சென்னை : சென்னை போயஸ் கார்டனில், ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தின் சாவியை, அவரது அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக்கிடம், சென்னை கலெக்டர் விஜயதாரணி நேற்று ஒப்படைத்தார்.

உடன் கணவருடன் சென்று வீட்டை திறந்து பார்த்த தீபா, 'வீட்டில் எதுவுமே இல்லை; காலியாக உள்ளது' என்றார்.சென்னை போயஸ் கார்டனில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த, 'வேதா இல்லம்' உள்ளது.
இதை நினைவு இல்லமாக மாற்ற, அ.தி.மு.க., அரசு முடிவு செய்து அவசர சட்டம் பிறப்பித்தது. அதன்பின், வேதா இல்லம் கையகப்படுத்தப்பட்டது. அதற்கான இழப்பீடு தொகை சென்னை சிவில் நீதிமன்றத்தில், 'டிபாசிட்' செய்யப்பட்டது. ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற, அரசு எடுத்த நடவடிக்கையை எதிர்த்து, ஜெயலலிதாவின் வாரிசுகளான, அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி சேஷசாயி, வேதா நிலையத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்று அறிவித்ததுடன், மூன்று வாரத்தில் வீட்டின் சாவியை மனுதாரர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, வேதா இல்லத்தின் சாவியை, தங்களிடம் ஒப்படைக்கக் கோரி, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் தீபா, தீபக் ஆகியோர், கடந்த 27ம் தேதி தனித்தனியாக மனு அளித்தனர்.
இது குறித்து, சென்னை கலெக்டர் விஜயராணி, அரசிடம் ஆலோசித்து நேற்று காலை வேதா இல்ல சாவியை, தீபா, தீபக் ஆகியோரிடம் ஒப்படைத்தார். இருவரும் சாவியுடன் ஜெயலலிதா நினைவிடம் சென்று வணங்கினர். பின், போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் சென்றனர். தீபாவின் கணவர் மாதவனும் உடன் சென்றார்.