புதுடில்லி,: 'கடந்த 2018ல் 336.3 கோடி எண்ணிக்கையில் இருந்த 2,000 ரூபாய் நோட்டு, தற்போது, 223.3 கோடியாக குறைந்துள்ளது' என, ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கறுப்பு பணத்தை தடுக்கும் வகையில், 2016 நவம்பர் 8ல், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
அதற்கு மாற்றாக புதிய 500 மற்றும் 2,000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
தற்போது நாட்டில் உள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கம் குறித்த கேள்விக்கு, ராஜ்யசபாவில் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியுள்ளதாவது:கடந்த 2018ல், 2,000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை, 336.3 கோடியாகஇருந்தது.
இது ஒட்டு மொத்த ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையில் 3.27 சதவீதமாகவும், மதிப்பில் 37.26 சதவீதமாகவும் இருந்தது.அதுவே, தற்போது 223.3 கோடியாக உள்ளது. அதாவது தற்போதுள்ள ஒட்டுமொத்த ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையில் 1.75 சதவீதமாகவும், மதிப்பில் 15.11 சதவீதமாகவும் உள்ளது.
இந்த, 2,000 ரூபாய் நோட்டுகள், 2018 - 2019க்கு பின் புதிதாக அச்சடிக்கப்படவில்லை.அதற்கான தேவையும் ஏற்படவில்லை. கிழிந்தது போன்ற காரணங்களால், 2,000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையில் வித்தியாசம் ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE