பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் தென்பெண்ணையாறு கரையோரம் 2000ம் ஆண்டு பழமை வாய்ந்த சங்க கால சுடு மண் குழாய் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் தென்பெண்ணையாற்றில் கூட்டுகுடிநீர் திட்டத்திற்காக போர்வெல் போடும் பணி நடந்தது. அப்போது பழங்கால குடிநீர் குழாய் கிடைத்துள்ளது. தகவலறிந்த உளுந்தாம்பட்டு தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், வரலாற்று ஆர்வலர்கள் எனதிரிமங்கலத்தைச் சேர்ந்த மோகன், ரவீந்தர், சுந்தர் ஆகியோர் தென்பெண்ணை ஆற்றின் மேற்பரப்பில் கள ஆய்வு செய்தனர்.
தென்பெண்ணையாற்றில் பதித்திருந்த பழங்கால குடிநீர் குழாய், 2000ம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க காலத்தை சேர்ந்த சுடுமண் குடிநீர் குழாய் எனத் தெரிந்தது.தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறியதாவது:
![]()
|
தென்பெண்ணை ஆற்றின் கரைப்பகுதிகளில் கடந்த வாரம் சுடுமண் பொம்மை, சுடுமண் புகைபிடிப்பான், வட்டசில்லு ஆகியவை கிடைத்தன. தற்போது எனதிரி மங்கலம் ஆற்றுப்பகுதியில் 2000ம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுடுமண்ணால் ஆன குடிநீர் குழாயை ஆற்றின் மேற்பரப்பில் ஆய்வில் கண்டு பிடித்தோம். சுடுமண் குடிநீர் குழாய் 30 செ.மீ., நீளமும், 17 செ.மீ., விட்டமும் கொண்டது. 4 அடி நீளத்தில் விரிசல் விட்டுள்ளது. மீதமுள்ள பகுதிகள் ஆற்றின் வெள்ளத்தில் சிதைந்துள்ளன. இச்சுடுமண் குழாய்கள் சொருகு முறையை கொண்டது இதனை மக்கள் குடிநீர் குழாயாக பயன்படுத்தி உள்ளனர்.
நிலத்தின் அடியில் யானையின் நீண்ட துதிக்கை போல் குழாய்கள் அமைத்துள்ளனர்.
![]()
|
இலக்கியங்களுக்கு வலு சேர்க்கும் வகையில், கீழடி , அரிக்கன்மேடு, அழகன்குளம், போன்ற பகுதியில் தமிழக அரசின் அகழ்வாய்வுகளில் சுடு மண் நீர் குழாய்கள் கிடைத்துள்ளன.பழந்தமிழர் நீர் செல்லும் குழாயின் ஒரு முனையை குறுகலாகவும், மறுமுனையை அகலமாகவும் வடிவமைத்து குழாய்களை பொருத்தியுள்ளனர். இது போன்ற மேம்பட்ட அமைப்பில் இரு குழாய்களை இணைக்க களிமண் உள்ளிட்ட பொருட்கள் தேவைப்படவில்லை. மேம்பட்ட குடிநீர் குழாய்கள் இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் மற்றும் சங்க இலக்கிய வரலாற்றுச் சான்றுகள் தெளிவாக உள்ளது. சங்ககால தமிழர்கள் நீர் மேலாண்மையில் இத்தகைய தொழில் நுட்பத்தை பயன்படுத்தியது முக்கிய சான்றாகும். தொல் பொருட்கள், உறை கிணறுகள்,குடிநீர் குழாய்களை பார்க்கும் போது சங்ககால மக்கள் இப்பகுதிகளில் வாழ்ந்துள்ளதற்கு சான்றாக அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.