கடலுார் : கடலுார், புதுப்பாளையம் ராஜகோபால சாமி கோவில் புதுப்பிக்கப்பட்டு, 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா ஸம்ப்ரோக் ஷணம் நடக்கிறது.கடலுார், புதுப்பாளையத்தில், செங்கமல வல்லி தாயார் சமேத ராஜகோபால சாமி கோவில் அமைந்துள்ளது.
திவ்ய தேசங்களில் ஒன்றான திருவந்திபுரம் தேவநாதசாமிக்கு அபிமான ஸ்தலமாக இது விளங்குகிறது. இக்கோவிலுக்கு கடந்த 2003ம் ஆண்டில் ஸம்ப்ரோக் ஷணம் நடந்தது. அதையடுத்து, 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (9ம் தேதி) நடக்கிறது.அதையொட்டி கோவில் திருப்பணிகள் 10 ஆண்டுகளாக நடந்து முடிவு பெற்றுள்ளது.
கோவிலில் பெருமாள், செங்கமல வல்லி தாயார், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், கருடாழ்வார் சன்னதிகளுக்கு பஞ்சவர்ணம் பூசப்பட்டும், கோயில் முழுவதும் கருங்கல் மற்றும் கதவுகளுக்கு பித்தளை கவசங்கள் பொருத்தப்பட்டு, கோவில் புதுப்பொலிவு பெற்றுள்ளது.கோவிலில் புதியதாக பிரதான ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
கோவில் புனித தீர்த்தகுளம் அழகுற புதுப்பிக்கப்பட்டு, ரம்யமாக காட்சி அளிக்கிறது. கோவிலில் புதியதாக கோசாலையும், பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற துலாபாரம், தாயார் சன்னதியில் தொட்டில் இடம் பெற்றுள்ளது.கும்பாபிேஷகத்தையொட்டி 21 யாக குண்டங்கள் அமைத்து, கடந்த 7 ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கியது.
நேற்று, மகாசாந்தி திருமஞ்சனம் நடந்தது. ஸம்ப்ரோக்ஷண தினமான இன்று (9ம் தேதி) காலை 5:30 மணிக்கு விஸ்வரூபம், புண்யாஹம், ஆராதனம், ேஹாமம், 7:15 மணிக்கு மகா பூர்ணாஹீதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து, 8:45 மணிக்கு மூலவர், பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, ஸம்ப்ரோக் ஷணம் நடக்கிறது.மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 8:00 மணிக்கு புதிய இந்திர விமானத்தில் உபயநாச்சியார் சமேதமாக பெருமாள் கோவில் உள்பிரகார புறப்பாடு நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE