துார் வாராம விட்டுட்டாங்க கோட்டை : ஊர் முழுக்க நடக்குது வசூல் வேட்டை!

Updated : டிச 14, 2021 | Added : டிச 07, 2021 | |
Advertisement
ஈச்சனாரிக்குப் போவதற்காக டூ வீலரில் பொள்ளாச்சி ரோட்டில் வண்டியில் சென்று கொண்டிருந்தனர் சித்ராவும், மித்ராவும்.ஜெயலலிதாவுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் போஸ்டர்கள், எக்கச்சக்கமாக இருந்ததைப் பார்த்த சித்ரா, ''மித்து! ஆட்சியில இருந்தப்போ இருந்ததை விட இல்லாதப்பதான், அம்மா ஞாபகம் அதிகம் வந்துருக்கு!'' என்றாள்.''ஆமாக்கா! போன வருஷம் எம்.எல்.ஏ.,வுக்கு நிக்கிறவுங்க
துார் வாராம விட்டுட்டாங்க கோட்டை : ஊர் முழுக்க நடக்குது  வசூல் வேட்டை!

ஈச்சனாரிக்குப் போவதற்காக டூ வீலரில் பொள்ளாச்சி ரோட்டில் வண்டியில் சென்று கொண்டிருந்தனர் சித்ராவும், மித்ராவும்.

ஜெயலலிதாவுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் போஸ்டர்கள், எக்கச்சக்கமாக இருந்ததைப் பார்த்த சித்ரா, ''மித்து! ஆட்சியில இருந்தப்போ இருந்ததை விட இல்லாதப்பதான், அம்மா ஞாபகம் அதிகம் வந்துருக்கு!'' என்றாள்.'

'ஆமாக்கா! போன வருஷம் எம்.எல்.ஏ.,வுக்கு நிக்கிறவுங்க மட்டும்தான் போஸ்டர் அடிச்சாங்க. இப்போ கவுன்சிலராகுற கனவுல இருக்குற நுாத்துக்கணக்கான நிர்வாகிகள் எல்லாரும் அடிச்சிருக்காங்க. நினைவு நாள் ஊர்வலத்துலயே வழக்கத்தை விட, அதிகமான கூட்டம் இருந்துச்சு!'' என்றாள் மித்ரா.

''அதெல்லாம் சரி...ஆனா எங்க பார்த்தாலும் மழை வெள்ளத்துல ஊரு நாறுறதோட, பத்து வருஷமா இருந்த ஏ.டி.எம்.கே., கவர்மென்ட் பேரும்ல நாறுது. இத்தனை கோடிகளை குளத்துல கொட்டுனவுங்க, ஏன் இதெல்லாம் சரி பண்ணலைன்னு மக்களே கேக்குறாங்க!'' என்றாள் சித்ரா.

''ஆளும்கட்சி பேரும்தான் சேர்ந்து நாறுது...ஏற்கனவே ஏகப்பட்ட வேலைகளை நிறுத்தி வச்சிட்டாங்க... அட்லீஸ்ட் மழைத்தண்ணி வெளிய போறதுக்கான வேலைகளையாவது செய்யலாமேன்னு மக்கள் கேக்குறாங்க!'' என்று மித்ரா சொல்லும்போதே, குறுக்கிட்டாள் சித்ரா...'

'இப்ப இருக்குற கார்ப்பரேஷன் கமிஷனருக்கு எதிரா கான்ட்ராக்டர்கள் போராட்டம் நடத்தப் போறாங்களாமே...!'''

'அது அவுங்களா நடத்தலை...எதிர்க்கட்சியில இருந்து துாண்டி விடுறாங்கன்னு பேசிக்கிறாங்க... அவுங்க போராடுறாங்களோ இல்லையோ, கொஞ்ச நாள்ல மக்கள் இறங்கிப் போராட ஆரம்பிச்சிருவாங்க... எலக்சன் அறிவிக்கிறதுக்கு முன்னாடி ரோடு, கால்வாய் எல்லாம் சரி பண்ணலைன்னா ஆளும்கட்சிக்குச் சிக்கல்தான்!'''

'ஏற்கனவே ஆரம்பிச்சிருச்சு மித்து...87வது வார்டுல பிருந்தாவன் நகர்னு ஒரு ஏரியாவுல தேங்குன மழைத்தண்ணிய வெளியேத்துற வேலைகளைப் பார்க்கப்போன கார்ப்பரேஷன் கமிஷனரை, அந்த ஏரியா மக்கள் சுத்தி வளைச்சு, சரமாரியா கேள்வி கேட்டுத் துளைச்சு எடுத்துட்டாங்களாம்!''

''அச்சச்சோ...அப்புறம்!'''

'அவர் பதட்டமே ஆகலையாம்...பொறுமையாப் பேசிருக்காரு. டெண்டர்களை ஏன் கேன்சல் பண்ணுனோம்னு விளக்கிட்டு, 51.35 கி.மீ., தூரத்துக்கு, 34.93 கோடிக்கு ரோடுகளைச் சரி பண்ணப் போறதாச் சொல்லிருக்காரு. அவர் சொன்னதைக் கேட்டு, அவர்ட்ட கோபப்பட்டவுங்களே மன்னிப்புக் கேட்டாங்களாம்!'' என்றாள் சித்ரா.

செந்தில் பாலாஜி போஸ்டரைப் பார்த்து விட்டு, அடுத்து மித்ரா ஆரம்பித்தாள்...''அக்கா! சனிக்கிழமை சிட்டிக்குள்ள தட்டி எடுத்த மழையில, கார், பஸ் எல்லாம் வெள்ளத்துல சிக்குனதைப் பார்த்ததும், கலெக்டர், கார்ப்பரேஷன் கமிஷனரு எல்லாத்தையும் மினிஸ்டரே கூப்பிட்டு, 'நானே ஸ்பாட்டுக்கு வந்து பாக்குறேன்'னு சொல்லிட்டு, அவினாசி ரோடு கீழ்பாலத்துக்கு வந்துட்டாரு. இடத்தைப் பார்த்துட்டு, அங்கேயே 20 நிமிஷம் ஆபீஸர்கள்ட்ட டீட்டெய்லா பேசிருக்காரு!'''

'என்ன சொன்னாராம்?'''

'ஆபீஸர்ஸ் சொன்னதை பொறுமையாக் கேட்டுட்டு, 'காரணமெல்லாம் இருக்கட்டும்...மக்கள் சபை நடத்தி மனு வாங்குறது ஒரு பக்கம் இருக்கட்டும்...இந்த மாதிரி ஊருக்குள்ள மழைத் தண்ணி தேங்குனா, எலக்சன்ல நம்ம மேலதான் ஜனங்க கடுப்பாவாங்க. அதனால இதெல்லாம் சரி பண்றதுக்கான வழியை முதல்ல பாருங்க'ன்னு ரொம்பவே 'ஸ்ட்ராங்கா' சொல்லிட்டு கார்ல ஏறீட்டாராம்!'''

'அவர் சொல்றதும் உண்மைதான்....இந்த மழை துவங்குறதுக்கு முன்னாலயே, மழைநீர் வடிகால்களை துார் வாரணும்னு கவர்மென்ட்ல உத்தரவு போட்டாங்க. நம்ம ஊர்ல கூட்ஸ்ஷெட் ரோட்டுல இருக்குற வாய்க்கால்ல கலெக்டரும், கார்ப்பரேஷன் கமிஷனரும் சேர்ந்து வேலையைத் துவக்கி வச்சாங்க. ஆனா சிட்டியில வேற எங்கயும் அந்த வேலை நடந்தது மாதிரியே தெரியலை!''

''கவர்மென்ட் மாறி ஏழு மாசமாச்சு. ஊருக்குத் தேவையான வேலை எதுவும் நடக்கலை...ஆனா வசூல் பண்ற வேலையை மட்டும் உடன்பிறப்புகள் கரெக்டா பண்ணிட்டு இருக்காங்க!''

''நானும் கேள்விப்பட்டேன் மித்து...தள்ளு வண்டி, ரோட்டுக்கடை எதையும் விடாம கடைக்கு ஒரு நாளுக்கு நுாறு ரூபான்னு வசூல் பண்றாங்களாம்... வசூல் பண்றதுக்கே ஏரியாவுக்கு ஏரியா ஆள் போட்ருக்காங்களாம். அதுலயும் ஆர்.எஸ்.புரம் ஏரியாவுல இந்த வாடகை ரெண்டு மடங்கு ஜாஸ்தியாம்...!'' '

'ஆமாக்கா...அதுலயும் மகளிரணி சீனியர் நிர்வாகி ஒருத்தரும், மஞ்சள் சட்டை போடுற பிரமுகரும், எந்த அமைச்சர் வந்தாலும் தவறாம ஆஜராகி, கட்சியில முக்கியமான ஆளு மாதிரி காட்டிக்கிறாங்களாம். அவுங்க போன பிறகு, அந்தந்த டிபார்ட்மென்ட் ஆபீசர்களைப் பார்த்து, விசிட்டிங் கார்டு கொடுத்து, மாசத்துக்கு அஞ்சுல இருந்து 50 ஆயிரம் வரைக்கும் மாமூல் கொடுக்கச் சொல்றாங்களாம்!''

''அடக்கொடுமையே!'''

'வழக்கமா கட்சிக்காரங்க 'கான்ட்ராக்ட்' கேட்டுதானே வருவாங்க; இப்போ, மாமூல் கேட்டு வர்றாங்களேன்னு, ஆபீசர்ஸ் கடுப்பாகுறாங்க!'' '

'மத்த ஆபீஸ்கள்ல மாமூல் வேணும்னு கேட்டா...குடிசை மாற்று வாரிய ஆபீசுக்குப் போயி, நீர்நிலை புறம்போக்குல இருக்கிறவுங்களுக்கு மாற்று வீடாக் கட்டுன வீடுகளை எங்க கட்சிக்காரங்களுக்கு ஒதுக்குங்கன்னு அங்க இருக்குற இன்ஜினியர்களுக்கு, டார்ச்சர் கொடுக்குறாங்களாம்!'' என்றாள் சித்ரா.'

'ஆனா பெரியநாயக்கன்பாளையம் உடன்பிறப்புகள்தான் பாவம்...அங்க மினிஸ்டர் கலந்துக்கிட்ட மக்கள் சபை கூட்டத்துக்கு ஆன செலவைக் கொடுங்கன்னு பேரூராட்சி நிர்வாகத்துல கேட்ருக்காங்க. அவுங்க துட்டு இல்லைன்னு கைய விரிச்சிட்டாங்களாம். கூட்டத்துக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல செலவாயிருச்சாம். என்ன பண்றதுன்னு தெரியாம கட்சி நிர்வாகிகள் கையைப் பிசையுறாங்களாம்!'' என்றாள் மித்ரா.

''மித்து! எலக்சன் டைம்ல ஸ்டாலின் இங்க பிரசாரத்துக்கு வந்தப்போ, கையில ஒவ்வொரு பொருளா எடுத்துக் காமிச்சு, 'இது எவ்வளவு விலை தெரியுமா, எவ்வளவு விலைக்கு வாங்கிருக்காங்கன்னு தெரியுமா'ன்னு பட்டியல் போட்டுப் பேசுனாரே... என்று சித்ரா கேட்கும்முன்பே, குறுக்கிட்டாள் மித்ரா...

''இதே மதுக்கரை யூனியன்ல இருக்குற மலுமிச்சம்பட்டி, சீராப்பாளையம் பஞ்சாயத்துகள்லதான, இப்பிடி தாறுமாறா ரேட் போட்டு வாங்கிருந்தாங்க. ஆனா அது சம்பந்தமா இப்போ டீட்டெய்ல் கேட்டாலும் தர்றது இல்லியாமே...அதைத்தான சொல்ல வர்றீங்க?''

''அதேதான்...அதுல எந்த செயலாளர் மேலயும் நடவடிக்கை எடுக்கலை. பி.டி.ஓ., ஏடி பஞ்சாயத்து எல்லாருமே துட்டை வாங்கிட்டு, கமுக்கமா அமுக்கீட்டாங்க. இப்போ ஆடிட் டிபார்ட்மென்ட்ல இருந்து வந்தவுங்க, 'நாங்களும் அட்ஜெஸ்ட் பண்ணனும்னா, எங்களையும் கவனிங்க'ன்னு லட்சக்கணக்குல கேக்குறாங்களாம். அடிச்ச அரசியல்வாதிங்க போயிட்டாங்க. கையெழுத்துப் போட்டு கால்காசு வாங்குன நாங்க மாட்டிக்கிட்டோமேன்னு புலம்புறாங்க!''சித்ரா பேசிக்கொண்டிருக்கும்போதே, 'அக்கா! ஆதார் ஜெராக்ஸ் தேவைப்படுது!' என்று ஜெராக்ஸ் கடையின் முன் வண்டியை நிறுத்தினாள் மித்ரா.

ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டிருக்கும் போது, அவளே தொடர்ந்தாள்...''அக்கா! ஜெராக்ஸ் கடை வச்சா, ஆர்.டி.ஓ., ஆபீஸ்ல வைக்கணும்...சென்ட்ரல் ஆர்.டி.ஓ., ஆபீஸ்ல ஜெராக்ஸ் கடை வச்சிருக்கிற ஒருத்தர்தான், இப்போ இருக்குற ஆர்.டி.ஓ.,வுக்கு 'ஆல் இன் ஆல்' வேலை பண்றாராம். ஒரு லைசென்ஸ்க்கு அஞ்சாயிரம் வாங்குறாராம். ஆர்.சி., எப்.சி.,ன்னா 10, 20ன்னு தாறுமாறா வாங்குறாராம். கேட்டா, 'கவர்மென்ட் மாறி, ஆர்.டி.ஓ., மாறுனதுல ரேட் ஏறிருச்சு'ன்னு சொல்றாராம். புரோக்கர் இல்லாம அந்த ஆபீஸ்க்கு நேராப் போனா லைசென்ஸ் வாங்கவே முடியாதாம்!''

''இதே மாதிரித்தான் மித்து....சூலுார்ல ஊர்ப்பேருலயே இருக்குற ஒரு ஜெராக்ஸ் கடைக்குப் போனா, தாசில்தார் ஆபீஸ் வேலையில இருந்து இ-சேவை மையம் வேலை வரைக்கும் ஈஸியா முடிஞ்சிருதாம். அங்க இருந்து போற விண்ணப்பத்துக்கெல்லாம் ஏதோ ஒரு 'குறியீடு' வச்சு அனுப்புறாங்களாம். அதைப் பார்த்தா உடனே 'ஓகே' பண்ணிருவாங்களாம். ஆனா 50 ரூபா வேலைக்கு ஆயிரம் ரூபா கொடுக்கணுமாம்!''

''சூலூர்ன்னதும் ஞாபகம் வந்துச்சு...அங்க மாவட்ட எல்லையில இருக்குற செக்போஸ்ட்ல இருக்குற போலீஸ்காரங்க ராத்திரி பகலா வசூல் தட்றாங்களாம். டி போர்டு கார், வேன் எதையும் விடுறது இல்லையாம். அதுலயும் கல்லு மண்ணு ஏத்திட்டு வர்ற லாரின்னா ஓவர் லோடு, ஓவர் ஸ்பீடுன்னு எதையாவது சொல்லி 'லம்ப் அமவுன்ட்'டை புடுங்குறாங்களாம்!''

''இதுவும் சூலுார் போலீஸ் மேட்டர்தான்....நீலம்பூர் பை-பாஸ்ல பிரண்ட்ஸ் சில பேரு 'பிரஸ்'ன்னு போட்ட வண்டியில சரக்கு அடிச்சிட்டு இருந்திருக்காங்க. அப்போ ஒரு போலீஸ் வந்து பிடிச்சு சத்தம் போட்ருக்காரு. அப்புறம் பேசி, அவருக்கும் ஊத்திக் கொடுத்திருக்காங்க. கொஞ்ச நேரத்துல ஏதோ பிரச்னை ஆயிருக்கு...உடனே சூலுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் போனுக்குக் கூப்பிட்டு இருக்காங்க!''

''ஹை...சூப்பரு!''

''அவர் அந்த போலீஸ்ட்ட சியுஜி நம்பர் என்னன்னு கேட்டதும், அடுத்த நிமிஷமே அந்த ஆளு கார்ல இருந்து இறங்கி ஓடிட்டானாம். அப்புறம்தான் தெரிஞ்சிருக்கு, அவன் போலி போலீஸ்ன்னு...இந்த மாதிரி பை-பாஸ்ல நிறைய போலி போலீஸ் சுத்துறாங்களாம்!''சித்ரா பேசிக்கொண்டிருக்கும்போதே, வண்டி ஆத்துப்பாலம் டிராபிக் ஜாமில் மாட்டிக்கொள்ள, இருவரும் அமைதியாயினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X