போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் மகன் ஆர்யன் கானுக்கு, வாரந்தோறும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கப்பட்டது. அந்நிபந்தனையை தளர்த்தக் கோரி அவர் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

கடந்த அக்டோபர் 3 அன்று மும்பையிலிருந்து கோவா சென்ற ஒரு சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பலரிடம் போதைப் பொருள் பயன்பாடு காணப்பட்டது. நாப்கினில் மறைத்து கப்பலுக்குள் போதைப் பொருள் கடத்தியுள்ளனர். அதில் நடிகர் ஷாரூக்கானின் ஆர்யன்கானும் சிக்கினார்.
போதைப்பொருள் வைத்திருத்தல், பயன்படுத்துதல், விற்பனை மற்றும் கொள்முதல் ஆகிய குற்றச்சாட்டில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சுமார் ஒரு மாதம் கழித்து அவருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. வாரம்தோறும் வெள்ளியன்று போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும். மும்பையை விட்டு வெளியேறக் கூடாது. சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியின்றி இந்தியாவை விட்டு வெளியேறக்கூடாது போன்ற 14 நிபந்தனைகளுடன் அவருக்கு உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.இந்நிலையில் ஆர்யன் கான் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையிலிருந்து விலக்கு கோரப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை தற்போது டில்லி போதைப் பொருள் தடுப்பின் சிறப்பு புலனாய்வு குழுவிற்கு மாற்றப்பட்டுள்ளதால் மும்பை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தலாம் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE