மதுரை : திருநெல்வேலி மாவட்டம் காற்குடி பதிபூரணம். 1994 ல் மூதாட்டி ஒருவரை பலாத்காரம் செய்து கொன்றதாக செங்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கை விசாரித்த திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் பதிபூரணத்திற்கு ஆயுள் தண்டனை விதித்தது. அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.அவர் இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் உயர்நீதிமன்றம் கிளையில் 2018 ல் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.
அதில் 21 ஆண்டுகளாக சிறையில் உள்ளேன் என கூறியிருந்தார்.நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்ற மூதாட்டியை மனுதாரர் பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளார். சம்பவத்தின் போது நேரில் பார்த்தவர்கள் சாட்சியத்தை பதிவு செய்துள்ளனர். இறந்தவரின் உடலில் பல இடங்களில் ரத்த காயங்கள் இருந்துள்ளன.
இதனால் செங்கோட்டை மருத்துவமனையில் இருந்து திருநெல்வேலி மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். சாட்சிகள், ஆவண, ஆதாரங்களின்படி விசாரணை நீதிமன்றம் மனுதாரருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்து கொலை செய்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனால் ஏற்பட்ட காயத்தால் மூதாட்டி இறந்துள்ளார். எனவே கீழமை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது என்றது.