சென்னை: வடகிழக்கு பருவமழையால், சென்னையில் ஏற்பட்ட பெரும் வெள்ள பாதிப்பிற்கு காரணமான அலட்சிய அதிகாரிகள் மற்றும் ஊழல் ஒப்பந்ததாரர்கள் குறித்து பட்டியல் தயாரிக்கும் பணி வேகம் எடுத்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வடிகால், சாலை பணிகள், அதில் நடந்த முறைகேடுகள் குறித்தும் கணக்கெடுக்கப்படுகிறது. பட்டியல் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள சென்னை மாநகராட்சி நிர்வாகம், இது குறித்த விரிவான அறிக்கையை, அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதால், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததார்கள் கலக்கம் அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னையில், கடந்த ஒரே மாதத்தில், 105 செ.மீ.,க்கு மேல் மழை பெய்தது. மேலும், ஒரே நாளில், ஆறு மணி நேரத்தில் 20 செ.மீ., அளவிற்கு மழை பெய்தது. இதனால், மாநகராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட தெருக்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடானது. குறிப்பாக, மாம்பலம், தி.நகர், கொளத்துார், புளியந்தோப்பு, திருவொற்றியூர், மணலி, வியசார்பாடி உள்ளிட்ட பகுதிகள் மழைநீர் தேக்கத்தால் பாதிக்கப்பட்டன.
அப்பகுதிகளில் மழைநீர் வடிகாலில் நீர் செல்லாததாதல், மோட்டார் பம்புகள் கொண்டு நீர் வெளியேற்றும் பணி நடந்தது.மோட்டார் பம்புகள் வாயிலாக நீர் அகற்றப்பட்டாலும், ஒரு வாரத்திற்கு பின் தான் மழைநீர் முழுதும் அகற்றப்பட்டது. இதனால், வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசித்த மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. வீடுகளிலும் மழைநீர் புகுந்ததால், வீட்டு உபயோக பொருட்களும் சேதமடைந்தன.
இதற்கு மழைநீர் வடிகால் முறையாக துார் வாராதது மற்றும் பல்வேறு இடங்களில் இணைப்பு இல்லாதது, அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் கூட்டு முறைகேடு தான் காரணமாக கூறப்படுகிறது. எனவே, 2016 முதல் 2021 மார்ச் வரை, சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், அதற்கான செலவு, அப்போது, பணியை மேற்கொண்ட தலைமை பொறியாளர் முதல் இளநிலை பொறியாளர்கள், அவர்கள் ஒப்புதல் அளித்த டெண்டர்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் கணக்கெடுக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக களம் இறங்கியுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி
இதனால், மாநகராட்சி பணிகளில் அலட்சியமாக செயல்பட்ட பொறியாளர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை கலக்கம் அடைந்துள்ளனர். மேலும், பணிகளை முறையாக செய்யாமல் ஊழலில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள் குறித்த விபரங்களும் திரட்டப்படுவதால், மக்கள் பணத்தில் 'கை' வைத்த ஒப்பந்ததாரர்களுக்கும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் இந்தாண்டு போல், 2015ம் ஆண்டிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அந்தாண்டும், இதே அளவில் மழை பெய்தது. அதன் பின், மழைநீர் வடிகால் இல்லாத பகுதிகளில், புதிதாக வடிகால் கட்டப்பட்டது. குறிப்பாக, அடையாறு, கூவம் ஒருங்கிணைந்த வடிகால் 1,385 கோடி ரூபாய் செலவில், 406 கி.மீ., நீளத்துக்கு பணிகள் முடிந்துள்ளன. அதேபோல், கொசஸ்தலை ஆறு ஒருங்கிணைந்த வடிகால் 3,220 கோடி ரூபாய் செலவில், 769 கி.மீ., நீளத்துக்கு பணி நடந்து வருகிறது.
கோவளம் வடிநில பகுதி ஒருங்கிணைந்த வடிகால் 1,714 கோடி ரூபாய் செலவில் துவங்கி, நீதிமன்ற உத்தரவால் நிறுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 100 கோடி ரூபாய்க்கு மேல், தி.நகர், மாம்பலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளது.தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பெரு நிறுவன சமூக பங்களிப்பு நிதி போன்றவற்றின் வாயிலாக, குளங்கள் சீரமைக்க, 210 குளங்களில் பணிகள் துவங்கப்பட்டன. அதில், 147 குளங்களில், 62.38 கோடி ரூபாய் செலவில் பணிகள் முடிந்துள்ளன.
இதைத்தவிர, ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முன் மழைநீர் வடிகால், நீர்நிலைகள் துார் வார மற்றும் பழுது சரிபார்க்க, இணைப்பு வழங்க 2016 முதல் 2020ம் ஆண்டு வரை ஆண்டுக்கு, 30 கோடி ரூபாய் என, 150 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்தாண்டு மட்டுமே, 30 கோடி ரூபாய்க்கு பதிலாக 10 கோடி ரூபாய் துார் வாரும் பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது.
5,000 சாலைகள் சேதம்
இவ்வாறு ஐந்தாண்டு களில் 2,000 கோடி ரூபாய்க்கு மேல், மழைநீர் வடிகால் துறைக்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில், சீரமைக்கப்பட்ட குளங்களின் கரைகள், மக்களின் பயன்பாட்டுக்கு வராமலேயே இடிந்துஉள்ளன.மழைநீர் வடிகால்கள், சாலை பணிகளில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்கள் தான் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் மழைநீர் வடிகால் இணைப்புக்கு என்று நிதி ஒதுக்கீடு செய்தும், பல்வேறு கால்வாய்களில் இணைப்பு இல்லாததும், மழைநீர் தேக்கத்திற்கு காரணமாக உள்ளது.
அதேபோல், சட்டசபை தேர்தலுக்கு முன் போடப்பட்ட சாலைகளும், மழைக்கு தாக்கு பிடிக்காமல், குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. அந்த வகையில், 5,000 சாலைகள் சேதம் அடைந்துள்ளன.
![]()
|
இதுபோன்ற ஐந்தாண்டுகளில் பல்வேறு துறைகளில் நடந்த முறைகேடுகள் குறித்தும், தவறு செய்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் குறித்தும் பட்டியல் தயாரிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. விரைவில் பட்டியல் தயாரிப்பு பணி முடிந்து, அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.
அதன் பின் தவறு செய்த அதிகாரிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஒப்பந்ததாரர்கள் கறுப்பு பட்டியலில் இணைக்கப்பட்டு, வரும் காலங்களில் மாநகராட்சி ஒப்பந்தங்களில் பங்கேற்காத அளவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
ஐந்து ஆண்டுகளில் ரூ.2,000 கோடி!
* கடந்த 2016 முதல் 2020ம் ஆண்டு வரை, ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முன், மழைநீர் வடிகால், நீர்நிலைகள் துார் வார மற்றும் பழுது சரிபார்க்க, இணைப்பு வழங்க ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் என 150 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்தாண்டு மட்டும் துார் வாரும் பணிகளுக்கு 10 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.
* கடந்த ஐந்தாண்டுகளில் 2,000 கோடி ரூபாய்க்கு மேல், மழைநீர் வடிகால் துறைக்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.
* ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 100 கோடி ரூபாய்க்கு மேல், தி.நகர், மாம்பலம் உள்ளிட்ட மாநகரின் முக்கிய பகுதிகளில், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.
* தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பெரு நிறுவன சமூக பங்களிப்பு நிதி போன்றவற்றின் வாயிலாக, குளங்கள் சீரமைக்க, 210 குளங்களில் பணிகள் துவங்கப்பட்டன. அதில், 147 குளங்களில் 62.38 கோடி ரூபாய் செலவில் பணிகள் முடிந்துள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE