தற்காலிக பணியாளர்கள் 150 பேர் போதுமானதாக இருந்த நிலையில் 250 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் இதற்கான ஒப்பந்தங்களை பெற்றுள்ளனர். ஒரு நாள் சம்பளமாக ரூ.715 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆவின் வரலாற்றில் இந்தளவு வழங்கியதில்லை. இதனால் ஆவினுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வருகை பதிவில் பெயர் உள்ள பலர் ஆவினுக்குள் இருப்பது இல்லை. போலி பெயர்களில் பில் எடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கலெக்டர் அனீஷ்சேகர் இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றனர்.
இரு பொது மேலாளர்களா
பொது மேலாளராக இருந்த கருணாகரன் நவ.,18ல் மாற்றப்பட்டார். நவ.,24ல் பொது மேலாளராக சாந்தி பொறுப்பேற்றார். தற்காலிக ஊழியர் நியமனம் உள்ளிட்ட பல ஆவணங்களில் அலுவலர்கள் கருணாகரனிடம் முன்தேதியிட்டு கையெழுத்து பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரு பொது மேலாளர்களா என கேள்வி எழுந்துள்ளது.
பொது மேலாளர் சாந்தி கூறுகையில், “டிரான்ஸ்பர் ஆன பின் மருத்துவ சிகிச்சைக்காக சில நாட்கள் ஆவின் குடியிருப்பில் தங்க கருணாகரன் அனுமதி கேட்டதால் குடியிருப்பை காலி செய்யவில்லை. முன்தேதியிட்டு கையெழுத்திடும் பிரச்னை என் கவனத்திற்கு வரவில்லை,” என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE