ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் காதலித்து ஏமாற்றப்பட்ட 25 வயது பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது கடிதத்தில், 'இது லவ் ஜிகாத்' என குறிப்பிட்டுள்ளார்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த 25 வயது பெண், இன்ஜினியரிங் படித்தவர். இவரது பக்கத்து தெருவில் வாடகை வீட்டில் வசித்தவர், அன்வர் மகன் ஷேக்முகமது, 30. இவர் 2018ல் ராமநாதபுரம் தனியார் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி உள்ளார். அப்போது, அப்பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். ஷேக் முகமது அம்மாவும் இதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாக கூறி, பெண்ணிடம் உறவு கொண்டுள்ளார்.
இந்நிலையில், 2019ல் ஷேக் முகமது குடும்பம் திருச்சி சென்றது. அதன்பின், திருமணம் செய்ய மறுத்ததோடு அலைபேசி எண்ணையும் 'பிளாக்' செய்துள்ளார். இதனால், மனமுடைந்த பெண் நேற்று முன்தினம்(டிச.,09) துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் எழுதிய நான்கு பக்க கடிதத்தில், மோசடியாக தன்னை திட்டமிட்டு காதலிப்பதாக கூறி, பாலியல் ரீதியாக பயன்படுத்தியதாகவும், இதேபோல் பல பெண்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், 'இது லவ் ஜிகாத்' என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன் தற்கொலைக்கு காரணமான ஷேக் முகமது, அவரது தந்தை அன்வர், தாய், மாமா ஆகியோரை கைது செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கேணிக்கரை போலீசார், நான்கு பேர் மீதும் தற்கொலைக்கு துாண்டியதாக வழக்கு பதிவு செய்தனர்.ஷேக் முகமதுவை கைது செய்ய, தனிப்படை போலீசார் திருச்சி சென்றுள்ளனர்.
ஹிந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலர் ராமமூர்த்தி அறிக்கையில், 'அப்பாவி பெண் பொறியாளர் தற்கொலைக்கு காரணமான ஷேக்முகமதுவை கைது செய்து, பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு பதிய வேண்டும். 'தற்கொலை செய்த பெண் லவ் ஜிகாத் பற்றி குறிப்பிட்டுள்ளதால், முழுமையாக விசாரணை செய்ய வேண்டும்.'போலீசார் மெத்தனம் காட்டினால், தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.