
எப்போதும் தடுப்பாட்டம் ஆடிக்கொண்டிருந்த நமது ராணுவத்தின் தன்மையை மாற்றி எதிரிகளின் களத்திற்குள் புகுந்து எதிரிகளை ஓட ஒட விரட்டி இந்தியா என்றாலே குளிர் மலையிலும் வியர்க்கும் அளவிற்கு எதிரிப்படையை மிரட்டி வைத்திருந்தவர்தான் இறந்த நாம் இழந்த தளபதி பிபின் ராவத்.
மியான்மரிலும் எதிரிகளை அதகளம் செய்தவர், ஊரியில் பாக்., படையை பந்தாடியவர், சீனப்படையை சின்னாபின்னமாக்கியவர், இப்படி இவர் எதிரிகளின் களம் புகுந்து நடத்திய ‛சர்ஜிகல் ஸ்டிரைக்' காரணமாக உலக அரங்கில் நமது ராணுவத்தின் பெருமையை மிக உயரத்திற்கு கொண்டு சென்றவர்.

துணிச்சல் மிகுந்தவர் என்று ஜனாதிபதியும், உண்மையான தேசபக்தர் என்று பிரதமரும், வார்த்தைகளில் விவரிக்க இயலாத பங்களிப்பு அவருடையது என்று உள்துறை அமைச்சரும், ஆழ்ந்த வேதனை அளிப்பதாக ராணுவ அமைச்சரும் இன்னும் பலரும் தங்களது தாங்கமுடியாத வேதனையை சோகம் தோய்ந்த வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
பிபின் ராவத் பற்றி வெளிவரும் ஒவ்வொரு செய்தியையும் பார்த்துவிட்டு எப்பேர்ப்பட்ட ஒரு மகத்தான ராணுவ தலைவரை இழந்துவிட்டோம் என்று எண்ணி மக்கள் தீராத மன வேதனையில் ஆழ்ந்துள்ளனர். தலைமகனை இழந்த வருத்தத்தில் பாரதத்தில் உள்ள ஒவ்வொரு தாயும் மட்டுமல்ல பாரத தாயே கண்ணீர் வடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை நாட்டிற்கும் ராணுவத்திற்கும் அர்ப்பணித்த, ஈடு செய்ய முடியாத தலைமைத் தளபதி பிபின் ராவத் மறைவிற்கு மகத்தான அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டியும் இறைவனை பிரார்த்திக் கொள்ளும் வகையிலும் அவரது இறுதிச் சடங்கு நடைபெற்ற இந்நாளில் (10/12/2021) அவருக்காக மட்டுமல்லாமல் அவருடன் சேர்ந்து இன்னுயிர் எனும் தன்னுயிரை இழந்த இதர ராணுவ அதிகாரிகள், வீரர்களின் ஆத்மா சாந்தி பெறவும், பொதுமக்கள் அவரவர் வீடுகளில் விளக்கு அஞ்சலி செலுத்தினர்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE