கோவை:போக்குவரத்து நெரிசல் மிகுந்த கோவை நகரின், நான்கு முக்கியப்பகுதிகளில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை, நெடுஞ்சாலை துறை விரைவில் துவங்க உள்ளது.
இதற்கான அனுமதி கிடைத்து விட்ட நிலையில், 2022 ஏப்ரலில் பணிகள் துவங்கவுள்ளன. கோவை நகரில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தினமும், பல்வேறு பகுதிகளிலும், நெரிசல் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, முக்கிய சந்திப்புகளில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது போக்குவரத்து நெரிசலை குறைக்க, உக்கடம் - ஆத்துப்பாலம், திருச்சி ரோடு, அவினாசி ரோடு ஆகிய பகுதிகளில், உயர்மட்ட மேம்பால கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இப்பாலங்கள் கட்டப்பட்டாலும், மேலும் சில இடங்களில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுவது அவசியமாகி உள்ளது.சிங்காநல்லுார், சாய்பாபா கோவில், துடியலுார் மற்றும் சரவணம்பட்டி ஆகிய பகுதிகள், உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட வேண்டிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில், உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான கருத்துரு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து மத்திய அரசு, நான்கு பாலங்களை கட்ட, ரூ.400 கோடி ஒதுக்கியுள்ளது.நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், 'திருச்சி ரோட்டில், உழவர் சந்தை முதல் வசந்தா மில் வரை கட்டப்பட உள்ளது.
இதே போல், சரவணம்பட்டி - காளப்பட்டி ரோடு சந்திப்பு, சரவணம்பட்டி - துடியலுார் சந்திப்பு இடையே, 1.4 கி.மீ., நீளத்துக்கு பாலம் கட்டப்பட உள்ளது.மேட்டுப்பாளையம் ரோட்டில், சாய்பாபா கோவில், துடியலுார் சந்திப்பு ஆகிய இரு இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன. இப்பாலங்கள் கட்டுவதற்கு போதுமான இடவசதி உள்ளது.இதனால், நில ஆர்ஜிதம் செய்யப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஒரு பாலத்துக்கு, ரூ.100 கோடி வரை செலவாகும். ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை துறை, இத்திட்டங்களுக்கு அனுமதி அளித்து விட்டது. வரும், ஏப்., 2022ல் பணிகள் துவங்கும்' என்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement