கடலுார்-இடம் ஒதுக்குவதில் நிலவும் இழுபறி மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக குப்பை கொட்ட வழியின்றி, கடலுார் மாநகராட்சி திணறி வருகிறது.
கடலுார் மாநகராட்சியில் 45 வார்டுகளும், ஒன்றியத்தில், 20 ஊராட்சிகளும் உள்ளன. மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தினமும் 15 டன்னுக்கு மேல் குப்பை சேகரமாகிறது. இதில் மக்கும் மற்றும் மக்கா குப்பைகளாக தரம் பிரித்து பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படுகிறது. மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் சேகரமான குப்பைகள், திருப்பாதிரிப்புலியூர் கம்மியம்பேட்டை, முதுநகர் அடுத்த பச்சையாங்குப்பம் ஆகிய இடங்களில் கிடங்குகள் அமைத்து கொட்டப்பட்டன. அங்கு, குப்பைகள் எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண 'பயோ மைனிங்' என்ற நவீன முறைப்படி நாள்பட்ட குப்பைகளைப் பிரித்து முற்றிலும் அகற்றி, குப்பைகளை கொட்டாமலிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மாநகராட்சி சார்பில் கடலுாரில் சேகரமாகும் குப்பைகளை கொட்ட தேர்வு செய்யும் இடத்திற்கும் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கடந்த செப்டம்பரில் கடலுார் அடுத்த வெள்ளப்பாக்கம் ஊராட்சியில் 90 ஏக்கரில் ஏற்கனவே செயல்பட்டு கைவிடப்பட்ட விதைப் பண்ணை நிலத்தை பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டது. அந்த இடத்தை கடந்த செப்., 9ம் தேதி பார்வையிட சென்ற போது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, தர்ணாவிலும் ஈடுபட்டனர்.அடுத்து, கடலுார் கூத்தப்பாக்கம் கான்வென்ட் பஸ் நிறுத்தம் அருகில் குப்பை கிடங்கு அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் இடம் தேர்வு செய்தனர்.
இதற்கும் அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் கடந்த நவ., 15 ம் தேதி சம்பவ இடத்தில் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். கலெக்டரை சந்தித்தும் மனு அளித்தனர். இதனால் கடலுார் மாநகராட்சியினர், குப்பை கொட்ட இடமின்றி தவிக்கும் நிலை உள்ளது.கடலுார் திருப்பாதிரிபுலியூர் ஜவான்பவன் சாலையோரம் கெடிலம் ஆற்றிலும் தென்பெண்ணையாற்று பகுதியிலும் குப்பைகளை கொட்டி மாநகராட்சியினர் சமாளிக்கின்றனர்.
இதனால், சுற்றுப் பகுதி நீர் நிலைகள் மாசுபடுகின்றன. மேலும், கடலுாரில் முழுமையாக குப்பைகளை அகற்ற முடியாமலும் பல இடங்களில் குவியலாக தேங்கி கிடக்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வாக, குப்பை கொட்ட நிரந்தரமாக இடத்தை ஒதுக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநகராட்சி ஆணையர் விஸ்வநாதன் கூறுகையில், நகராட்சியில் குப்பை தேங்காமலிருக்க தேர்வு செய்த இடத்தில் எதிர்ப்பு தெரிவிப்பதால் குப்பை கொட்டுவதில் சிக்கல் நீடிக்கிறது. குப்பை கொட்டுவதற்கான இடங்கள் விரைவில் தேர்வு செய்து, கலெக்டரின் ஒப்புதலுடன் செயல்படுத்தப்படும் என, தெரிவித்தார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement