நாகர்கோயில்: குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த வாலபர் ஒருவரை கன்னியாகுமரி போலீசார் கைது செய்தனர்.
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், தமிழகத்தின் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி மையத்திற்கு கடந்த டிச.,8ம் தேதி ஹெலிகாப்டரில் சென்றபோது திடீரென காட்டுப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில், பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விபத்து நடப்பதற்கு சில வினாடிகளுக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது. மேலும், இந்த சம்பவம் குறித்து பலரும் பலவிதமான கருத்துகளும், சந்தேகங்களையும் எழுப்பி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக விமானப்படையின் ஏர் மார்ஷல் மனவேந்திர சிங் தலைமையில் முப்படை விசாரணை துவங்கியதாக பார்லி.,யில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.
விளக்கம்
இந்நிலையில், விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த டிசம்பர் 8ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணத்தை விசாரிக்க முப்படை விசாரணை அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை விரைவாக முடிக்கப்பட்டு உண்மைகள் வெளிவரும். அதுவரை, இறந்தவர்களின் கண்ணியத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், தவறான யூகங்களைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு விமானப்படை தெரிவித்துள்ளது.
கைது
இதனிடையே, ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில், கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியை சேர்ந்த ஷிபின்(24) என்ற வாலிபர் கருத்து தெரிவித்திருந்தார். இதனையறிந்த சைபர் கிரைம் பிரிவு போலீசார், அவரை கைது செய்ததுடன் 153ஏ, 505/1 பி, 504 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நாகர்கோயில் கிளைச்சிறையில் அடைத்தனர்.
குஜராத்தில் ஒருவர் கைது
அதேபோல், பிபின் ராவத் உயிரிழப்பு குறித்து அவதூறு கருத்துகள் பரப்பியதாக குஜராத்தில் ஒருவரை, ஆமதாபாத் சைபர் கிரைம் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அம்ரேலி மாவட்டம் பெராய் கிராமத்தை சேர்ந்த சிவபாய் ராம் என்பவர் , சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், சிவபாய் ராம், தனது முந்தைய கருத்துகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார். ஹிந்து கடவுளை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.வெவ்வேறு குழுக்கள் இடையே பகைமையை ஊக்குவித்த குற்றச்சாட்டின் கீழ் சிவபாய் ராம் கைது செய்யப்பட்டார். பிபின் ராவத் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததால், அவர் போலீசாரின் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டார். விசாரணையில், ஹிந்து கடவுளை விமர்சனம் செய்தது தெரியவந்தது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
எச்சரிக்கை
தமிழக போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக வதந்தி மற்றும் பொய் தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.