ஆனைமலை: பொள்ளாச்சி, டாப்சிலிப்பில் உள்ள 'முத்து' யானைக்கு, 95 சதவீதம் பயிற்சி முடித்துள்ளதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி அடுத்த, அர்த்தநாரிபாளையம் பகுதியில், 2019 நவ., மாதம் விளைநிலத்தினுள் புகுந்த ஒற்றை ஆண் காட்டு யானை தாக்கியதில், விவசாயி ஒருவர் இறந்தார்; ஒருவர் காயமடைந்தார். 2018 மே மாதம், இந்த யானை தாக்கியதில் நவமலையில் சிறுமி மற்றும் முதியவர் என, இருவர் இறந்தனர்.
இந்த யானையால் மூவர் உயிரிழந்ததையடுத்து, வனத்துறையினர் இந்த யானையை, 2019 நவ., 14ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்து, டாப்சிலிப் வரகளியாறு மரக்கூண்டில் (கரால்) அடைத்தனர். 19 வயதான இந்த யானைக்கு, 'முத்து' எனப்பெயரிட்டு பயிற்சியளித்து வருகின்றனர். முகாம் யானைக்கான பயிற்சி முடித்து, 'முத்து' சாதுவாக மாறியுள்ளதால், கடந்தாண்டு ஜூலை, 31ம் தேதி மரக்கூண்டில் இருந்து வெளியில் அழைத்து வரப்பட்டது. இரு ஆண்டுகளாக பயிற்சி பெற்று வரும் இந்த யானை, முகாம் யானைகளுக்கான பயிற்சியை, 95 சதவீதம் நிறைவு செய்துள்ளது. இதையடுத்து, விரைவில் டாப்சிலிப் முகாமுக்கு கொண்டுவர வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
வனத்துறையினர் கூறியதாவது: கோழிகமுத்தி யானைகள் முகாமில் நல்ல பயிற்சி பெற்ற, ஆக்ரோஷமின்றி இருக்கும் யானைகள் மட்டுமே பராமரிக்கப்படுகிறது. இங்கு, சுற்றுலா பயணிகளுக்கு யானை சவாரிக்கும் இந்த யானைகள் பயன்படுத்தப்படுகிறது.பயிற்சி தேவைப்படும் யானைகளை மட்டுமே வரகளியாறில் வைத்து பராமரிக்கப்படுகிறது. தற்போது, கோழிகமுத்தியில், 22 யானைகளும், வரகளியாறில் ஆறு யானைகள் பராமரிக்கப்படுகிறது.ஒரு மாதத்துக்குள், முழு பயிற்சியளிக்கப்பட்டு, 'முத்து' யானை கோழிகமுத்தி முகாமுக்கு மாற்றப்படும். சுற்றுலா பயணிகள் அதை காணலாம். இவ்வாறு, தெரிவித்தனர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE