ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே மண்டபம் ரயில்வே ஊழியர் காளியம்மாள் 59, திருமணம் ஆகாத மகள் மேகலா 34, எரித்து கொலை செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில்வே ஸ்டேஷன் மருத்துவ துப்புரவு ஊழியர் காளியம்மாள். இவரது கணவர் கண்ணன் 20 ஆண்டுக்கு முன் ரயில்வேயில் பணிபுரிந்த போது உயிரிழந்தார். இவர்களுக்கு சண்முகப் பிரியா 38, மேகலா 34, என இருமகள்கள். சண்முகப்பிரியா திருமணமாகி மதுரையில் கணவருடனும், திருமணம் ஆகாத மேகலா, தாயுடன் மண்டபம் ரயில்வே குடியிருப்பிலும் வசித்தனர்.
நேற்று தாய் வீட்டிற்கு வந்த சண்முகபிரியா, வீடு உள்புறமாக பூட்டி கிடந்ததால் பின்பக்க கதவை தள்ளி உள்ளே சென்று பார்த்தார். அப்போது தாயும், தங்கையும் படுக்கையில் உடல் முழுவதும் எரிந்த நிலையில் கிடந்தனர். சண்முகபிரியா போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
விசாரணை
சண்முகப்பிரியா கூறுகையில்,''டிச.,6 இரவு 8 மணிக்கு அலைபேசியில் தாயார் அழைத்தார். ரேஷனில் பொருட்கள் வாங்க நாளை மண்டபம் வா என கூறினார். அதன்படி வந்தேன். முன்கதவு பூட்டியிருந்த நிலையில் வீடு முழுவதும் கரும்புகை பரவி கிடந்தது. பதட்டத்தில் பின்கதவை தள்ளி உள்ளே சென்றேன். இருவரும் எரிந்து கிடந்தனர். பீரோவில் நகை, பணம் எதுவும் இல்லை. எவ்வளவு இருந்தது என தெரியவில்லை ''என்றார்.
நகைக்காக கொலையா?
போலீசார் கூறியதாவது: காளியம்மாள் சேமித்த பணத்தில் மண்டபம் கேம்ப் ரயில்வே ஸ்டேஷன் அருகில் ரூ.15 லட்சத்தில் புதிய வீடு கட்டி வருகிறார். அவரிடம் நகை பணம் இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீடு புகுந்து இருவரையும் அடித்து கொலை செய்து நகைகள், பீரோவில் இருந்த நகை, பணம், எடுத்துக்கொண்டு, இருவரையும் எரித்து கொலை செய்திருக்கலாம். காளியம்மாளுக்கு கடன் தொல்லையோ, பணியில் பிரச்னையோ இல்லை.
மேலும் தீவைத்து தற்கொலை செய்தால் எரியும் போது வலியில் துடிதுடித்து வீட்டிற்குள் சுற்றி இருக்க வேண்டும். ஆனால் படுக்கையிலேயே இருவரது சடலமும் கிடந்ததால், திருடர்கள் திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம்.இருவரது அலைபேசியும் திருடு போய் உள்ளது.
இவர்களது வீடு அருகில் இந்திய கடலோர காவல்படை முகாம் தவிர, வேறு எந்த குடும்பத்தினரும் இல்லாததால், உயிருக்கு போராடிய இருவரது சத்தமும் வேறு யாருக்கும் கேட்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இவ்வாறு போலீசார் கூறினர்.
ராமேஸ்வரம் ஏ.எஸ்.பி., தீபக்சிவாச், மண்டபம் இன்ஸ்பெக்டர் ஜீவரத்தினம் விசாரணை நடத்தினர். தடயவியல் உதவி இயக்குநர் மினிதா இருவரின் உடல், வீடுகளை ஆய்வு செய்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE