பாலக்காடு : முப்படை தளபதி பிபின் ராவத்துடன் ஹெலிகாப்டரில் பயணம் செய்த, கேரளா திருச்சூரை சேர்ந்த விமானப்படை வீரர் பிரதீப் பலியாகியுள்ளார்.
கேரள மாநிலம், திருச்சூர் புத்துாரை சேர்ந்தவர் பிரதீப், 37. கோவை சூலுார் விமானப்படை தளத்தில் ஜூனியர் வாரன்ட் ஆபிசராக பணியாற்றி வந்தார். இவரது தந்தை ராதாகிருஷ்ணன் நோயினால் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அறிந்து விடுமுறையில் வந்த பிரதீப், கடந்த வாரம் தான் பணிக்குத் திரும்பிச் சென்றுள்ளார். குன்னுார் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பலியான, 13 பேரில் அவரும் ஒருவர்.
அவரது தந்தை, நுரையீரல் பாதிப்பு காரணமாக வீட்டில் வென்டிலேட்டர் உதவியுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில், பிரதீப் இழப்பு குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகனின் இறப்பு செய்தியை தாய் குமாரியிடம் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பலியான பிரதீப்புக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர்.
உறவினர்கள் கூறுகையில், 'கடந்த 2004ல் பிரதீப் விமானப்படையில் சேர்ந்தார். காஷ்மீர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணி புரிந்துள்ளார். சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் மீதான தாக்குதலில் பங்கேற்றுள்ளார். ஆறு மாதத்துக்கு முன், கோவை சூலுாரில் பணியமர்த்தப்பட்டார். முப்படை தளபதியுடன், குன்னுார் பயணத்துக்கு அவர் தேர்வாகி இருந்தார்.
இது குறித்த தகவலை அவர் தாயிடம் போனில் தெரிவித்திருந்தார். கேரளாவில் மழை வெள்ள பாதிப்பின்போது மீட்புப் பணியில் ஈடுபட்ட பிரதீபை ஜனாதிபதி பாராட்டியுள்ளார்' என்றனர். அவரது மறைவு, திருச்சூர் புத்துார் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE