குன்னூர்: ஹெலிகாப்டர் விபத்து விபத்து நடந்த இடம், நஞ்சப்பா சத்திரம் என்ற கிராமத்தை ஒட்டி அமைந்துள்ள பட்டா நிலம். இதன் அருகில், நீலகிரி வனக்கோட்டத்தின் காப்பு வனம் உள்ளது. நேற்று மதியம் 12:00 மணியளவில் அந்த கிராமத்தின் மக்கள் தங்களுடைய இயல்பான வேலைகளைச் செய்து கொண்டிருந்தபோது இரண்டு ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து, வட்டம் அடித்துக் கொண்டிருந்தன.
திடீரென பெரிய வெடிச்சத்தம் கேட்டதும், எல்லோரும் திரும்பிப் பார்த்தபோது, அந்த கிராமத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு மரத்தின் பின்புறத்திலிருந்து மிகப் பெரிய தீப்பிழம்பு புகையுடன் கிளம்பியுள்ளது.அதனால் வெடித்த பின் ஹெலிகாப்டர் மரத்தின் மீது மோதியதா அல்லது மரத்தின் மீது மோதிய பின் ஹெலிகாப்டர் வெடித்ததா என்று யாருக்கும் தெளிவாக தெரியவில்லை.
நாட்டின் முப்படை தலைமை தளபதி தங்களுடைய கிராமத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இறந்திருக்கிறார் என்பதோ, அவர் இந்த தேசத்தில் எவ்வளவு முக்கியமானவர் என்ற விபரமோ தெரியாமல் இந்த விபத்துக்கு பின்னும் மக்கள் தங்களுடைய இயல்பான வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பிபின் ராவத் பேச முயன்றாரா?
மீட்பு பணியில் ஈடுபட்ட முபாரக், சந்திரகுமார் உள்ளிட்ட கிராம மக்கள் சிலர், ஓரிரு நபர்கள் உருக்குலைந்த நிலையிலும் உயிருடன் இருந்ததை பார்த்தாகவும்; அதில் ஒருவர் தங்களுடன் பேச முயன்றதாகவும் தெரிவித்துள்ளனர். விபத்தில் சிக்கியதில் பிபின் ராவத் உடல் மட்டுமே பெரும்பாலும் சிதையாமல் இருந்திருப்பதால், அவர் தான் இறுதி சமயத்தில் உயிருக்கு போராடிய நிலையில் ஏதாவது பேச முயற்சித்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. அவரை யார் என்றே மக்களுக்கு தெரியவில்லை.
மூட்டை கட்டி வந்த உடல்கள்
விபத்து நடந்த இடத்தில் உடல்களை மீட்கும் பணியில் பொதுமக்களுடன் இணைந்து ஈடுபட்ட சமூக சேவகர் முபாரக் கூறியதாவது:தீயணைப்புத்துறையினர் வந்த தகவல் அறிந்து உடனடியாக நாங்கள் வந்துவிட்டோம். அதன் பின்பே, ராணுவம், வனத்துறை அதிகாரிகள் வந்தனர். இரண்டு பேர் கீழே விழுந்து கிடந்தார்கள். முதலில், உள் இருந்தவர்களை மீட்டு வாகனத்தில் அனுப்பினோம். இன்னும் சிலரின் உடல்கள் நெருப்பில் உருக்குலைந்து போயிருந்தன. கீழே விழுந்து சிதைந்ததால், கை, கால் என உறுப்புகளை தனியாக சேகரித்து எடுத்துவந்தோம்.
மொத்தம், 14 பேரில், எட்டு பேர் ஓரளவு இருந்தனர்; மீதமுள்ளவர்களில் யாருடைய உடம்பு, யாருடைய தலை என்று தெரியாத வகையில் சிதைந்து இருந்ததால் மூட்டை கட்டியே கொண்டுவந்தோம். நான் போனபோது, இரண்டு பேர் உயிரோடு இருந்ததாக கூறினர்; ஒருவர் பேசினார். ஆனால், அவரது உடலும் உருக்குலைந்து தான் இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE