பல்ராம்பூர்: இந்தியாவை இன்னும் சக்திவாய்ந்த மற்றும் வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உ.பி., மாநிலம் பல்ராம்பூரில் ரூ.9,800 கோடி மதிப்பிலான நீர்பாசன திட்டமான சரயு தேசிய கால்வாய் திட்டத்தை துவங்கி வைத்து பிரதமர் மோடிபேசியதாவது: கடந்த 8 ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் நமது வீரர்கள் உயிரிழப்பிற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் மரணம், ஒவ்வொரு தேசபக்தர்களுக்கு ஏற்பட்ட இழப்பு. நாட்டின் ஆயுதப்படையை தன்னிறைவு பெற, கடினமாகவும் தைரியமாகவும் உழைத்தார். இதற்கான பலனை நாம் பார்க்கிறோம்.
ராணுவ வீரர் என்பவர், ராணுவத்தில் பணிபுரியும்போது மட்டும் வீரராக இருப்பது கிடையாது. அவரது வாழ்க்கை முழுவதும் வீரராக வாழ்கிறார். பிபின் ராவத், நாட்டின் ஒவ்வொரு தருணத்திலும் பெருமை மிக்கவராக திகழ்கிறார். இதனால், நாடு வேதனையில் இருந்தாலும், இந்தியா தேங்கி நின்று விடாது. வெளியேயும் உள்ளேயும் சவால்களை நாம் ஒற்றுமையாக இருந்து எதிர்கொள்வோம். இந்தியாவை இன்னும் சக்திவாய்ந்ததாகவும், வளர்ச்சியடைந்த நாடாகவும் மாற்றுவோம்.
கேப்டன் வருண் சிங்கை காப்பாற்றுவதற்கு டாக்டர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். அவரை காப்பாற்றும்படி கடவுளை வேண்டி கொள்கிறேன். அவரது குடும்பத்துடன் நாட்டு மக்கள் உள்ளனர். விபத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஆதரவாக நாடு உள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்கு, தண்ணீர் பற்றாக்குறை தடையாக மாறாமல் இருப்பது முக்கியம். நதிநீரை சரியான முறையில் பயன்படுத்துவதற்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. சரயு நஹர் தேசிய திட்டம் நிறைவு செய்யப்பட்டது, பா.ஜ., ஆட்சியின் நேர்மையான நோக்கங்களுக்கும் திறமையான பணிக்கும் உதாரணம்.
சிலர் பெயருக்கு ரிப்பன் வெட்டி விழா நடத்துகின்றனர். ஆனால், நாங்கள் திட்டங்களை சரியான நேரத்தில் முடிப்பதற்கு முன்னுரிமை அளிக்கிறோம். கடந்த கால அரசுகளின் மெத்தன போக்கால், நாடு 100 மடங்கு விலை கொடுக்க வேண்டி உள்ளது.
இயற்கை விவசாயம் குறித்து வரும் 16 ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியை பார்வையிட வேண்டும் என அனைத்து விவசாயிகளுக்கும் அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE