திருவனந்தபுரம்: மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக சட்டத்தை திருத்தி நீங்களே பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயனுக்கு காட்டமாக கடிதம் எழுதியுள்ளார்.
கேரள பல்கலைகழகங்களில் உயர் பதவி நியனங்களில் அரசியல் குறுக்கீடு நடைபெற்று வருவதாகவும், இதில் கவர்னருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக கவர்னர் ஆரிப் முகம்மது கான் கேரள கம்யூ. முதல்வர் பினராயி விஜயனுக்கு 5 பக்க கடிதம் எழுதியுள்ளார். அதில், கூறியுள்ளதாவது,
கேரள மாநில பல்கலைகழகங்களின் வேந்தர் என்ற முறையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக, நடந்த சமீபத்திய சம்பவங்களும், விதிகள் மற்றும் நடைமுறைகளை முழுவதுமாக மீறி பல்கலைக்கழகங்களில் பல்வேறு நியமனங்கள் தொடர்பாக எனக்கு அழுத்தம் கொடுக்கப்படும் விதமும் என்னை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது.
பல்கலைக்கழகங்கள் அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டவர்கள் நிரம்பி வழிவதும், கல்வியாளர் அல்லாதவர்கள் கல்வி சார்ந்த முடிவுகளை எடுப்பதும் தற்போதைய நிலையாக உள்ளது. பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் திருத்தம் செய்து, நீங்கள் வேந்தர் பதவியை ஏற்றுகொள்ள அவசரச் சட்டத்தை கொண்டு வந்தால், நான் அதில் உடனடியாக கையெழுத்திடுவேன். இல்லையெனில், வேந்தரின் அதிகாரங்களை கவர்னரிடமிருந்து, முதல்வருக்கு மாற்றக்கூடிய சட்டப்பூர்வ ஆவணத்தைத் தயாரிக்குமாறு அட்வகேட் ஜெனரலிடம் தெரிவிக்கவும். இவ்வாறு அந்த கடித்தில் கவர்னர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE