புதுடில்லி: பா.ஜ., எம்.பி.,க்கள் பார்லிமென்ட் கூட்டத்தொடரை புறக்கணிப்பதை மாற்றி கொள்ள வேண்டும் அல்லது மாற்றப்படுவீர்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடர் குறித்தும், அதில் நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள் குறித்து ஆலோசிக்க பா.ஜ., எம்.பி.,க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, பிரஹலாத் ஜோஷி, பியூஷ் கோயல் , பா.ஜ., தலைவர் ஜேபி நட்டா, மூத்த தலைவர்கள் மற்றும் எம்.பி.,க்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது குறித்து எம்.பி., ஒருவர் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: பார்லிமென்ட் கூட்டத்தொடரில் அனைத்து எம்.பி.,க்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என பல முறை அறிவுறுத்தி உள்ளேன். குழந்தைகள் போல் ஒவ்வொரு முறையும் சொல்லி கொண்டிருப்பது நன்றாக தெரியவில்லை. எம்.பி.,க்கள் ஒவ்வொருவரும் தங்களை மாற்றி கொள்ளாவிட்டால், உங்களை மாற்ற நேரிடும் என பிரதமர் பேசியதாக அந்த எம்.பி., தெரிவித்துள்ளார். மேலும் அவர், எம்.பி.,க்களின் எதிர்காலம் குறித்து கட்சி மேலிடம் எடுக்கும் முக்கிய முடிவுகளில் பார்லிமென்ட் வருகைப்பதிவேடு முக்கிய காரணியாக இருக்கும் என எம்.பி.,க்கள் எச்சரிக்கையாக எடுத்து கொண்டுள்ளனர் எனவும் அந்த எம்.பி., தெரிவித்தார்.

பிரதமர் பேசுவதற்கு முன்னர், பார்லிமென்ட் கூட்டத்தொடர் குறித்தும், பா.ஜ., எம்.பி.,க்கள் பேசியது , வருகை ஆகியவை குறித்து அமைச்சர் பிரஹலாத் ஜோஷி விளக்கம் அளித்தார்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE