சென்னை:காவிரி - கோதாவரி இணைப்பு தொடர்பாக, அண்டை மாநிலங்களுடன் பேச்சு நடத்த தமிழக அரசு முயற்சித்து வருகிறது.
ஆந்திராவில் பாயும் கோதாவரி ஆற்றின் வழியாக, ஆண்டுதோறும் 300 டி.எம்.சி., நீர் கடலில் கலந்து வீணாகிறது.
வலியுறுத்தல்
இந்த நீரை, வறட்சியான பகுதிகளுக்கு திருப்பி விட்டால், அதனை பயன்படுத்தி சாகுபடி மற்றும் குடிநீர் உள்ளிட்ட தேவைகளை தீர்க்க முடியும்.இதற்காக, காவிரி - கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த இணைப்பு திட்டத்தை, தேசிய நதிநீர் மேம்பாட்டு முகமை வாயிலாக செயல்படுத்த மத்திய அரசு முன்வந்துள்ளது. இதற்காக, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
திட்ட அறிக்கையின்படி, காவிரி - கோதாவரி இணைப்பை செயல்படுத்த, 85 ஆயிரத்து 962 கோடி ரூபாய் செலவாகும்என்று மதிப்பிடப்பட்டுள்ளது.1,211 கி.மீ., கால்வாய்இத்திட்டத்திற்காக, தெலுங்கானா மாநிலம் இச்சம்பள்ளியில், கோதாவரி ஆற்றில் அணை கட்டப்பட உள்ளது. அங்கிருந்து, 1,211 கி.மீ., கால்வாய் வெட்டப்பட்டு, தஞ்சாவூர் கல்லணை கால்வாயில், காவிரி ஆற்றுடன் இணைக்கப்பட உள்ளது.
இதற்காக, 19 இடங்களில் சுரங்கங்கள் அமைக்கப்பட்டு, நீரேற்று முறையில் தண்ணீர் அனுப்ப, 366 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கும் நீர்மின் உற்பத்தி நிலையமும் கட்டப்பட உள்ளது. இத்திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம், ஐதரபாத்தில் நடந்த போது, திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஆந்திர அரசு முன்வந்தது. கர்நாடகா, தெலுங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.
கிடப்பில் போடப்பட்ட பணி
தெலுங்கானா மாநிலம் இச்சம்பள்ளியில், 15 டி.எம்.சி., நீரை சேமிக்க, 87 மீட்டருக்கு அணை கட்டப்பட உள்ளது. இதற்கு ஒன்பது கிராமங்களில் உள்ள 21 ஆயிரத்து 575 வீடுகளை கையகப்படுத்த வேண்டியுள்ளது.இதனால், நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த, தெலுங்கானா மாநில அரசு தயக்கம் காட்டுகிறது;
மத்திய அரசும், திட்டத்தின் அடுத்தகட்ட பணிகளை துவக்காமல் கிடப்பில் போட்டுள்ளது. திட்டத்தை செயல்படுத்த, அடுத்தக்கட்ட பேச்சு நடத்தி, மூன்று மாநிலங்களின் ஒத்துழைப்பை பெற வேண்டும். ஜன., மாதம் பேச்சு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி, தேசிய நதிநீர் மேம்பாட்டு முகமையிடம், தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.