இதன் மூலம் பேருந்து நிலையங்கள் தரம் உயர்த்தப்படுவதுடன், பயணியரும் பலன் அடைவர் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், 2002ல் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. அதன் அருகில் ஆம்னி பேருந்து நிலையமும் செயல்பாட்டுக்கு வந்தது.
ஆசியாவிலேயே மிக பிரமாண்டமான பேருந்து நிலையமாக, இது செயல்பட்டாலும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படவில்லை. 100 பஸ்கள்இதனால், பண்டிகை காலங்களிலும், பருவமழை காலத்திலும், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இதையடுத்து, புறநகர் பகுதிகளில், மூன்று இடங்களில், வெளியூர் செல்லும் பேருந்துகளுக்கான புதிய நிலையங்கள் அமைக்க சி.எம்.டி.ஏ., முடிவு செய்தது.
இதன் அடிப்படையில் மாதவரத்தில் ௮ ஏக்கர் பரப்பளவில், 95 கோடி ரூபாய் செலவில் 100 பேருந்துகள் வந்து செல்லும் வகையில், புதிய அடுக்குமாடி பேருந்து நிலையம் கட்டப்பட்டு, 2019ல் செயல்படத் துவங்கியது. திருமலை திருப்பதி உட்பட ஆந்திர மாநிலத்தின் பல பகுதிகளுக்கும், தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களுக்கும் இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் நிறுத்த வசதியாகவும், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்கவும், வண்டலுார் கிளாம்பாக்கத்தில், புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
இங்கு 40 ஏக்கர் பரப்பளவில், 466 பேருந்துகள் வந்து செல்லும் வகையில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் இந்த பேருந்து நிலைய திட்டத்திற்கு, ஏற்கனவே, 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இதே போல், மேற்கு மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளுக்காக, திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில் 25 ஏக்கர் பரப்பளவில், 225 பேருந்துகள் வந்து செல்லும் வகையில், 300 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிதுவங்கி, நடைபெற்று வருகிறது. கிளாம்பாக்கம், குத்தம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் முடிந்து, விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன. டிசம்பர் 16இந்த மூன்று பேருந்து நிலைங்களின் இயக்குதல் மற்றும் பராமரிக்கும் பொறுப்பை தனியார் வசம் ஒப்படைக்க, சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க கலந்தாலோசனை நிறுவனத்தை தேர்வு செய்யும் பணிகளையும் துவக்கி உள்ளது.
இதற்கான டெண்டர் அறிவிப்பை சி.எம்.டி.ஏ.,வும், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிதி சேவைகள் நிறுவனமான 'டுபிசெல்' இணைந்து வெளியிட்டுள்ளன. விருப்பம் உள்ள நிறுவனங்கள், டிசம்பர் 16க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.பேருந்து நிலைய பராமரிப்பை, தனியார் பொறுப்பில் ஒப்படைப்பதால், பயணியருக்கு தரமான சேவை கிடைக்கும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
சரியான நேரக்கட்டுப்பாடின் படி பேருந்துகளை இயக்குதல், வளாகத்தை துாய்மையாக பராமரித்தல், பயணியருக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்துதல், போன்றவை செய்ல்படுத்தப்படும்.மேலும், அதி நவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வளாகம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு, திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுத்தல் போன்ற பணிகள் சிறப்பாக நடைபெறும் என பல்வேறு தரப்பினரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பயணியரின் வானக நிறுத்துமிடம் முதல், தரமான உணவு கிடைக்க வழிவகை செய்வது வரை, அனைத்தும் மிகச்சிறந்த முறையில் பராமரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்த புதிய முடிவு, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று உள்ளது.
மூன்று பேருந்து நிலையங்கள் குறித்த அடிப்படை தகவல்கள்:மாதவரம்★ 8 ஏக்கர் பரப்பளவு★ 95 கோடி ரூபாய் மதிப்பீடு★ 100 பேருந்துகள் வந்து செல்லும் வசதி
-கிளாம்பாக்கம்★ 40 ஏக்கர் பரப்பளவு★ 400 கோடி ரூபாய் மதிப்பீடு★ 466 பேருந்துகள் வந்து செல்லும் வசதி
குத்தம்பாக்கம்★ 25 ஏக்கர் பரப்பளவு★ 300 கோடி ரூபாய் மதிப்பீடு★ 225 பேருந்துகள் வந்து செல்லும் வசதிபயன்கள் என்ன?புதிய பேருந்து நிலையங்களை தனியார் பராமரிப்பில் விடுவதால் மக்களுக்கு ஏற்படும் பயன்கள்:
பயணியருக்கு தேவையான அடிப்படை வசதிகள் உயர் தரத்தில் பராமரிக்கப்படும் பேருந்து நிலையம் சுத்தமாகவும், சுகாதாரத்துடன் பராமரிக்கப்படும் பயணியருக்கு தேவையான அனைத்து வசதிகளும், உரிய முறையில் ஏற்படுத்தப்படும்
கடைசி நிமிடத்தில் வரும் பயணியரும் அலைச்சல், குழப்பம் இன்றி உரிய பேருந்தை எளிதாக பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் தரமான மற்றும் நியாயமான கட்டணத்தில் வாகன நிறுத்துமிட சேவை கிடைக்கும் அதிநவீன கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.வசூல் அதிகாரிகள் அம்போ!
சி.எம்.டி.ஏ.,வின் இந்த முடிவால், புதிய பேருந்து நிலையங்கள் தனியார் நிறுவனங்களால் பராமரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2002ல் கோயம்பேடு பேருந்து நிலையம் திறந்த போது, அதை பராமரிக்கும் பொறுப்பை சி.எம்.டி.ஏ., கட்டுமான பிரிவு ஏற்றது.கோயம்பேடு பேருந்து நிலைய பராமரிப்பு பணி என்ற பெயரில், கட்டுமான பிரிவு அதிகாரிகள் வசூல் வேட்டை நடத்தி வருவதாக, பல ஆண்டுகளாக புகார்கள் நீடித்து வருகின்றன.
குறிப்பாக, நடக்காத வேலைக்கு டெண்டர் விடுவதும், அதிலும் கமிஷன் வாங்குவதுமாக கட்டுமான பிரிவின் அட்டுழியம் எல்லை தாண்டி போவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சி.எம்.டி.ஏ.,வின் தற்போதைய உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, இதற்கு கடிவாளம் போடுவதற்காக, புதிய பேருந்து நிலையங்களை தனியார் பராமரிப்பில் விட முடிவு செய்து பணிகளை முடுக்கி விட்டுள்ளதாக, சி.எம்.டி.ஏ., தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE