புதுடில்லி :பார்லிமென்ட் கூட்டத்துக்கு வராத அல்லது தொடர்ச்சியாக பங்கேற்காத பா.ஜ., -எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.''எம்.பி.,க்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் மாற்றங்களை சந்திக்க நேரிடும்,'' என, தெரிவித்தார்.
பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 29ல் துவங்கியது. முதல் நாள் அன்றே இரு சபைகளும் கலகலத்தன. புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் விவகாரத்தில் விவாதம் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில்ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் கோரி சபையில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடர்கிறது.
அதன்பின் கடந்த கூட்டத்தொடரின் கடைசி நாளில் கடும் அமளியில் ஈடுபட்ட 12 எதிர்க்கட்சிஎம்.பி.,க்களை 'சஸ்பெண்ட்' செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
நெருக்கடி
இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதை அடுத்து சபை நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் 14 அப்பாவி மக்கள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பார்லி.,யில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இப்படி தினம் ஒரு விவகாரத்தை கையில் எடுத்து சபை நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் முடக்கி வருவது ஆளும் பா.ஜ., அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் பா.ஜ., - எம்.பி.,க்கள் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் நேற்று நடந்தது. இதில் பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உட்பட பா.ஜ., - எம்.பி.,க்கள் அனைவரும் பங்கேற்றனர்.
தவற விடாதீர்கள்
இந்த கூட்டத்தில் பிரதமர் பேசியதாவது:பார்லிமென்ட் கூட்டத்தில் எம்.பி.,க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். கூட்டத்துக்கு சரியான நேரத்திற்கு வர வேண்டும். சபையில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். சபையில் பேச வாய்ப்பு கிடைக்கும் போது அதை வீணடிக்கக் கூடாது.
சபை நடவடிக்கைகளை தயவு செய்து தவற விடாதீர்கள். குழந்தைகளுக்கு சொல்வதை போல நானும் மீண்டும் மீண்டும் இதை வலியுறுத்தி வருவது நல்லதல்ல. நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ளவில்லை எனில் நாளடைவில் மாற்றங்களை சந்திக்க நேரிடும்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.
மூன்று திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு!
உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் 9,600 கோடி ரூபாய் மதிப்பிலான உர தொழிற்சாலை, எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மண்டல கிளையை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு நேற்று அர்ப்பணித்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, சமாஜ்வாதி கட்சியினரை மறைமுகமாக தாக்கினார். ''சிவப்பு தொப்பி அணிந்து வலம் வருபவர்கள், இந்த மாநிலத்திற்கே சிவப்பு எச்சரிக்கையாக உள்ளனர். மக்களின் வலி மற்றும் வேதனைகள் குறித்து அவர்களுக்கு கவலை இல்லை,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE