துாத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 1882 டிச., 11 ல் சின்னச்சாமி ஐயர் - லட்சுமி அம்மையார் தம்பதிக்கு மகனாக அவதரித்தார் மகாகவி பாரதியார். பெற்றோர் அவருக்கு இட்டபெயர் சுப்ரமணி. ஆனால் 11ஆவது வயதில் கவிபாடும் ஆற்றலினால், எட்டயபுரம் மன்னரால் பாரதி என்ற சிறப்புப் பெயர் பெற்றார். அன்று முதல் சுப்பிரமணிய பாரதி என அழைக்கப்பட்டார்.
பாரதியார் காசிக்கு சென்று தங்கியிருந்த காலங்களில் சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகளை கற்றார். ஆங்கிலம், வங்காளம் மொழிகளிலும் புலமை பெற்றார். அனைத்து மொழிகளையும் அறிந்ததால் தான் அவரால் 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாட முடிந்தது.
'யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவனைப்போல், இளங்கோவைப்
போல்
பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை' என்றும் பாடினார்.
இவரின் தமிழ்ப்பற்று, தேசியப்பற்று, தெய்வீகப்பற்று ஆகியவற்றை விட தீர்க்கதரிசனம் மேலோங்கி நின்றது.
ஆனந்த சுதந்திரம்
வானொலி, 'டிவி' இல்லாத அக்காலத்தில் இவர் பாடிய கவிதைதான்
'காசிதனில் புலவர் பேசும் உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்' என்பதாகும்.
சுதந்திரம் கிடைப்பதற்கு முன் 1900 களில் இவர் பாடிய பாடல்
'ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்' என்பதாகும்.
இவர் 1912 ல் பகவத்கீதையை தமிழில் மொழி பெயர்த்தார். கீதையின் 10வது அத்தியாயத்தில் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு விஸ்வரூபம் காட்டி உபதேசம் செய்த போது 24, 26, 35வது ஸ்லோகங்களில் மரங்களில் தான் அரசமரமாகவும், நீர்த்தேக்கங்களில் தான் சமுத்திரமாகவும், காலங்களில் தான் மலர்கள் நிறைந்த வசந்த காலமாக இருப்பதாகவும் கூறுகிறார்.
அதை அடியொற்றி பாரதியார்
'காக்கை குருவி எங்கள் ஜாதி
பெருங்கடலும் நீள் மலையும்
எங்கள் கூட்டம்' என்று பாடினார்.
வானை அளப்போம்
வானவியலிலும் தன் தீர்க்கதரிசனத்தைக் காட்டினார் முண்டாசுக்கவிஞர் பாரதி.நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதிக்கும் முன்னரே அதுகுறித்து பாடியுள்ளார்.
'வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்
சந்திர மண்டலத்து இயல் கண்டு தெளிவோம்' என்பது அவரது கவிதை வரிகள்.
கல்வி கற்பதற்கு பசி, ஏழ்மை காரணமாக இருக்க கூடாது என்பதற்காக, நமது ஆட்சியாளர்கள் கையாண்ட மதிய உணவுத்திட்டம், சத்துணவுத் திட்டம் ஆகியவை குறித்து பாரதி அந்த காலத்திலேயே முன்கூட்டியே அறிந்திருப்பார் போலும்.
'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் கட்டல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்ற பாடல் எழுதி நம்மைப் பரவசப்படுத்தினார்.
தன் 39-ம் வயதில் உயிர் நீத்த இந்தத் தமிழ்க் கவி பலகாலம் உயிரோடு இருந்திருந்தால் என்னென்ன தீர்க்கதரிசனம் கண்டிருப்பாரோ என்ற எண்ணம் நம்மை வியக்க வைக்கிறது.

-டாக்டர் பி.எஸ்.சண்முகம்
முடநீக்கியல் துறை
ஓய்வு பேராசிரியர், மதுரை
drpssmdu@gmail.com