சென்னை :'அரசு பணிகளில் காலியாக உள்ள, 11 ஆயிரம்இடங்களுக்கு, அடுத்த இரண்டு மாதங்களில் தேர்வு அறிவிக்கப்படும்' என, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்து உள்ளது.
போட்டி தேர்வுகள் தொடர்பாக, ஒவ்வொரு ஆண்டும் திட்ட அறிக்கை வெளியிடப்படும். அதன்படி, 2022ம் ஆண்டுக்கான திட்ட அறிக்கையை, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலச்சந்திரன் நேற்று வெளியிட்டார்.
பின், அவர் கூறியதாவது:ஏற்கனவே நடத்தப்பட்டுள்ள குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள், 10 நாட்களில் அறிவிக்கப்படும். மார்ச்சில் பிரதான தேர்வு நடத்தப்படும். துறை தேர்வுகளை பொறுத்தவரை, 1.30 லட்சம் அரசு ஊழியர்களுக்கு, பிப்ரவரியில் கணினி வழி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.வருங்காலங்களில் ஓ.எம்.ஆர்., விடைத்தாளுக்கு பதில், கணினி வழி தேர்வுகள் அதிகரிக்கப்படும். வரும், 2022ம் ஆண்டில் குரூப் 2 மற்றும்குரூப் 2 ஏ பதவிகளில், 5,831 இடங்கள் நிரப்பப்படுகின்றன. குரூப் 4 பதவிகளில், 5,255 நியமனங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. குரூப் 2 மற்றும் 2 'ஏ'வுக்கு, பிப்ரவரியிலும்; குரூப் 4 பதவிக்கு, மார்ச்சிலும் தேர்வு அறிவிக்கப்படும்.
75 நாள் அவகாசம்
தேர்வு அறிவிப்பு வெளியான நாளில் இருந்து, 75 நாட்கள் வரை மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்படும். அரசு புதிதாக அறிவித்துள்ள, தமிழ் மொழி தேர்வு கட்டாயம் என்ற உத்தரவுப்படி, போட்டி தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும். இணையதளங்களில் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.தேர்வுகளில் எந்தவிதமான முறைகேடுகளும் நடக்காமல் தடுக்கும் வகையில், உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்வு முடிந்ததும், ஓ.எம்.ஆர்., விடைத்தாள்களில் தேர்வரின் விபரங்கள் அடங்கிய குறிப்புகள், தனியாக பிரிக்கப்பட்டு, விடைத்தாள்கள் கட்டப்படும்.
'பார்கோடு' வழியாக மட்டுமே, அந்த விடைத்தாள்கள் யாருடையது என்பதை அறிய முடியும்.விடைத்தாள் திருத்தம் முடிந்த பின்னரே, அது யாருடையது என தெரியும். ஒவ்வொரு விடைத்தாளின் முகப்பிலும், தேர்வர் எத்தனை கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் என்ற விபரம் குறிப்பிடப்படும். தேர்வு முடிந்ததும் தேர்வரின் கையொப்பம், கைவிரல் ரேகை பதிவிட்ட பின் விடைத்தாள் பெறப்படும். அதற்கான பெட்டிகளில் வைத்து, 'டிஜிட்டல் லாக்' செய்யப்படும்.
மோசடி நடக்காது
அந்த பூட்டை திறப்பதற்கான ரகசிய எண், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியிடம் மட்டுமே இருக்கும். விடைத்தாள் எடுத்து வரும் வாகனங்களில், வழித்தடம் கண்டறியும் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டு, சென்னைக்கு வந்து சேரும் வரை, போலீஸ் வழியாக கண்காணிக்கப்படும். இடையில் எங்காவது அதிக நேரம் வாகனம் நகராமல் நின்றால், உடனடியாக போலீசாரை அனுப்பி காரணம் அறியப்படும். இதனால், கடந்த காலத்தில் நடந்தது போல மோசடி நடக்காது. ஏராளமான பாதுகாப்பு அம்சங்களை அமல்படுத்தி, போட்டி தேர்வுகள் வெளிப்படையாக நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார். டி.என்.பி.எஸ்.சி., செயலர் உமா மகேஸ்வரி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா உடனிருந்தனர்.
தமிழுக்கு முக்கியத்துவம்!
புதிய அரசாணைப்படி, அனைத்து தேர்வுகளிலும், தமிழ் மொழிக்கான தகுதித்தாள் இடம் பெறும். குரூப் 4 தேர்வுக்கு சரியான விடையை தேர்வு செய்யும் வகையில், தமிழ் தேர்வு நடத்தப்படும். இதில், 40 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவோரின் மதிப்பெண்கள், பொதுத்தாள் மதிப்பெண்ணுடன் சேர்த்து, தரவரிசை பட்டியலில் பயன்படுத்தப்படும். தமிழில், 40 மதிப்பெண் எடுக்காதவர்களின் பொதுத்தாள் மதிப்பீடு செய்யப்படாது.
அவர்கள்அந்த தேர்வில் தகுதியிழப்பு செய்யப்படுவர்.மற்ற தேர்வுகளில், தமிழ் தாளில் தேர்ச்சி மட்டும்பெற வேண்டும்; அதன் மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படாது.கடந்த காலங்களில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 54 பேர், பல்வேறு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள், ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநில எல்லைகளில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான். பீஹார், ராஜஸ்தான் என, வட மாநிலத்தவர்கள் யாரும் தேர்வாகவில்லை என்று, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.
வன்னியர் ஒதுக்கீடு கிடையாது!
தற்போதைய நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போட்டி தேர்வுகளில், வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு அறிவிக்கப்படவில்லை. எனவே, அந்த தேர்வுகளின் முடிவுகளில் வன்னியர் இட ஒதுக்கீடு வராது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி தற்போது, 10.5 சதவீத இட ஒதுக்கீடு அரசாணை செல்லாது. உச்ச நீதிமன்றத்தில் உள்ள மேல்முறையீட்டு வழக்கின் உத்தரவை பொறுத்து, இதுகுறித்து முடிவு செய்யப்படும் என்று, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE