
நாட்டில் முதல் முறையாக பார்வையற்றவர்கள் படிப்பதற்கு ஏதுவாக ‛பிரெய்லி' முறையில் வெளியான கவிதை நுாலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்ட பார்வையற்ற தம்பதியர்,எங்களைப் போன்றவர்கள் படித்து மகிழ்வதற்கு ஏதுவாக புத்தகம் வெளியிட்டமைக்கு மிகவும் நன்றி, இலக்கிய வாசிப்பின் மகிழ்வை நாங்களும் அனுபவிக்க இது போன்ற முயற்சிகள் தொடரட்டும் என்று உருக்கமாக குறிப்பிட்டனர்

லண்டனைச் சேர்ந்த மதன் எஸ்.ராஜா என்பவர் எழுதிய ‛கசடு' என்ற கவிதை நுால் வெளியீட்டு விழா சென்னை மைலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது.
61 கவிதைகள் கொண்ட இந்த கவிதைப் புத்தகம் வழக்கமான அச்சு முறையில் தயாரிக்கப்பட்டதுடன் முதல் முறையாக பிரெய்லி முறையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.பிரெய்லி முறையில் உருவாக்கப்பட்ட புத்தகத்தை பார்வையற்ற பட்டதாரி தம்பதிகளான மகேந்திரன்-சோபனா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இருவரும் சேர்ந்து புத்தகத்தின் கவிதைகளை வாசித்ததுடன் வாசிப்பு அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டனர் அதில் மகேந்திரன் பேசியது பலரது மனதை தொட்டது.
எங்களுக்கு பார்வையில்லையே தவிர உணர்வுகளும் உணர்ச்சிகளும் நிறையவே உண்டு அதிலும் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் புத்தகத்தை நாங்கள் வாசிப்பது போல வேறு யாரும் வாசிக்க முடியாது
ஆனாலும் நாங்கள் இலக்கிய வாசனைக்கு அப்பாற்பட்டவர்கள் போலவே நடத்தப்படுகிறோம் பார்வையுள்ள ஒருவர் புத்தகத்தை வாசிக்க அல்ல வாசித்து பதிவு செய்யப்பட்ட குரல் மூலமாகவே புத்தகத்தை பெரும்பாலும் புரிந்து கொள்கிறோம்
ஆனால் சம்பந்தப்பட்ட புத்தகத்தை தொட்டு எங்கள் விரல் வழியாக நாங்கள் படிக்கும் சுகத்திற்கு நிகராக கேட்கும் சுகம் இருப்பதில்லை. நாங்கள் கவிதையை, கட்டுரையை, கதையை எங்கள் ரசனைக்கு ஏற்ப நிறுத்தி நிதானித்து படிக்க எங்களுக்கு புத்தகம்தான் சரியான தீர்வு ஆனால் பல்வேறு காரணங்களால் அது நடக்காமலே இருந்தது.
என்னை நீங்கள் நடன நிகழ்ச்சிக்கு அழைக்காவிட்டால் பராவாயில்லை நான் எனது அறைக்குள் எனக்கு தெரிந்த அளவு நடனமாடி திருப்திபட்டுக் கொள்வேன், என்னை பாடல் நிகழ்ச்சிக்கு அழைக்காவிட்டால் பராவாயில்லை நான் எனது பாத்ரூமிற்குள் பாடி சந்தோஷப்பட்டுக் கொள்வேன், ஆனால் புத்தக வெளியீட்டு விழாவிற்கு அழைக்காவிட்டால் நான் அந்த புத்தகத்தைப் பற்றி எப்படி அறிவேன் அந்த புத்தகம் பற்றி மற்றவர்கள் பேசும் ரசனையான பேச்சை எப்படி அனுபவிப்பேன்
இதை எல்லாம் உணர்ந்தவராக கவிஞர் மதன் எஸ்.ராஜா எங்களுக்கான புத்தகத்தை தயாரித்து அந்த புத்தகத்தின் முதல் பிரதியையும் எங்களையே பெற வைத்து சிறப்பு செய்துள்ளார் அநேகமாக இந்த முயற்சி நாட்டிலேயே இதுதான் முதல் முறையாக இருக்கும் என்று எண்ணுகிறோம்,கவிதையின் வாசிப்பில் களிப்பில் முழ்கி மகிழ்ந்திருக்கிறோம் எங்களது இந்த மகிழ்ச்சி வருங்காலத்திலும் தொடரட்டும் நன்றி என்றார்.
இவ்விழாவில் பேராசிரியர் அ.முத்துவேலு, தமிழ் மணவாளன், கரன் கார்க்கி, நெல்லை பி.சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். எழுதாளர் ஜானு இந்து இந்நிகழ்சியை தொகுத்து வழங்கினார். எழுத்தாளர் லதா என்பவரின் 'நோ ராப் இம்ப்ரின்ட்ஸ் பதிப்பகம்' மூலமாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE