ஈரோடு: சத்தியமங்கலத்தில், மூலிகை மருந்து தயாரிப்பில் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் என கூறி ரூ.4.37 கோடி மோசடி விவகாரத்தில், பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சத்தி வனத்துறை டிப்போ கிழக்கு வீதியில் குவாலிட்டி டிரேடர்ஸ், ரிலிப் ஹெர்பல் புராடக்ட் என்ற பெயரில் மூலிகை மருந்து தயாரிக்கும் ஆலை, 2018 நவ., முதல் 2019 ஆகஸ்ட் வரை செயல்பட்டுள்ளது. இதன் உரிமையாளர்கள் மற்றும் பங்குதாரர்களாக கெம்பநாயக்கன்பாளையம் தங்கராஜ், புளியங்கோம்பை பிரகாஷ், கோணார் நாயக்கன்பாளையம் ஆனந்தகுமார், பவானி ஆண்டிபாளையம் பிரபாகரன், சத்தி வடக்கு பேட்டை பொன்னுசாமி, கெம்பநாயக்கன்பாளையம் துரைசாமி இருந்துள்ளனர். மூலிகை மருந்து தயாரிப்பு ஆலையில், ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 100 நாட்களுக்கு தினமும், 2,500 ரூபாய் ரொக்கமாகவோ அல்லது வங்கி மூலமாக அனுப்புவதாகவும், 100வது நாள் முடிவில் முதலீடு செய்த பணம் திரும்ப தருவதாகவும், 10 ஆயிரம் முதலீடு செய்தால், 100 நாட்களுக்கு தினமும், 100 ரூபாய், 100 நாட்களுக்கு பிறகு முதலீடு செய்த பணத்தை திரும்ப தருவதாகவும் துண்டுபிரசுரம் மூலம் விளம்பரப்படுத்தியுள்ளனர். இதை நம்பி ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், தூத்துக்குடி, கடலூர், விருதுநகர், விழுப்புரம், திண்டுக்கல், புதுச்சேரி, சென்னையை சேர்ந்த ஏராளமானோர் முதலீடுகளை வங்கி மூலம் அனுப்பி உள்ளனர். ஆனால் ஆலையினர் முதலீடுகளையும், 100 நாட்களுக்கு உண்டான பணத்தையும் வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சத்தியமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள், பங்குதாரர்கள், நிர்வாகிகளான தங்கராஜ், பிரகாஷ், ஆனந்தகுமார், பிரபாகரன், பொன்னுசாமி, துரைசாமி ஆகிய ஆறு பேர் மீது வழக்கு பதிந்தனர். இதில், பிரபாகரன், பொன்னுசாமி, துரைசாமியை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், வழக்கு ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. பொருளாதார குற்றப்பிரிவு போலீசில், குவாலிட்டி டிரேடர்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை பறிகொடுத்ததாக, 17 பேர் புகார் அளித்துள்ளனர். இந்நிறுவனத்தினர், 586 பேரிடம், நான்கு கோடியே, 37 லட்சம் ரூபாய் வரை முதலீடு பெற்று மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. முதலீடு செய்து பாதிக்கப்பட்ட மக்கள், ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். விபரங்களுக்கு, 0424-2256700 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE