திருப்பூர்:அடுத்த மூன்று மாதங்களுக்கு, அமெரிக்காவிலிருந்து ஆடை தயாரிப்புக்கு புதிய ஆர்டர் வருகை குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், பின்னலாடை துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி துறைக்கு, அமெரிக்கா பாரம்பரிய சந்தையாக உள்ளது. அந்நாட்டு வர்த்தகர்களிடமிருந்து, திருப்பூர் நிறுவனங்களுக்கு, ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் அதிகளவில் கிடைத்துவருகிறது.
கொரோனா இரண்டாவது அலைக்குப்பின், அமெரிக்காவின் 'ரிவெஞ்ச் சேல்' துவங்கியது. அந்நாட்டு மக்கள், வழக்கத்துக்குமாறாக அதிக எண்ணிக்கையில் ஆடைகள் வாங்கினர். இதையடுத்து, அமெரிக்க வர்த்தகர்களும், ஆடை கொள்முதலை அதிகரித்தனர்.திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, அமெரிக்காவிலிருந்து சில மாதங்களாக ஆடை தயாரிப்புக்கு அதிகளவு ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அடுத்த மூன்று மாதங்களுக்கு அமெரிக்காவிலிருந்து ஆடை தயாரிப்புக்கான புதிய ஆர்டர் வருகை குறையும் என, கணிக்கப்பட்டுள்ளது.
மந்த நிலை ஏன்?
திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:கொரோனா இரண்டாவது அலைக்குப்பின், அமெரிக்காவில் 'ரிவெஞ்ச் சேல்' நடந்தது. ஊரடங்கால் ஆடை வாங்க முடியாத மக்கள், அதற்கு பழிவாங்கும்வகையில், அதிக எண்ணிக்கையில் ஆடைகளை வாங்கினர்.இதனால், அந்நாட்டு வர்த்தகர்கள், இந்தியா உட்பட பல்வேறு நாட்டு உற்பத்தியாளர்களுக்கு அதிகளவு ஆர்டர் வழங்கி, அபரிமிதமான எண்ணிக்கையில் ஆடை தயாரித்து பெற்றுள்ளனர். ஆனால் தற்போது, அமெரிக்காவில் ஆடை வர்த்தகம் வெகுவாக குறைந்துள்ளது.இறக்குமதி செய்த ஆடைகளை, வர்த்தகர்கள், தங்கள் குடோன்களில் இருப்புவைத்துவருகின்றனர்;
அந்நாட்டு துறைமுகங்களிலும், தேக்கடைந்துள்ளது. கிறிஸ்மஸ் பண்டிகைக்குப்பின் அமெரிக்காவில் ஆடை வர்த்தகம் குறைவது வழக்கம்.வரும் மார்ச் வரை மந்த நிலை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏப்., மாதத்துக்கு பின்னரே, மீண்டும் ஆர்டர் வருகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், அமெரிக்க சந்தையை மட்டுமே சார்ந்து ஆடை தயாரிக்கும் ஏற்றுமதி நிறுவனங்கள் சற்று சிரமப்படவேண்டிவரும்.
ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் புதிய சந்தை வாய்ப்புகளை வசப்படுத்த திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் முயற்சிக்கவேண்டும். இதன்மூலம், ஆண்டுமுழுவதும் தடையின்றி, ஆர்டர்களை பெற்று, ஆடை தயாரிப்பை தொடரமுடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.கிறிஸ்மஸ் பண்டிகைக்குப்பின் அமெரிக்காவில் ஆடை வர்த்தகம் குறைவது வழக்கம். வரும் மார்ச் வரை மந்த நிலை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏப்., மாதத்துக்கு பின்னரே, மீண்டும் ஆர்டர் வருகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE