சென்னை:ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க, எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, மத்திய அரசு மற்றும் ரயில்வே துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனு தாக்கல்
யானைகள் வேட்டையாடப்படுவது தொடர்பான வழக்குகளை, தேசிய வன விலங்கு குற்றத் தடுப்பு பிரிவுடன், சி.பி.ஐ.,யும் இணைந்து விசாரிக்க உத்தரவிடக்கோரி, கொடைக்கானலை சேர்ந்த மனோஜ் இமானுவேல் உள்ளிட்டவர்கள், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, தமிழகத்தில் யானைகள் இறப்பு குறித்த வழக்குகளை, சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.
இவ்வழக்கு, நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஐந்து ஆண்டுகளில் 13 ஆயிரம் விலங்குகள் கொல்லப்பட்டதாக தெரிவித்தனர்.இதையடுத்து நீதிபதிகள், 'கேரளா, தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் தான், யானைகள் அதிகம் உள்ளன. ரயிலில் அடிபட்டு யானைகள் இறக்கும் செய்திகள் அதிகம் வருகின்றன.
'இந்தியாவில், 29 ஆயிரம் யானைகள் இருந்த நிலையில்,தற்போது குறைந்து வருகின்றன' என்றனர்.'கடந்த மூன்று ஆண்டுகளில் 61 யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளன என, மத்திய தணிக்கை துறை அறிக்கையில் கூறியிருப்பதாக, மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் தெரிவித்தார்.
ரயில்வே சொத்துக்களை பாதுகாக்க தடுப்பு சுவர்களை எழுப்புவதால், வேறு வழியின்றி தண்டவாளங்களை யானைகள் கடக்கும் போது, ரயிலில் அடிபடுகின்றன.'இழப்பை தடுக்க எவ்வளவு செலவு செய்தாலும், தீர்வு கிடைக்கவில்லை' என்றும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
அறிக்கை தாக்கல்
ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, மத்திய அரசும்,ரயில்வே துறையும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 21க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.