ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட கல்குவாரி உரிமையாளர் கொலை:கரூரை சேர்ந்த இரு டிரைவர்கள் கைது: இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

Updated : டிச 08, 2021 | Added : டிச 08, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்:17 மாணவியருக்கு பாலியல் தொல்லை பள்ளி முதல்வர், மேலாளர் தலைமறைவு லக்னோ:உத்தர பிரதேசத்தில் பயிற்சி வகுப்பு என அழைத்து, 10ம் வகுப்பு மாணவியர் 17 பேருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் பள்ளி முதல்வர் மற்றும் மேலாளர் ஆகியோரை போலீசார் தேடுகின்றனர்.உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.மிரட்டல்
crime, Murder, Arrest


இந்திய நிகழ்வுகள்:17 மாணவியருக்கு பாலியல் தொல்லை பள்ளி முதல்வர், மேலாளர் தலைமறைவு


லக்னோ:உத்தர பிரதேசத்தில் பயிற்சி வகுப்பு என அழைத்து, 10ம் வகுப்பு மாணவியர் 17 பேருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் பள்ளி முதல்வர் மற்றும் மேலாளர் ஆகியோரை போலீசார் தேடுகின்றனர்.உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.


மிரட்டல்


இங்குள்ள முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 17 மாணவியர், மற்றொரு பள்ளியில் நடக்கும் செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும் என, முதல்வர் யோகேஷ் சவுகான் கூறி உள்ளார்.மாணவியர் முதல்நாளே பள்ளியில் தங்கியிருந்து பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.இதன்படி பயிற்சி வகுப்பு முடிந்த பின் மாணவியர் இரவு உணவாக கிச்சடி தயாரித்து உள்ளனர். அவர்கள் முறையாக செய்யவில்லை என கூறிய முதல்வர் யோகேஷ், கிச்சடி தயாரித்து வழங்கி உள்ளார். அப்போது பள்ளி மேலாளர் அர்ஜுன் உடன் இருந்துள்ளார். கிச்சடியை சாப்பிட்ட மாணவியர் மயங்கினர். பின் யோகேஷ் மற்றும் அர்ஜுன் ஆகியோர் மாணவியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர்.
அதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி உள்ளனர்.சில நாட்களுக்கு பின் மாணவியர் கூறியதன் அடிப்படையில், பெற்றோர் புகார் அளித்துஉள்ளனர். அதை போலீஸ் ஸ்டேஷனில் ஏற்காததால் பா.ஜ., - எம்.எல்.ஏ., பிரமோத் உத்வால் இப்பிரச்னையில் தலையிட்டார்.


'சஸ்பெண்ட்'இதையடுத்து பள்ளி முதல்வர் மற்றும் மேலாளர் மீது 'போக்சோ' உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.தலைமறைவான இருவரையும் பிடிக்க ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே புகாரை பெறாத சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுஉள்ளார்.


ரயில் மோதி ராணுவ வீரர் பலி


மும்பை: ராஜஸ்தானைச் சேர்ந்தவர் பூபேந்திர சிங், 31. பஞ்சாபின் லுாதியானாவில் உள்ள ராணுவ முகாமில் பணியாற்றிய இவர், தொழில்நுட்ப பயிற்சிக்காக மும்பை வந்தார். மும்பை கடற்படை தளத்தில் பயிற்சியில் இருந்த அவர் சமீபத்தில் மாயமானார். இந்நிலையில் 5ம் தேதி நள்ளிரவில் மும்பையை அடுத்த தஹிசார் அருகே தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி பலியானார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


பள்ளியில் ரகளை: 4 பேர் கைது


போபால்: மத்திய பிரதேசத்தின் விதிஷா மாவட்டம் கஞ்ச்பசோடாவில் கிறிஸ்துவ மிஷனரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் எட்டு ஹிந்து மாணவர்களை பள்ளி நிர்வாகம் கிறிஸ்துவர்களாக மதம் மாற்றியதாக புகார் எழுந்தது. இதை பள்ளி நிர்வாகம் மறுத்தது. இருப்பினும் பள்ளி முன் திரண்ட சிலர் கல்வீச்சு மற்றும் வன்முறையில் ஈடுபட்டனர். வழக்கு பதிவு செய்த போலீசார் நால்வரை கைது செய்தனர்.


குழந்தை கொலை: தந்தை கைது


புதுடில்லி: டில்லியைச் சேர்ந்தவர் ரவி ராய், 26. சமீபத்தில் வீட்டிற்கு மதுபோதையில் வந்த ரவி மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த அவர், தன் மூன்று மாத ஆண் குழந்தையின் காலை பிடித்து துாக்கி, தலையை சுவரில் அடித்து கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.


கார் விபத்து: டாக்டர்கள் மீது வழக்கு


ஐதராபாத்: தெலுங்கானாவின் ஐதராபாதில் உள்ள மாதாபூரில் டாக்டர் நிகில் ரெட்டி, அவரது நண்பரும், டாக்டருமான அகில் ரெட்டி ஆகியோர் காரில் சென்றனர். வழியில் சாலையை கடக்க முயன்ற நான்கு பேர் மீது அவர்களின் கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்த நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக டாக்டர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இளம்பெண் குளிப்பதை பார்த்த வாலிபர் கைது

காரைக்கால் : காரைக்காலில் பெண் குளிப்பதை மறைந்திருந்த பார்த்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால், கோட்டுச்சேரி பகுதியை சேர்ந்த 22 வயது பெண், தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வருகிறார்.இவர் நேற்று முன்தினம் குளித்துக் கொண்டிருந்தபோது, அருகில் வசிக்கும் ராஜ்குமார் (30) என்பவர், மறைந்திருந்து பார்த்துள்ளார்.இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பெண் சத்தம் போட்டுள்ளார். இதனால் ராஜ்குமார் அங்கிருந்து தப்பிச் சென்றார். புகாரின்பேரில் கோட்டுச்சேரி போலீசார் வழக்கு பதிந்து ராஜ்குமாரை கைது செய்தனர்.


பெண்ணிடம் மொபைல் எண் கேட்ட வாலிபர் கைது


காரைக்கால் : கோட்டுச்சேரி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் குருபாதம் மகன் ராம்குமார்(30). அதே பகுதியை சேர்ந்த 34 வயது பெண் நேற்று முன்தினம் கடைவீதிக்கு சென்றார்.
அப்பெண்ணை பின்தொடர்ந்து சென்ற ராம்குமார், தவறான நோக்கத்தில் அவரிடம் மொபைல் போன் எண்ணை கேட்டுள்ளார்.இதுகுறித்த புகாரின்பேரில், கோட்டுச்சேரி போலீசார் ராம்குமார் மீது வழக்கு பதிந்து, கைது செய்தனர்.


வைக்கோலில் தீப்பற்றி 3 குழந்தைகள் பலி!


மிர்ஸாபூர்: வைக்கோல் போரில் தூங்கிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் மடிஹன் மாவட்டம் பச்சோக்ஹரா குர்த் என்ற கிராமத்தில் நேற்று ராணி,3, ஹர்ஷித்,5 சுனைனா, 7 ஆகிய மூன்று குழந்தைகளும் வைக்கோல் போரில் படுத்து தூங்கினர். திடீரென வைக்கோல் போர் தீப்பற்றி எரிந்தது. இதில் மூவரும் உடல் கருகி உயிரிழந்தனர். இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தமிழக நிகழ்வுகள்:
ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட கல்குவாரி உரிமையாளர் கொலை:கரூரை சேர்ந்த இரு டிரைவர்கள் கைதுlatest tamil news


ஆத்துார்:ஒரு கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட, கரூர் கல் குவாரி உரிமையாளர், தேவியாக்குறிச்சியில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக, லாரியில் இருந்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே, முத்துார், சின்னகவுண்டன் வலசை சேர்ந்தவர்கள் சாமிநாதன், 63, செல்லமுத்து, 40. இவர்கள், கரூர் மாவட்டம், தென்னிலை, கூனம்பட்டியில் கல்குவாரி நடத்தினர். கடந்த, 6ல், சாமிநாதன் குவாரியில் தங்கியுள்ளார். நேற்று காலை, 3:00 மணிக்கு, குவாரி மேலாளர் மூர்த்தி, சாமிநாதன் மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டபோது, அவர் பேசவில்லை. குவாரிக்கு சென்று பார்த்தபோது, குவாரிக்கு சொந்தமான டிப்பர் லாரியை காணவில்லை.சாமிநாதன் ஓட்டி வந்த, 'ஸ்பிளண்டர்' பைக் மட்டும் இருந்த நிலையில், அவரது காலணி இருந்ததால் சந்தேகம் ஏற்பட்டது.

இந்நிலையில், ஈரோட்டில் உள்ள சாமிநாதனின் மருமகன் முருகேசன் போனுக்கு, ஆடியோ குறுந்தகவல் வந்தது. அதில், 'என்னை கடத்திவிட்டனர். விடுவிக்க, ஒரு கோடி ரூபாய் கேட்கின்றனர்' என, சாமிநாதன் கூறியுள்ளார். இதுகுறித்து, தென்னிலை போலீசில் அளித்த புகார்படி, கரூர் டி.எஸ்.பி., முத்தமிழ்செல்வன் தலைமையில் மூன்று தனிப்படையினர் தேடினர்.
சாமிநாதனின் மொபைல் போனை வைத்து தேடியபோது, சேலம் மாவட்டத்தில் உள்ளது தெரிந்தது. இதனால், கரூர் மாவட்ட போலீசார், வாழப்பாடி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தேடினர்.இந்நிலையில், நேற்று மாலை, 5:00 மணிக்கு, தேவியாக்குறிச்சி, அரசு மறுவாழ்வு இல்லம் அருகே காடு பகுதியொட்டி, டிப்பர் லாரி நீண்ட நேரம் நின்றிருந்ததால் தலைவாசல் போலீசார் விசாரித்தனர். அப்போது லாரியில் இருந்த ஒருவர் குதித்து தப்பி ஓடினார். அவரை, 5 கி.மீ., விரட்டிச்சென்று, கரூர் போலீசார் பிடித்தனர்.
மற்றொருவரும் ஓட முயன்றபோது, அவரை தலைவாசல் போலீசார் பிடித்து, லாரியில் சோதனை செய்தனர். அப்போது, சாமிநாதன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது. சிக்கியவர்கள், கரூரை சேர்ந்த டிரைவர் விஜய், 25, நவீன், 21, என்பதும், அதே குவாரியில் பணிபுரிவதும் தெரியவந்தது. பணம் கேட்டு கடத்தி வந்தவர்கள், காரில் சென்றதாக கூறியுள்ளனர். இரவு, 9:00 மணிக்கு, லாரியில் இருந்த உடலை வெளியே எடுத்தனர். கடத்திய கும்பல் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
தீ வைத்து எரிக்க திட்டம்சாமிநாதன் குடும்பத்தினர் பணம் தராமல் போலீசில் புகார் அளித்தனர். இதனால், சாமிநாதனை கடத்திய கும்பல், கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். போலீசாரிடம் சிக்காமல் இருக்க, தேவியாக்குறிச்சியில் அடர்ந்த மரங்கள் உள்ள பகுதிக்குள் நள்ளிரவில் தீ வைத்து எரிக்க முயன்றனர். போலீசார், 'ரோந்து' பணியின்போது சந்தேகமடைந்து விசாரித்ததில், இறந்தவரது உடலுடன் இருவரும் சிக்கியுள்ளனர்.


ராமேஸ்வரத்தில் ரயில்வே பெண் ஊழியர், மகள் எரித்துக்கொலைராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே மண்டபம் ரயில்வே ஊழியர் காளியம்மாள் 59, திருமணம் ஆகாத மகள் மேகலா 34, எரித்து கொலை செய்யப்பட்டனர்.


latest tamil news


Advertisement

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில்வே ஸ்டேஷன் மருத்துவ துப்புரவு ஊழியர் காளியம்மாள். இவரது கணவர் கண்ணன் 20 ஆண்டுக்கு முன் ரயில்வேயில் பணிபுரிந்த போது உயிரிழந்தார். இவர்களுக்கு சண்முகப் பிரியா 38, மேகலா 34, என இருமகள்கள். சண்முகப்பிரியா திருமணமாகி மதுரையில் கணவருடனும், திருமணம் ஆகாத மேகலா, தாயுடன் மண்டபம் ரயில்வே குடியிருப்பிலும் வசித்தனர்.
நேற்று தாய் வீட்டிற்கு வந்த சண்முகபிரியா, வீடு உள்புறமாக பூட்டி கிடந்ததால் பின்பக்க கதவை தள்ளி உள்ளே சென்று பார்த்தார். அப்போது தாயும், தங்கையும் படுக்கையில் உடல் முழுவதும் எரிந்த நிலையில் கிடந்தனர். சண்முகபிரியா போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.


விசாரணை


சண்முகப்பிரியா கூறுகையில்,''டிச.,6 இரவு 8 மணிக்கு அலைபேசியில் தாயார் அழைத்தார். ரேஷனில் பொருட்கள் வாங்க நாளை மண்டபம் வா என கூறினார். அதன்படி வந்தேன். முன்கதவு பூட்டியிருந்த நிலையில் வீடு முழுவதும் கரும்புகை பரவி கிடந்தது. பதட்டத்தில் பின்கதவை தள்ளி உள்ளே சென்றேன். இருவரும் எரிந்து கிடந்தனர். பீரோவில் நகை, பணம் எதுவும் இல்லை. எவ்வளவு இருந்தது என தெரியவில்லை ''என்றார்.


நகைக்காக கொலையா?


போலீசார் கூறியதாவது: காளியம்மாள் சேமித்த பணத்தில் மண்டபம் கேம்ப் ரயில்வே ஸ்டேஷன் அருகில் ரூ.15 லட்சத்தில் புதிய வீடு கட்டி வருகிறார். அவரிடம் நகை பணம் இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீடு புகுந்து இருவரையும் அடித்து கொலை செய்து நகைகள், பீரோவில் இருந்த நகை, பணம், எடுத்துக்கொண்டு, இருவரையும் எரித்து கொலை செய்திருக்கலாம். காளியம்மாளுக்கு கடன் தொல்லையோ, பணியில் பிரச்னையோ இல்லை.
மேலும் தீவைத்து தற்கொலை செய்தால் எரியும் போது வலியில் துடிதுடித்து வீட்டிற்குள் சுற்றி இருக்க வேண்டும். ஆனால் படுக்கையிலேயே இருவரது சடலமும் கிடந்ததால், திருடர்கள் திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம்.இருவரது அலைபேசியும் திருடு போய் உள்ளது.
இவர்களது வீடு அருகில் இந்திய கடலோர காவல்படை முகாம் தவிர, வேறு எந்த குடும்பத்தினரும் இல்லாததால், உயிருக்கு போராடிய இருவரது சத்தமும் வேறு யாருக்கும் கேட்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இவ்வாறு போலீசார் கூறினர்.
ராமேஸ்வரம் ஏ.எஸ்.பி., தீபக்சிவாச், மண்டபம் இன்ஸ்பெக்டர் ஜீவரத்தினம் விசாரணை நடத்தினர். தடயவியல் உதவி இயக்குநர் மினிதா இருவரின் உடல், வீடுகளை ஆய்வு செய்தார்.


ராமேஸ்வரம் அருகே கடல் அட்டை பறிமுதல்


latest tamil news


ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 1 கோடி ரூபாய் மதிப்புள்ள கடல் அட்டையை மரைன் போலீசார் பறிமுதல் செய்தனர்.ராமேஸ்வரம் அருகே மண்டபம் வேதாளை கடற்கரையில் நேற்று மரைன் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்குள்ள தென்னந்தோப்பில் சிலர் மறைவான இடத்தில் 2 டன் கடல் அட்டையை பாத்திரத்தில் வேக வைத்து காயவைக்க முயன்றனர். அங்கு போலீசார் சென்றதும் 10க்கும் மேலான கடத்தல்காரர்கள் தப்பினர். இந்த கடல் அட்டையை கள்ளப்படகில் இலங்கைக்கு கடத்தி செல்ல இருந்ததாகவும், இதன் இலங்கை மதிப்பு 1 கோடி ரூபாய் எனவும் தெரிந்தது. கடல் அட்டையை மண்டபம் வனத் துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர்.


ரூ.30 லட்சம் மோசடி செய்தவர் அதிரடி கைது


latest tamil newsஆற்காடு:'டிபாசிட்' பணத்திற்கு தங்க நாணயங்கள் தருவதாக கூறி, 30 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டை சேர்ந்தவர் சுரேஷ்பாபு, 40. ஏலச்சீட்டு நடத்தி வரும் இவர், 2019ல் தன் வாடிக்கையாளரிடம் தங்க நாணய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதில், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 30 நாட்களில் 30 சதவீதம் வட்டி வழங்கப்படும். மேலும் இரண்டு கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என, அறிவித்தார்.இதை நம்பி தாஜ்புராவை சேர்ந்த திருநாவுக்கரசு, 60, என்பவர் 7 லட்சம் ரூபாய், கீழ்விஷாரத்தை சேர்ந்த செல்வம், 45 என்பவர் 20 லட்சம் ரூபாய், காவேரிப்பாக்கத்தை சேர்ந்த சண்முகம், 31, என்பவர் 3 லட்சம் ரூபாய் என மொத்தம், 30 லட்சம் ரூபாய் முதலீடு செய்து அதற்கான ரசீது பெற்றுள்ளனர்.

ஆனால் வட்டி பணமும், தங்க நாணயங்களும் வழங்கவில்லை. இது குறித்து கேட்டதற்கு, பங்கு சந்தையில் பணம் முடங்கி விட்டது, சரியானதும் தந்து விடுவதாக சுரேஷ்பாபு கூறியுள்ளார்.பல முறை கேட்டும் பணம் வராததால், பாதிக்கப்பட்ட மூவரும் ஆற்காடு போலீசில் புகார் செய்தனர். சுரேஷ்பாபுவை, போலீசார் நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.மற்றொரு சம்பவம்தஞ்சாவூர், சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் நாகராஜன், 54; எலக்ட்ரீசியன். இவருக்கு, தேசிய வங்கியின் பைனான்சியல் லிமிடெட் என்ற நிறுவனம், 'ஆன்லைன்' வழியாக தனிநபர் கடன் வழங்குவதாக, 'வாட்ஸ் ஆப்' பில் குறுந்தகவல் வந்துள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் விளம்பரம் என நம்பிய நாகராஜன், அதில் குறிப்பிட்டிருந்த மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். அதில் பேசிய நபர், தனிநபர் கடனுக்கு 'பிராசஸிங்' கட்டணமாக 3,100 ரூபாய் செலுத்த வேண்டும், என தெரிவித்துள்ளார். நாகராஜன் தொகையை, வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளார். பின் தன் ஆதார் கார்டு, வங்கி கணக்கு எண் உட்பட பல ஆவணங்களை, ஆன்லைன் வாயிலாக அனுப்பியுள்ளார். தொடர்ந்து நாகராஜன் கடந்த ஆறு மாதங்களாக, 16.60 லட்சம் ரூபாய் வரை செலுத்தியுள்ளார். கடன் கிடைக்காததால், மீண்டும் அந்த மர்ம நபரின் மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டு, 'கடன் வேண்டாம். என் பணத்தை திரும்பிக் கொடுங்கள்' என, நாகராஜன் கேட்டு உள்ளார். 'இன்னும் சிறிது பணம் செலுத்துங்கள்; உங்கள் பணத்தை முழுமையாக அனுப்பி விடுகிறோம்' என மர்ம நபர் கூறியுள்ளார். 'இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நாகராஜன், தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.


ரூ.5.60 கோடி மோசடி: தொழிலதிபருக்கு வலை


கிருஷ்ணகிரி:பெண்ணிடம் 5.60 கோடி ரூபாய் மோசடி செய்த .தொழிலதிபர் குடும்பத்தினர் நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


ஏமாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், பழைய மத்திகிரியைச் சேர்ந்தவர் மேகநாதன், 51; இவர் மனைவி ஜெயலட்சுமி, 46; இவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த, 'ரியல் எஸ்டேட்' மற்றும் 'லாரி டிரான்ஸ்போர்ட்' தொழில் நடத்தி வந்த ரவிச்சந்திரன் குடும்பத்தினர் பழகி வந்தனர். கடந்த, 2015ல் தன் தொழிலில் பங்குதாரராக சேர்ந்தால் வரும் லாபத்தில் பங்கு தருவதாக ரவிச்சந்திரன் கூறி, ஜெயலட்சுமி மற்றும் மேகநாதனிடம், 50 லட்ச ரூபாய் பெற்று, லாபத்துடன் திருப்பி கொடுத்துள்ளார். பின் ஜெயலட்சுமியிடம் உங்களுக்கு தெரிந்தவர்களிடம் கூறி, பணம் பெற்று கொடுத்தால், அதற்கும் லாபத்தில் பங்குதருகிறேன் என்றார்.
ரவிச்சந்திரனை நம்பி, ஜெயலட்சுமி தனக்கு தெரிந்தவர்களிடம் பணம் வாங்கி 5.60 கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.அதன்பின் ஜெயலட்சுமிக்கு பணத்தை தராமல் ரவிச்சந்திரன் ஏமாற்றிஉள்ளார். இதுகுறித்து, நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஜெயலட்சுமி புகார்படி, டி.எஸ்.பி., ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான போலீசார், ரவிச்சந்திரன், அவரது மனைவி லதா, மகன் ராகுல் மற்றும் சுபாஷ் ஆகிய நான்கு பேரை தேடி வருகின்றனர்.


ஆசிரியை 'சஸ்பெண்ட்'

வேலுார் மாவட்டம், கொணவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி, 55. இவர், இங்குள்ள அரசு பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.இவர் கணவர் தர்ம லிங்கம், 60, ஒய்வு பெற்ற எஸ்.ஐ., இருவரும் சேர்ந்து, 2018ல், வேலுாரில் கார், லாரி, ரியல் எஸ்டேட் தொழில் துவங்கி, இதில் முதலீடு செய்தால், அதிக வட்டி கொடுப்பதாக கூறினர். இதை நம்பி ஆசிரியைகள், பொது மக்கள் என, 50க்கும் மேற்பட்டவர்கள், 50 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்தனர்.அசலையும், வட்டியையும் கொடுக்காததால், பாதிக்கப்பட்டவர்கள் வேலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். போலீசார் 2ல் மகேஸ்வரியை கைது செய்து மகளிர் சிறையில் அடைத்தனர். இதையடுத்து வேலுார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிசாமி, அரசு நன்னடத்தை விதிகளின்படி மகேஸ்வரியை 'சஸ்பெண்ட்' செய்து நேற்று உத்தரவிட்டார்.


போதை ஊசி விற்ற நான்கு பேர் கைது


புதுக்கோட்டை:திருக்கோகர்ணம் பகுதியில், போதை ஊசி விற்ற நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் பகுதியில், போதை ஊசி விற்பனை செய்வதாக, நேற்று, தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்த மணிகண்டன், 30, மணி, 32, ஹரிகிருஷ்ணன் ,29, மற்றும் சந்தோஷ்குமார், 29, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த போதை ஊசிகளைபறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.


ரூ.12 கோடி நிலம் அபகரிப்பு மூவருக்கு போலீஸ் 'காப்பு'


சென்னை:சென்னை புறநகர் பகுதியில் 12 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரித்த மூவரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த அனிதா மேத்யூஸ், 61, என்பவருக்கு காஞ்சிபுரம், எஸ்.கொளத்துாரில், 10 சென்ட் காலி மனை உள்ளது.இந்த நிலத்தை, போலி ஆவணம் பயன்படுத்தி, ஆள்மாறாட்டம் செய்து 60 லட்சம் ரூபாய்க்கு விற்க, மாடம்பாக்கத்தை சேர்ந்த கார்த்திகேயன், 51, என்பவர் விலை பேசி, 43 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார்.இதில் அந்த நிலத்தின் மதிப்பு, 2 கோடி ரூபாய். இதுகுறித்த புகாரின்படி, போலீசார் கார்த்திகேயனை கைது செய்தனர்.இதுபோல் செங்கல்பட்டு ஜமீன் பல்லாவரம், மலகானந்தபுரத்தை சேர்ந்த சத்தியசீலன், 68, என்பவர், தனக்கு சொந்தமான 73 சென்ட் நிலம், போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டதாக புகார் அளித்தார். இதில் தொடர்புள்ள, அதே பகுதியைச் சேர்ந்த அய்யனார், 58, வெங்கடாச்சலம், 49, ஆகிய இருவரை கைது செய்தனர். இந்த நிலத்தின் மதிப்பு 10 கோடி ரூபாய்.


மாணவி தற்கொலை முயற்சி; பள்ளி ஆசிரியர் சிக்கினார்


நாமக்கல்: பாலியல் தொல்லையால் மனமுடைந்த மாணவி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவத்தில் பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில், ப.வேலுார் அடுத்த பொத்தனுாரைச் சேர்ந்த ஆசிரியர் மதிவாணன், 52, அறிவியல் ஆசிரியராக பணிபுரிகிறார். இங்கு பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு, இவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.அதனால் மனமுடைந்த மாணவி, தன் 'வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசில்' தான் பிறந்த தேதி மற்றும் இறப்பு தேதி என குறிப்பிட்டு, நான் இறக்க போகிறேன் என்பதை மறைமுகமாக பதிவு செய்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த சக மாணவியர், சம்பந்தப்பட்ட மாணவியை, மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது, பதில் இல்லை. சந்தேகமடைந்து வீட்டுக்கு சென்றபோது, அந்த மாணவி தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை கண்டு தடுத்தனர். மாணவியின் பெற்றோர் முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து பள்ளி தலைமையாசிரியர், நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து, ஆசிரியர் மதிவாணனை கைது செய்தார்.


'கூலிங் பீர்' கிடைக்காத ஆத்திரம்; மின் ஊழியர்களுக்கு அடி, உதை


விருதுநகர்:'கூலிங் பீர்' கிடைக்காததற்கு மின்தடை காரணம் எனக்கூறி பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மின் ஊழியர்களை தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது. மின் ஊழியர்கள் ராஜரத்தினம் 54, பரமேஸ்வரன் ஆகியோர் நேற்று மதுரை ரோட்டில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே மினி வேனில் வந்த இளைஞர்கள் மதுக்கடை எங்கு உள்ளது என ராஜரத்தினத்திடம் கேட்டனர்.

அவர் கடைக்கு வழிகாட்டினார். கடைக்கு சென்று திரும்பியவர்கள் அந்த கடையில் கூலிங் பீர் இல்லை, வேறு கடை உள்ளதா என கேட்டுள்ளனர். இன்று மின் தடை கூலிங் பீர் கிடைப்பது சிரமம் என ராஜரத்தினம் கூறினார். அதில் ஆத்திரமடைந்த மூவரும் 'கூலிங் பீர் கிடைக்காததற்கு நீ தான் காரணமா' என கூறி ராஜரத்தினத்தை தாக்கியுள்ளனர். அவருக்கு உதவ வந்த பரமேஸ்வரனையும் கற்களால் தாக்கி மண்டையை உடைத்தனர். காரியாபட்டி போலீசார், மின் ஊழியர்களை தாக்கிய மதுரையை சேர்ந்த 21- 22 வயதுள்ள மூன்று வாலிபர்களை கைது செய்தனர்.


பரோட்டா சாப்பிட்ட கர்ப்பிணி சாவு


அருப்புக்கோட்டை: பரோட்டா சாப்பிட்ட கர்ப்பிணி பலியானார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே வதுவார்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி சங்கன், 26, இவர் மனைவி அனந்தாயி, 25. தம்பதிக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த அனந்தாயி நேற்று முன்தினம் வீட்டின் அருகில் உள்ள கடையில் பரோட்டா வாங்கி சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார். உறவினர்கள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு அங்கு இறந்தார். ஆர்.டி.ஓ., கல்யாணகுமார், டி.எஸ்.பி., மதியழகன் விசாரணை நடத்தி வருகின்றனர்.


சிறுமியை கர்ப்பமாக்கிய இன்ஜினியருக்கு 'குண்டாஸ்'


பெரம்பலுார்:-கள்ளக்காதலியின் மகளை கர்ப்பமாக்கிய இன்ஜினியர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அரியலுார் மாவட்டம், வாரியங்காவல் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார், 27. பி.இ., பட்டப்படிப்பு முடித்துள்ளார்.இவர் அதே பகுதியில் வசிக்கும் ராணி, 40, என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். ராணி வீட்டுக்கு சென்று வந்த போது, ப்ளஸ்1 படிக்கும் அவரது மகளான 16 வயது சிறுமியையும், பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார்.

புகார்படி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார், வினோத்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். உடந்தையாக இருந்த ராணியையும் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.அரியலுார் கலெக்டர் ரமணசரஸ்வதி, வினோத்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதன்படி நேற்று அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.


லஞ்சம் வாங்கிய பி.டி.ஓ.,வுக்கு 'காப்பு'சிவகங்கை: லஞ்சம் வாங்கிய பி.டி.ஓ., கைது செய்யப்பட்டார்.


latest tamil newsசிவகங்கை மாவட்டம், எஸ்.புதுார் ஒன்றியம் படமிஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, அரசு ஒப்பந்தகாரர். இவர் அப்பகுதியில் பள்ளி சுற்றுச்சுவர் கட்ட 1 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை டெண்டர் எடுத்துள்ளார். இதற்கு எஸ்.புதூர் பி.டி.ஓ., நிர்மல்குமார் கமிஷன் கேட்டதுடன் முன்பணமாக 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். சிவகங்கை லஞ்ச ஒழிப்புத் துறையில் வெள்ளைச்சாமி புகார் அளித்தார். பி.டி.ஓ., நிர்மல்குமாரிடம் வெள்ளைச்சாமி நேற்று பணம் கொடுத்தார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நிர்மல்குமாரை கைது செய்தனர்.


ரூ.25 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டு பறிமுதல்


ஆம்பூர்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்த கனகராஜ், 46, பட்டு புடவை வியாபாரி. இவர், நேற்று முன்தினம் திருப்பத்துார் மாவட்டம், வெங்கிலி அருகே காரில் சென்ற போது, பின் தொடர்ந்து மற்றொரு காரில் வந்த சிலர் காரை மடக்கினர்.அவரிடம் இருந்து 1.5 லட்சம் ரூபாயை பறித்து சென்றனர். புகார்படி தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று மாலை ஆம்பூர் அருகே, மாதனுாரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு கார்களை நிறுத்தி விசாரித்தனர். அதில், 30 - 45 வயதுள்ள ஆறு பேர் இருந்தனர். அவர்கள் கள்ள நோட்டு மாற்றும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது.போலீசார் அவர்களை கைது செய்து, 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 500 ரூபாய் கள்ள நோட்டுகள், பறிமுதல் செய்யப்பட்டன.


திருச்செந்துார் முருகன் கோயிலில் காரைக்குடி பக்தரிடம் 36 பவுன் திருட்டு


latest tamil newsதுாத்துக்குடி: திருச்செந்துார் கோயிலில் சுவாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்றபோது காரைக்குடி பக்தர் கணேசனிடம், மர்ம நபர் 36 பவுன் தங்க நகை, ரூ.40 ஆயிரத்தை திருடியது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெரியார் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அஞ்சலக ஊழியர் கணேசன் 76. குடும்பத்தினருடன் திருச்செந்துார் கோயிலுக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் காலையில் சுவாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்றார்.பாதுகாப்பு கருதி வீட்டில் இருந்த 36 பவுன் 6 கிராம் தங்கநகைகள் மற்றும் 40 ஆயிரம் ரூபாயையும் கையோடு பையில் எடுத்துச்சென்று இருந்தார்.

வரிசையில் நின்றபோது மர்மநபர் ஒருவர் பையின் ஓரத்தில் பிளேடால் அறுத்து நகை, பணத்தை திருடியுள்ளனர். இதுகுறித்து அவர் திருச்செந்துார் கோயில் போலீசில் புகார் செய்தார். கோயிலில் மூலவர் சன்னதி அருகே சென்றபோது அவருக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த ஒருவர், வாயில் இருந்து பிளேடு எடுத்து பையை அறுத்து பணம், நகையை எடுப்பது சிசிடிவி கேமரா காட்சிகளில் தெரிந்தது. அந்த நபரை போலீசார் தேடுகின்றனர்.


இரு குழந்தையுடன் தாய் தற்கொலை


குளித்தலை: குடும்ப பிரச்னை காரணமாக, இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த பூசாரிபட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல், 35, டெக்ஸ்டைல் தொழிலாளி. இவரது மனைவி சரண்யா, 30. தம்பதிக்கு கனிஷ்கா, 6, புவிஷா, 3, என இரு மகள்கள் உள்ளனர்.மதுவிற்கு அடிமையான சக்திவேல் மனைவியின் நகைகளை விற்றுள்ளார். இதனால் சரண்யா மீதமிருந்த, 8 சவரன் நகைகளை தன் தாயிடம் கொடுத்து வைத்திருந்தார்.

இந்நிலையில், சக்திவேலுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சரண்யா இரு மகள்களையும் அழைத்துக் கொண்டு, அருகில் உள்ள விவசாய தோட்டத்தில் இருந்த 50 அடி ஆழமுள்ள கிணற்றில் குழந்தைகளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தீயணைப்பு வீரர்கள் மூவர் உடல்களையும் மீட்டனர்.இது குறித்து சரண்யாவின் தாய் சாந்தி கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் விசாரிக்கின்றனர்.


latest tamil news
தாய் குத்திக்கொலை: 'பாசக்கார' மகன் கைது


தஞ்சாவூர்: மது போதையில் தாயை இரும்புக் கம்பியால் குத்திக் கொலை செய்த மகனை, போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் அஞ்சலையம்மாள், 70. கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். தன் மகன் பாவைநாதன், 38, மருமகள் மற்றும் இரண்டு பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு, மது போதையில் வீட்டிற்கு வந்த பாவைநாதன், தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். ஆத்திரமடைந்த பாவைநாதன் வீட்டில் இருந்த இரும்புக் கம்பியால், அஞ்சலையம்மாளை குத்தினார். அஞ்சலையம்மாளை, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் நேற்று பாவைநாதனை கைது செய்தனர்.


எஸ்.ஐ.,யை தாக்கி போன் பறிப்பு


சென்னை: சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கி மொபைல் போன் பறித்த இருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.

ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில், சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் ரவீந்திரன், 59. தற்போது, மருத்துவ விடுப்பில் உள்ளார். நேற்று முன்தினம் இரவு, ஷபி என்பவரது ஆட்டோவில், உணவு வாங்க கிரீம்ஸ் சாலைக்கு சென்றார்.அப்போது ஷபியுடன், ஆயிரம்விளக்கைச் சேர்ந்த மணிகண்டன், சதீஷ் ஆகியோர், மதுபோதையில் தகராறில் ஈடுபட்டனர்.இதை ரவீந்திரன் தட்டிக்கேட்டபோது, இருவரும் அவரை தாக்கி மொபைல் போனை பறித்துச் சென்றனர். இது குறித்து ஆயிரம்விளக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


உலக நிகழ்வுகள்:ஈராக்கில் 'பைக்' குண்டு வெடித்து 4 பேர் பலி


பாஸ்ரா:ஈராக்கில் பைக் குண்டு வெடித்த சம்பவத்தில் அருகில் இருந்த கார்கள் தீப்பற்றின. இதில் நான்கு பேர் பலியாயினர்.

மத்திய கிழக்கு நாடான ஈராக்கின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது பாஸ்ரா நகரம். இங்கு நேற்று முன்தினம் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பைக் வெடித்து சிதறியது. இதில் அருகில் நின்றிருந்த இரு கார்கள் தீப்பற்றின. அவற்றில் இருந்த நால்வர் பலியானதுடன், படுகாயமடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பிற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. பைக்கில் வெடிகுண்டு பொருத்தப்பட்டு இருந்ததா அல்லது தற்கொலைப்படை தாக்குதலா என கண்டுபிடிக்க முடியவில்லை.சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருவதாகவும், அதன் முடிவுகள் அடிப்படையில் உண்மை தெரியவரும் எனவும் பாதுகாப்பு படையினர் கூறி உள்ளனர்.


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர் கொலை


நியூயார்க்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர், வங்கியில் பணம் செலுத்த வந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கொலம்பஸ் நகரின் கிழக்கு பகுதியில் காஸ் நிறுவனம் நடத்தியவர் அமித்குமார் படேல், 45. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான இவர் தன் நிறுவனத்தில் வசூலாகும் பணத்தை வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் அப்பகுதியில் உள்ள வங்கியில் செலுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதன்படி நேற்று முன்தினம் காலை வங்கிக்கு பணம் செலுத்த வந்த அவரை மர்ம நபர் ஒருவர் சுட்டுக்கொன்றார். பின் அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு தப்பினார்.

வங்கியின் அருகிலேயே போலீஸ் நிலையம் அமைந்துள்ளதால், உடனடியாக அங்கு வந்த போலீசார் அமித்குமாரின் உடலை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பினர். அமித் குமார் வங்கியில் பணம் செலுத்துவதை அறிந்து, காஸ் நிறுவனத்தில் இருந்து பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் கொலை, கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

கடந்த மாதம் 17ம் தேதி டெக்சாஸ் மாகாணம் மெஸ்குயிட் நகரில் நடந்த கொள்ளை சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கடை உரிமையாளர் சாஜன் மேத்யூ, 55, சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்து உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
08-டிச-202116:09:44 IST Report Abuse
Kasimani Baskaran ஆள்கடத்தல் போன்ற வேலைகள் சிறப்பாக நடக்கிறது. விடியலின் சிறப்பு நூறு நாளில் தெரிய ஆரம்பித்தது. இப்பொழுது பிரகாசிக்கிறது. இன்னும் வரும்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
08-டிச-202112:40:55 IST Report Abuse
raja "-கள்ளக்காதலியின் மகளை கர்ப்பமாக்கிய".... இது பெரியாறு மண்ணு....சூப்பர்...
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
08-டிச-202112:37:58 IST Report Abuse
raja "கூலிங் பீர்' கிடைக்காததற்கு மின்தடை காரணம் எனக்கூறி பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மின் ஊழியர்களை தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்." பார்ததுக்கொள்ளுங்க மக்களே....இந்த விடியா ஆட்சியில் உடன்பிறப்புகளின் கட்டுமர சமசீர் அறிவு ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X