மதுரை : சென்னையில் நடந்த விழா ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அமர்ந்திருந்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, 'தமிழ்த்தாய் வாழ்த்து இறை வணக்கம் பாடலே. அப்பாடல் பாடப்படும் போது எழுந்திருக்க நிற்க வேண்டும் என எந்த உத்தரவும் இல்லை,' என குறிப்பிட்டது.
சென்னை மியூசிக் அகாடமியில் 2018 ஜன., 24ல் தமிழ் சமஸ்கிருத டிக் ஷனரி வெளியீட்டு விழா நடந்தது. அப்போதைய கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார். காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்றார். இவ்விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது மடாதிபதி அமர்ந்திருந்தாக சர்ச்சை எழுந்தது.
கவிஞர் வைரமுத்து தேசிய கீதம் நாட்டிற்கு மரியாதை கொடுக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ் மொழிக்கு மரியாதை கொடுக்கிறது.இரண்டும் சமமாக கருதப்படும் என குறிப்பிட்டார். நாம்தமிழர் கட்சி நிர்வாகி கண்.இளங்கோ தலைமையில் 12 பேர் ராமேஸ்வரம் காஞ்சி மடத்தில் செருப்புகளுடன் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர் மீது காஞ்சி மடத்தின் மேலாளர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்படி கண்.இளங்கோ மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கை ரத்து செய்ய கோரி கண். இளங்கோ உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:மனுதாரர் தரப்பில் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து
மடத்தின் மேலாளரிடம் கடிதம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதை மடத்தின் மேலாளரும் நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த விவகாரம் முடித்து வைக்கப்படுவதாக கருதுகிறேன்.இந்த வழக்கில் சில விஷயங்களை குறிப்பிட வேண்டும். மனுதாரர் தமிழ் ஆர்வலரா என இந்த நீதிமன்றம் கேள்வி எழுப்பிய போது ஆம் என்றார். அவரிடம் ஐந்து திருக்குறளை தெரிவிக்க கேட்கப்பட்டது. அவரால் கற்க கசடற சொல்ல முடிந்தது.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்ற குறளை கூற கஷ்டப்பட்டார். இதை சுட்டிகாட்டுவதன் மூலம் மனுதாரரை சங்கடப்படுத்தவில்லை.இருப்பினும் 1970 ஜூன் 17ல் தமிழ்நாடு அரசு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் அரசு துறைகள், கல்வி, உள்ளாட்சி நிறுவன விழாக்களில் தொடக்கமாக நீராருங்கடலுடுத்த என்ற தமிழ் தாய் வாழ்த்து பாடலை பாட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
மேலும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இந்த பாடலை மோகன ராகத்தில் பாடவும் சுட்டிகாட்டியுள்ளது. எனவே தமிழ்தாய் வாழ்த்து இறை வணக்க பாடல் மட்டுமே. அது கீதம் இல்லை.மத்திய அரசின் உள்துறை 2015 ஜன., 5ல் பிறப்பித்த உத்தரவில் தேசிய கீதம் பாடும்போது பார்வையாளர்கள் எழுந்திருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி சினிமா தியேட்டர்களில் படம் திரையிடுவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கவும், அனைவரும் எழுந்து நிற்கவும் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இறை வணக்கம் பாடல் தான். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது பார்வையாளர்கள் எழுந்திருக்க வேண்டும் என இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இருப்பினும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது பார்வையாளர்கள் எழுந்து மரியாதை தருகின்றனர். சமூகத்தில் சந்நியாசிக்கு என சிறப்பு இடம் அளிக்கப்படுகிறது. மன்னர்கள் காலத்திலேயே கூட அரசவைக்கு சந்நியாசி வருகிறார்கள் என்றால் மன்னர்கள் இறங்கி சென்று வரவேற்றுள்ளனர். சந்நியாசம் ஏற்பது மறுபிறப்புக்கு சமம் ஆகும்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அமர்ந்த நிலையில் தியானத்தில் சந்நியாசியானவர் இருந்திருக்கலாம். இந்த சம்பவத்தில் கூட கண்களை மூடிய நிலையில் மடாதிபதி அமர்ந்திருக்கிறார். இதன் மூலம் அவரது வழியில் அவர் தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு மரியாதை செய்திருக்கிறார்.மேலும் இம்மனுவில் மனுதாரரும், புகார்தாரரும் சமரசமாக சென்றதால் வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.