புதுடில்லி :''இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜனநாயகம் இருந்து வருகிறது. 300 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களால் இந்திய மக்களிடம் இருந்த ஜனநாயக உணர்வை அழிக்க முடியவில்லை,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்பாடு செய்திருந்த ஜனநாயகம் பற்றிய மாநாட்டில் 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக பிரதமர் மோடி நேற்று பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:இந்தியாவில் 1950ல் தான் ஜனநாயகம் ஏற்பட்டதாக சிலர் கருதுகின்றனர். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் ஜனநாயகம் இருந்துள்ளது.ஒன்றுபட்ட மக்கள் நம் நாட்டை 300 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த ஆங்கிலேயர்களால் இந்திய மக்களிடம் இருந்த ஜனநாயக உணர்வை அழிக்க முடியவில்லை.
இந்தியாவில் மொழி, உணவு, உடை, என பலவற்றிலும் வேற்றுமைகள் உள்ளன. ஆனாலும் கலாசார ரீதியாக மக்கள் ஒன்று பட்டுள்ளனர். மக்களிடம் உள்ள ஜனநாயக உணர்வால்தான் இங்கு சுதந்திரமாக தேர்தல் நடத்தப்படுகிறது. நிர்வாகத்தின் அனைத்து துறைகளும் வெளிப்படையாக செயல்படுகின்றன.
பல கட்சிகள் போட்டியிடும் தேர்தல், சுதந்திரமான நீதித்துறை, சுதந்திரமான ஊடகம் ஆகியவை தான் ஜனநாயகத்தின் முக்கியமான கருவிகள். எனினும் மக்களிடமும், சமூகத்திடமும் ஜனநாயகஉணர்வு மேலோங்கியிருப்பது தான் மிகவும் முக்கியம்.இவ்வாறு மோடி பேசினார்