சென்னை: அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
அ.தி.மு.க.,வில் ஜெயலலிதா மறைவுக்கு பின், பொதுச்செயலர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும்; இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர். இப்பதவிக்கு உரியவர்களை, கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யும் வகையில், கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து சிலர் நீதிமன்றம் சென்றனர்; வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இம்மாதம் 1ம் தேதி கட்சியின் செயற்குழு கூட்டம், தலைமையகத்தில் நடந்தது. அதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை ஓட்டு முறையில், இணைந்தே தேர்வு செய்யும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும், நேற்று முன்தினம் அப்பதவிகளுக்கு இணைந்தே மனு தாக்கல் செய்தனர். நேற்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்த நிலையில், வேட்பு மனுவை வாபஸ் பெறும் கால அவகாசம் இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது.

இதையடுத்து, ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் குறித்து அறிவிப்பை அ.தி.மு.க., உட்கட்சி தேர்தலுக்கு தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள பொன்னையன் வெளியிட்டார். அதன்படி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் போட்டியிட வேண்டி, ஒரே ஒரு மனு மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இருவரும் அப்பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக பொன்னையன் அறிவித்தார். பின்னர், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோருக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE