சென்னை :அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது என தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.ஓசூரை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனு:
ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, அவசரமாக செயற்குழுவை கூட்டி, 13 தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் தொடர்பாக, விதிகளில் திருத்தம் ஏற்படுத்தி உள்ளனர்.தேர்தலுக்கு முன் 21 நாட்கள் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்ற விதியை புறக்கணித்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய, யாருக்கும் சந்தர்ப்பம் அளிக்கக் கூடாது என்ற நோக்கில் செயல்பட்டுள்ளனர்.
தேர்தல் கமிஷனில் பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமிக்கு எதிராக புகார் அளித்துள்ளேன்; எந்த நடவடிக்கையும் இல்லை.கடந்த 4ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய முயற்சித்தேன். கட்சி அலுவலகத்துக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டேன். வேட்புமனு தாக்கல் செய்ய விரும்பிய பலரும் தடுக்கப்பட்டனர்; தாக்கப்பட்டனர். மற்றவர்கள் வேட்புமனு தாக்கல் செய்து விடக்கூடாது என்பது தான் இவர்களின் நோக்கம்.
தேர்தல் அறிவிப்பில் தேவையான விபரங்கள் இல்லை. வேட்புமனு கட்டணம் பற்றி குறிப்பிடவில்லை; வாக்காளர் பட்டியல் வெளியிடவில்லை.
இரண்டு பதவிகளுக்கு ஒரே ஓட்டு சீட்டு என்பதற்கு சட்டத்தில் இடமில்லை; தேர்தல் நடக்கும் இடம் அறிவிக்கப்படவில்லை.போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதே இருவரின் விருப்பம். எனவே, தேர்தல் முடிவை அறிவிக்க தடை விதிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வுக்கு, தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொன்னையன், ஜெயராமன் பதில் அளிக்க உத்தரவு
ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றிய அ.தி.மு.க., மாணவர் அணி முன்னாள் பொருளாளர் சி.பாலகிருஷ்ணன். இவர், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:விதிகளை முறையாக பின்பற்றாமல், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யவும், தேர்தல் முடிவுகளை வெளியிடவும் தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டது. இந்த வழக்கு, உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மணிமேகலை முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வாதிடப்பட்டது.அ.தி.மு.க., தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் விஜய் நாராயணன் மற்றும் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, 'கட்சி உறுப்பினர் அல்லாத ஒருவர் வழக்கு தொடர உரிமையில்லை. பன்னீர்செல்வம், பழனிசாமி இருவரும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டனர்' என்றனர்.விசாரணைக்கு பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு விட்டது. அவர்கள் நடவடிக்கைகளில் ஏதேனும் குறைகள் இருந்தால், நீதிமன்றத்தை மனுதாரர் அணுகலாம். மனு தொடர்பாக, அ.தி.மு.க., மற்றும் தேர்தல் கமிஷனர்கள் பொன்னையன், ஜெயராமன் ஆகியோர் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஜன., 3க்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE