துணை முதல்வராகிறார் வாரிசு?
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின், அமைச்சர்களின் இலாகாக்களில் அதிரடி மாற்றம் நிகழும் என்ற பேச்சு, கோட்டை வட்டாரங்களில் இறக்கை கட்டி பறக்கிறது. சரியாக செயல்படாத அமைச்சர்களிடம் இருந்து, முக்கிய இலாகாக்கள் பறிக்கப்பட்டு, வேறு சில அமைச்சர்களிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட உள்ளன.
தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதிக்கு, அமைச்சர் பதவி வழங்க ஆலோசனை நடந்த நிலையில், தற்போது துணை முதல்வர் பதவி வழங்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். இதற்காக, மாணவர்கள், இளைஞர்களை கவரும் வகையில் புதிய இலாகாக்களை உருவாக்கி, அவரிடம் ஒப்படைக்கவும் மேலிடம் திட்டம் தீட்டியுள்ளதாம்.கடந்த 2006 - 11 தி.மு.க., ஆட்சியில் முதல்வராக கருணாநிதியும், துணை முதல்வராக ஸ்டாலினும் இருந்தனர்.
உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவி வகித்த ஸ்டாலின், தமிழகம் முழுதும் மக்களுக்கும், உள்ளாட்சிக்கும் தொடர்புடைய பணிகளை மேற்கொண்டு நிர்வகித்தார். அவரது செயல்பாடு கருணாநிதிக்கு பெரும் உதவியாக இருந்தது. தற்போது ஸ்டாலினுக்கு உதவும் வகையில், உதயநிதியை துணை முதல்வராக்கி, அவரது நிர்வாக திறமையை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும் என்று, அமைச்சர்கள் சிலர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்ற பின், முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
தி.மு.க.,வுக்கு எதிராக பள்ளிகள்?
மத்திய அரசின் கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டத்தின் படி, தனியார் சுயநிதி பள்ளிகள், நுழைவு வகுப்பான எல்.கே.ஜி., - ஒன்றாம் வகுப்பில், 25 சதவீத இடங்களில், கல்வி கட்டணமின்றி மாணவர்களை இலவசமாக சேர்க்க வேண்டும். இந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை, தனியார் பள்ளிகளுக்கு அரசே வழங்கும்.
இதன்படி, கடந்த கல்வி ஆண்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு, 419 கோடி ரூபாய் நிதியை பள்ளிகளுக்கு வழங்க, அக்டோபரில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், பள்ளிகளுக்கு நிதி வழங்கப்படவில்லை. தற்போது, தனியார் பள்ளிகளுக்கு, 'செக்' வைக்கும் வகையில், புதிய அரசாணை வெளியிடப்பட்டது. அதில், 'கொரோனா காலத்தில் 75 சதவீத கட்டணம் மட்டுமே பள்ளிகள் வசூலிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனவே, கட்டாய கல்வி சட்ட நிதியிலும், 75 சதவீதம் மட்டுமே வழங்கப்படும்' என்று கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணையால், தனியார் பள்ளிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன. 'தி.மு.க., ஆட்சியில், அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு பதில், தனியார் பள்ளிகளின் செயல்பாட்டை ஒடுக்கும் விதமான செயல்கள் முன்னெடுக்கப்படுகின்றன' என்ற வகையில், தங்கள் 'வாட்ஸ் ஆப்' குழுக்களில் தகவல்களை பதிவிட்டு, அரசின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தவிக்கும் அரசு அலுவலர் சங்கத்தினர்
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பணியாளர் சங்கங்களையும் ஒன்றிணைத்து, அரசு அலுவலர் ஒன்றியம் உள்ளது. இதில், 10 ஆண்டுகளாக தலைவராக தொடர்பவரின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. எனவே, தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகள் பணியில் இருக்கக் கூடியவர்கள் மட்டுமே பதவிக்கு வர முடியும்.
தற்போதைய தலைவர், 2022 ஜனவரி 23ல் பணி ஓய்வு பெற உள்ளார். இவரால் மீண்டும் தலைவராக முடியாத நிலை உள்ளது.இதனால், தற்போதைய துணை தலைவர்கள், பொருளாளர் இடையே தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. ஆனால், தானே தலைவராக தொடர, தற்போதைய தலைவர் விரும்புகிறாராம். இதற்காக, யாரும் வேட்பு மனு தாக்கல் செய்து விடாமல் தடுக்கிற வேலைகளில், அவர் இறங்கி இருக்காராம்.
அவருக்கு ஆளுங்கட்சி ஆதரவு இருக்கிறதால, என்ன செய்வது என்று தெரியாமல் சங்கத்தினர் தவிக்கிறாங்க... விட்டா, திராவிட கட்சிகளின் உட்கட்சி தேர்தல் போல, சங்க தேர்தலும் மாறிடும் போல!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE