இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்': ரயிலில் பாய்ந்து அதிகாரி தற்கொலை

Updated : டிச 09, 2021 | Added : டிச 09, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்ரூ.1.69 லட்சம் வழிப்பறிமுசாபர் நகர்: உத்தர பிரதேசத்தின் முசாபர் நகரில் 'காஸ் ஏஜென்சி'க்கு சொந்தமான 1.69 லட்சம் ரூபாயை வங்கியில் செலுத்துவதற்காக, மேலாளர் நிதின் குமார் உள்ளிட்ட மூவர் நேற்று முன்தினம் பைக்கில் சென்றுள்ளனர்.வழியில் கரும்பு தோட்டத்திற்குள் இருந்து ஆயுதங்களுடன் வந்த மூன்று பேர், அவர்களை வழிமறித்து மிரட்டி பணத்தை பறித்து
இன்றைய, கிரைம், ரவுண்ட், அப்


இந்திய நிகழ்வுகள்ரூ.1.69 லட்சம் வழிப்பறி

முசாபர் நகர்: உத்தர பிரதேசத்தின் முசாபர் நகரில் 'காஸ் ஏஜென்சி'க்கு சொந்தமான 1.69 லட்சம் ரூபாயை வங்கியில் செலுத்துவதற்காக, மேலாளர் நிதின் குமார் உள்ளிட்ட மூவர் நேற்று முன்தினம் பைக்கில் சென்றுள்ளனர்.வழியில் கரும்பு தோட்டத்திற்குள் இருந்து ஆயுதங்களுடன் வந்த மூன்று பேர், அவர்களை வழிமறித்து மிரட்டி பணத்தை பறித்து சென்றனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதை அறிந்த பாதுகாப்பு படையினர் நேற்று காலை அங்கு சென்றனர்.தேடுதல் நடவடிக்கையின்போது இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் கூறினர்.

சிறுமியை கொன்ற சிறுத்தை

சித்தி: மத்திய பிரதேசத்தின் சித்தி மாவட்டம் தாத்ரி கிராமத்தை சேர்ந்த சிறுமி, நேற்று முன்தினம் தன் தாய் மற்றும் கிராமத்தினர் சிலருடன் அப்பகுதியில் விறகு சேகரிக்க சென்றார்.அப்போது, அருகில் உள்ள சஞ்சய் துப்ரி தேசிய வனவிலங்கு பூங்காவில் இருந்து வந்த சிறுத்தை சிறுமியை தாக்கி கொன்றது.

கிணற்றில் தாய், மகன் பிணம்

பாலாகாட்: மத்திய பிரதேசத்தின் பாலாகாட் மாவட்டம் திக்தா கிராமத்தை சேர்ந்த சகுந்தலா பாய், 28, அவரது 6 வயது மகன் ஆகியோர், அங்குள்ள கிணற்றில் இருந்து நேற்று முன்தினம் பிணமாக மீட்கப்பட்டனர்.அவர்கள் கொலை செய்யப்பட்டதாக சகுந்தலா பாய் குடும்பத்தினர் கூறினர். அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும், கிணற்றில் தாயால் வீசப்பட்ட 3 வயது இளைய மகன் படியேறி திரும்ப வந்துள்ளதாகவும் அவரது கணவர் கூறினார். போலீசார் விசாரிக்கின்றனர்.

சிறுமிக்கு பெண் குழந்தை

உதய்பூர்: ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில், 11 வயது சிறுமிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. தகவல் அறிந்த போலீசார், குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.அப்போது, சிறுமியின் மாமாவுடன் குஜராத்தில் வேலை பார்த்த 19 வயது இளைஞர், கடந்த ஆண்டு அவர்களின் வீட்டில் தங்கியதும், அப்போது முதல் சிறுமியை தொடர் பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. சிறுமி கர்ப்பமானதும் அவர் தலைமறைவானார். வழக்கு பதிவு செய்த போலீசார் வாலிபரை தேடுகின்றனர்.


தமிழக நிகழ்வுகள்

ரயிலில் பாய்ந்து அதிகாரி தற்கொலை

திருநெல்வேலி:காவல் கிணறு அருகே, ஊராட்சி ஒன்றிய அலுவலக இன்ஜினியர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், காப்புக்காட்டைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 53; நெல்லை மாவட்டம், ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்ஜினியராக இருந்தார்.சொந்த ஊரில் இருந்து தினமும் 'டூ - வீலரில்' பணிக்கு வந்து சென்று உள்ளார்.
நேற்று பகலில் நெல்லை மாவட்டம், காவல்கிணறு ரயில்வே கேட் அருகே டூ - வீலருடன் நின்றுள்ளார். 1:30 மணிக்கு திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் சென்ற இன்டர்சிட்டி ரயில் வந்தபோது அதன் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.பணியிடத்தில் அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குடும்ப பிரச்னை காரணமா என்பது குறித்து, ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


latest tamil news


ரூ.42 லட்சம் மோசடி: அரசு பஸ் டிரைவர் கைது

விழுப்புரம்:அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி, 42 லட்சம் ரூபாய் ஏமாற்றிய அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த செவலபுரையைச் சேர்ந்தவர் ராஜசேகர், 30; இவருக்கு, கடந்த 2015ல் திண்டிவனம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணிபுரியும், சிங்கனுாரைச் சேர்ந்த தேவநாதன், 55 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.அப்போது தெரிந்தவர்கள் இருந்தால் கூறுங்கள் அவர்களுக்கு, அரசு வேலை வாங்கித்தருவதாக தேவநாதன் கூறியுள்ளார்.
இதையடுத்து, ராஜசேகர் தனக்கு தெரிந்த ஒன்பது பேரிடம் 42 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பெற்று, தேவநாதன் மற்றும் சென்னையைச் சேர்ந்த நாகராஜ் ஆகியோரிடம் வழங்கினார். அதன்பின் வேலை வாங்கித்தராமல் ஏமாற்றியுள்ளனர்.இது குறித்த புகார்படி விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். போலீசார் நேற்று தேவநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவில் உண்டியலில் 'சூயிங்கம்' மூலம் திருட்டு

தஞ்சாவூர்: கும்பகோணம், சக்கரபாணி கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை, கோவில் வாட்ச்மேன்கள், 'சூயிங்கம்' வாயிலாக திருடி உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள சக்கரபாணி கோவிலில், சக்கரராஜா, 26; தினகரன், 25, ஆகியோர் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கோவிலில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை, அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கடந்த மாதம், 18, 21 மற்றும் 26ம் தேதிகளில் பதிவான வீடியோவில், கோவில் சன்னிதி மற்றும் கருவறை அருகே உண்டியல்களில், காவலர்கள் சக்கரராஜா, தினகரன் ஆகியோர், நுாதன முறையில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை திருடும் காட்சி பதிவாகி இருந்தது.
இது குறித்து கோவில் செயல் அலுவலர் மல்லிகா கொடுத்த புகார்படி, கும்பகோணம் கிழக்கு போலீசார் சக்கரராஜா, தினகரன் ஆகியோரிடம் விசாரித்தனர். அதிகாரிகள் சென்ற பின், இரவு நேரத்தில், கோவிலை திறந்து, சூயிங்கம் சுற்றிய கம்பியை பயன்படுத்தி, நுாதன முறையில், உண்டியல்களில் பணம் திருடியது தெரிய வந்தது. போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


latest tamil news


ரூ.12.30 லட்சம் ஏமாற்றிய தம்பதி: கணவர் கைது

விழுப்புரம்:ஓராண்டிற்கு பின் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி 12 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அடுத்த மேல்வைலாமூரை சேர்ந்தவர் ஜெயக்குமார் மனைவி புஷ்பவள்ளி 36; எதப்பட்டைச் சேர்ந்தவர் வெங்கடேசன் 36; முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை கலால் பிரிவில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மணிமேகலை 27;
இந்த தம்பதியுடன் 2020ம் ஆண்டு புஷ்பவள்ளிக்கு பழக்கம் ஏற்பட்டது.அப்போது ஒரு லட்சம் கொடுத்தால் ஓராண்டு கழித்து 2 லட்சம் ரூபாய் கொடுப்பதாக வெங்கடேசன் மணிமேகலை கூறியுள்ளனர்.இதனை நம்பிய புஷ்பவள்ளி தனது மகள் திருமணத்திற்காக வைத்திருந்த 12 லட்சம் ரூபாய் மற்றும் அடுக்குபாசி கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் 30 ஆயிரம் ரூபாய் அரை சவரன் நகையை கொடுத்துள்ளனர்.
பணத்தை வாங்கிய வெங்கடேசன் மணிமேகலை திருப்பித் தராமல் ஏமாற்றி வந்தனர்.இது குறித்த புகாரின்பேரில் அவலுார்பேட்டை போலீசார் முன்னிலையில் 12 லட்சம் ரூபாய்க்கு 20 ரூபாய் பத்திரத்தில் வெங்கடேசன் எழுதிக் கொடுத்துள்ளார். பின் வெங்கடேசன் எதப்பட்டில் இருந்து வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவானார்.
புகாரின்பேரில் வெங்கடேசன் மணிமேகலை மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து வெங்கடேசனை நேற்று கைது செய்தனர். மணிமேகலையை தேடி வருகின்றனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை: எலக்ட்ரிஷியனுக்கு 7 ஆண்டு சிறை

ஸ்ரீவில்லிபுத்துார்--ராஜபாளையத்தை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் பாலமுருகன் 23. இவர், 2017ல் பள்ளி மாணவி ஒருவரை திருமணம் செய்வதாக கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை செய்துள்ளார். இதன் வழக்குஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. பாலமுருகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை , பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட அரசு நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்து, நீதிபதி தனசேகரன் தீர்ப்பளித்தார்.

மாஜி' மந்திரி மருமகனிடம் மோசடி 'டுபாக்கூர்' ஐ.ஏ.எஸ்., கைது

சென்னை:புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வத்தின் மருமகன் மற்றும் அவரது நண்பர்களுக்கு குறைந்த விலைக்கு தங்கம் விற்பதாக, 6.30 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், 'டுபாக்கூர்' ஐ.ஏ.எஸ்., அதிகாரி உட்பட, 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மருமகன் பிரவீன் அலெக்சாண்டர், 31. இவரது நண்பர்கள் கவுதம், 29, கணேஷ்குமார், 33; தொழில் அதிபர்கள். ஐஸ்கிரீம், முந்திரி, பிஸ்தா மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை, புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் பாலாஜி, 34. இவரது தந்தை துளசிதாஸ், 59 மற்றும் நண்பர்கள் மகேஷ், 45, மாதவரத்தைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன், 43, ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன், பிரவீன் அலெக்சாண்டருக்கு அறிமுகமாகினர். இவர்களில் கணேஷ்குமாரிடம், 'என் தந்தை துளசிதாஸ், ஐ.ஏ.எஸ்., அதிகாரி. இவருக்கு நெருங்கிய நண்பர்களாக சுங்கத் துறை அதிகாரிகள் உள்ளனர்.
'இவர்களின் உதவியுடன், விமான நிலையத்தில் பிடிபடும் கடத்தல் தங்கத்தை குறைந்த விலைக்கு வாங்கி விற்று வருகிறோம்; நீங்கள் அதிக விலைக்கு விற்கலாம்' என, பாலாஜி கூறியுள்ளார்.இவரது பேச்சை நம்பி கணேஷ்குமார், 6 லட்சம் ரூபாய்க்கு தங்கம் வாங்கி உள்ளார். சோதித்து பார்த்தபோது, போலி தங்கம் இல்லை என தெரிய வந்தது.
இதுபற்றி கணேஷ்குமார், தன் நண்பரான பிரவீன் அலெக்சாண்டரிடம் தெரிவித்துள்ளார். நண்பர்கள் மூவரும், குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபடலாம் என, முடிவு செய்துள்ளனர்.இவர்களிடம், பாலாஜி உள்ளிட்ட நான்கு பேரும், செப்., மாதம் சென்னை, பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கம் அருகே, 6.30 கோடி ரூபாய் பெற்றனர்.
இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் தங்கத்தை தரவில்லை. பணத்தை கேட்டபோது மிரட்டி உள்ளனர்.இது குறித்து கீழ்ப்பாக்கம் துணை கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர். புகார் குறித்து விசாரணை நடத்தி வரும் பெரியமேடு போலீசார், பாலாஜி, துளசிதாஸ் உள்ளிட்ட நான்கு பேரை பிடித்து விசாரிக்கின்றனர். இவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் நேற்று கைது செய்யப்பட்டனர்.


உலக நிகழ்வுகள்

மெக்சிகோவில் பட்டாசு கடை வெடித்து 6 பேர் பலி

மெக்சிகோ சிட்டி-மெக்சிகோவில், அனுமதியின்றி நடத்திய பட்டாசு கடை வெடித்து சிதறியதில் இரு குழந்தைகள் உட்பட ஆறு பேர் பலியாயினர்.வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் பியூப்லா மாகாணத்தில் உள்ளது

காண்டியாகோ டெனாங்கோ கிராமம். இங்குள்ள ஒரு வீட்டில் அனுமதியின்றி பட்டாசு கடை நடத்தி வந்துஉள்ளனர். சமீபத்தில் அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் வீட்டின் சுவர்கள் முழுமையாக இடிந்து விழுந்தன.இந்த விபத்தில் அங்கிருந்த இரு குழந்தைகள் உட்பட ஆறு பேர் பலியாயினர். அப்பகுதியில் இருந்த ஏராளமானோர் காயமடைந்தனர்.

சம்பவம் குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:வெடி விபத்து நடந்த இடத்தில் பட்டாசு விற்பனை செய்ய அனுமதி பெறவில்லை. சட்டவிரோதமாக பட்டாசு கடை நடத்தி வந்துள்ளனர்.அவர்கள் வீட்டிலேயே பட்டாசுகளை தயாரித்துள்ளனர் என்றும் தகவல் கிடைத்துள்ளது. அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

'மாஜி' பிரதமரின் சிறை தண்டனை உறுதி செய்தது மலேஷிய நீதிமன்றம்

புத்ரஜயா-மலேஷிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான ஊழல் வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறை தண்டனையை அந்நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது.

குற்றச்சாட்டுதென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், 68. ஐக்கிய மலாய் தேசிய கட்சியை சேர்ந்த இவர் பிரதமராக பதவி வகித்த போது, அரசுக்கு சொந்தமான நிதியத்தில் இருந்து 75 கோடி ரூபாய் பணத்தை சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில், நஜீப் ரசாக்குக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து நஜீப் ரசாக் தரப்பில், மலேஷிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மூன்று நீதிபதிகள் உடைய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நஜீப் ரசாக்குக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.உத்தரவுஇந்த உத்தரவை எதிர்த்து நஜீப் ரசாக் தரப்பு அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது.எனவே அதுவரை தண்டனைக்கு தடை விதித்து மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. 'அதுவரை நஜீப் ரசாக் ஜாமினில் இருப்பார்' என, தெரிவிக்கப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
09-டிச-202118:13:28 IST Report Abuse
jayvee நம்ம ஊர்ல MP பதவி குடுத்து அழகு பார்க்குறாங்க
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
09-டிச-202112:51:07 IST Report Abuse
raja " ஊராட்சி ஒன்றிய அலுவலக இன்ஜினியர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.".... விடியலின் உடன்பிறப்புகள் அழுத்தம் கொடுத்திருக்க வாய்ப்புகள் உள்ளது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X