தமிழக மக்களின் நலனுக்காக தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் குவிந்து கிடக்க, தேவை இல்லாமல், தமிழ் புத்தாண்டு விவகாரத்தில் தலையிடுகிறது, தமிழக அரசு. உலகில் உள்ள தமிழ் மக்களின் பாரம்பரியம், கலாசாரம், பண்பாடுகளை சிதைத்து, சீரழித்து, காலில் போட்டு மிதிக்கும் வகையில், தை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என்கிறது, தி.மு.க., அரசு.
பலவித சந்தேகம்
அதுபோல, கொரோனா தொற்று பரவி விடும் என்ற காரணத்தை கூறி, பள்ளிகளில் நடக்கும் இறை வணக்கத்திற்கும் தமிழக அரசு தடை போட்டுள்ளது. இது, பல விதமான சந்தேகங்களை கிளப்புகிறது.
தமிழ் புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றுவதற்கு முன், சமய சான்றோர், ஆன்மிகவாதிகளிடம் கருத்தை கேட்டிருக்க வேண்டும். இல்லை, உண்மையான தமிழ் ஆர்வலர்கள், தமிழறிஞர்களிடம் கேட்டிருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யவில்லை.
சரி போகட்டும். தங்கள்வீட்டில் உள்ள பெரியவர்களிடம் அல்லது முதல்வர் தன் மனைவியிடம் கேட்டிருந்தால் கூட அவர்களும் சொல்லி இருப்பர், சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என்று!
மக்களின் கலாசாரம், பண்பாடு என்பது நீண்ட கால பழக்க, வழக்கம். அதற்கு பெரிய அளவில் காரணங்களும் இருக்கும்; சில நேரங்களில் ஒரு காரணம் கூட இருக்காது. எனினும், காலம் காலமாக பின்பற்றப்படுவது தான் கலாசாரம்.அத்தகைய தமிழ் கலாசாரத்தின் படி, சித்திரை முதல் தேதி தான், தமிழர் புத்தாண்டு என்பது கல் தோன்றா காலத்திலிருந்து பின்பற்றப்படும் மரபு, கலாசாரம், பண்பாடு.அதை, ஆட்சிக்கு வரும்போதெல்லாம், ஒவ்வொரு முறையும் மாற்றி அறிவிப்பதை, தி.மு.க., அரசு வழக்கமாக கொண்டுள்ளது.
ஆனால், மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் தை முதல் நாளை துாக்கி கடாசி விட்டு, 'சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு' என அறிவித்து, கொண்டாடும்.ஒரு கருத்தை பொதுவெளியில் சொன்னால் அதை பெரும்பாலானோர் ஏற்க வேண்டும். வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் எந்த கருத்தும், இப்படித் தான், அதிகபட்சம் ஐந்தாண்டுகளுக்குத் தான் இருக்கும்; அதன் பின் மாறி விடும்.
தி.மு.க.,வுக்கு தோல்வி தான்
அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக சட்டங்கள், உத்தரவுகள் மூலம், 'தமிழ் புத்தாண்டு தை முதல் நாள் தான்' என அறிவித்தால், அதையும் மக்கள் ஏற்றுக் கொள்ளத் தான் செய்வர். ஆனால், சத்தம் காட்டாமல், தங்கள் வீடுகளிலும்,வழிபாட்டு தலங்களிலும், சித்திரை முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி விடுவர். அரசு மட்டும் தனித்து இருக்க வேண்டியது தான்.
தி.மு.க., அரசு அறிவிக்கும் எதையும் பின்பற்றுவதில்லை என்ற கோட்பாட்டை வைத்திருக்கும், அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வினர், அதன் நட்பு கட்சிகளை சேர்ந்தோர், சித்திரை முதல் நாளை கொண்டாடி மகிழ்ந்து விடுவர். தி.மு.க., அரசுக்கு தோல்வி தான் ஏற்படும்.வேண்டுமானால், தி.க., வீரமணி, சுபவீரபாண்டியன், திருமாவளவன் போன்றோர், 'ஆமாம் சாமி' போட்டு, தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவர். எனினும், அவர்களின் வீடுகளில் உள்ள பெரியவர்கள், சித்திரை முதல் நாளுக்காக காத்திருப்பர், அந்த நாளை கொண்டாட!
வெற்றி நாள் தைத்திருநாளும் முக்கியமான நாள் தான். தமிழக அரசு அந்த நாளை, தமிழ் புத்தாண்டாக அறிவிக்கிறது என்பதற்காக புறக்கணிக்க முடியாதது. அந்த அளவுக்கு முக்கியமான நாள் தான் அது. விவசாயிகளின் வெற்றி நாள் அது. குறிப்பாக, தங்கள் வாழ்வாதாரம் தழைத்தோங்குவதற்கு ஆதாரமாக இருக்கும் மாடுகள், ஏர் மற்றும் சூரியனை போற்றி, வீட்டு முற்றத்தில் பொங்கலிட்டு சூரிய வழிபாடு செய்வது, காலம் காலமாக தமிழர்கள் பின்பற்றும் கலாசாரம்.அந்த நாளிலும் அரசியல் செய்து, தை பொங்கல் பண்டிகையை, வழிபாடு இல்லாமல், பெயரளவுக்கு விழாவாக நடத்தி வருவதால், யாருக்கும் திருப்தி இல்லை. இது, 'சாப்பாடு' என தாளில் எழுதி வைத்து, அதை சாப்பிடுவது போன்றதாகும்.
தைத்திருநாள் பொங்கல்முழுக்க முழுக்க கிராமத்து மண் வாசனையோடு, அறுவடை முடித்த ஆனந்தத்தோடு விவசாயமக்கள் ஆதிக்கம் செலுத்தும் போகி, பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என, நான்கு நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. சித்திரை திங்கள் முதல் நாள் வரும் தமிழ் புத்தாண்டு, இறை வழிபாட்டோடு கூடிய குடும்பத்தில் குதுாகலம் நிலவ வேண்டும் என்பதற்காக வழிபடும் நாள்.அந்த நாள் சிறப்பான நாளாக இருப்பதால் தான், தெலுங்கு மொழி பேசுவோர், சித்திரை முதல் நாளை தெலுங்கு புத்தாண்டாக, 'யுகாதி' என்று கொண்டாடுகின்றனர்.
கடைப்பிடிக்கும் நடைமுறை
மலையாள மொழி பேசுவோர் மலையாள புத்தாண்டை, 'விஷூ' என்றும், கன்னட மொழி பேசுவோர் கன்னட புத்தாண்டை 'சங்கராந்தி'என்றும் சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றனர்.கட்சி பெயரிலும், எதற்கு எடுத்தாலும், திராவிடம் என பேசும் இந்த அரசு, இந்த விஷயத்திலாவது பிற திராவிட நாடுகளின் பழக்க, வழக்கங்களை பின்பற்றலாமே!காலண்டர் ஆண்டு என்பது ஜனவரியில் துவங்கி டிசம்பர் மாதம் வரையிலும், நிதியாண்டு என்பது ஏப்ரல் மாதத்தில் துவங்கி, அடுத்த ஆண்டின் மார்ச் மாதம் வரையிலும் இருக்கும்.
அது போல, தமிழ் புத்தாண்டு என்பது சித்திரையில் துவங்கி, பங்குனி மாதம் வரையிலும் இருப்பது ஆகும். இது, கால காலமாக பல நுாற்றாண்டுகளாக அரசாலும், பொது மக்களாலும்கடைப்பிடித்து வரும் நடைமுறை.
வேடிக்கை
மூச்சுக்கு முன்னுாறு தரம், 'தமிழ், தமிழ்' என்று தங்களது வயிற்று பிழைப்பிற்காகவும், தங்கள் விலாசத்தை மக்கள் மத்தியில் புதுப்பித்து கொள்வதற்காகவும் முழக்கமிடும், தி.மு.க.,வினர், தமிழர்களின் முகவரியை அழிக்க நினைப்பது தான் வேடிக்கையாக உள்ளது.தமிழகத்தில் சித்திரை முதல் நாளில், தை புத்தாண்டை கொண்டாடா விட்டால், அண்டை நாடுகளில் உள்ள தமிழர்கள், அந்த நாளைத் தான் புத்தாண்டாக கொண்டாடுவர். இலங்கையில் வாழும் நம் தமிழ் மக்கள் சித்திரை முதல் நாளை கொண்டாடுவர். ஆனால், அதன் அருகில் உள்ள தமிழகத்தில் தை மாதத்திற்கு புத்தாண்டு கொண்டாட்டம் தள்ளி வைக்கப்பட்டிருக்கும்.
நம் தொப்புள்கொடி சொந்தம் என சொல்லிக் கொள்வோர் ஒரு நாளில் புத்தாண்டை கொண்டாடுகின்றனர். ஆனால், அந்த நாளில் தமிழகத்தில்கொண்டாட்டம் இல்லை என்பதை எப்படி ஏற்றுக் கொள்வது? தமிழ் புத்தாண்டை தமிழர்கள் முடிவு செய்து கொள்வர். அதற்குப் பதில், ஆட்சியை திறம்பட நடத்தவும், மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் தடையற கிடைப்பதற்கும், தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்.
குறிப்பாக, சில மாதங்களுக்கு முன், சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டவற்றை நிறைவேற்ற முயற்சியுங்கள்.குறிப்பாக, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மாதம் தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை, மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உதவித்தொகை, கல்வி கட்டணம் ரத்து, பழைய ஓய்வூதியத் திட்டம்அமல் போன்றவற்றை அமல்படுத்த பாருங்கள்.தி.மு.க.,வால் அள்ளி வீசப்பட்ட வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என்று பொது மக்களாலும், அரசு ஊழியர்களாலும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.அவற்றை நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்யலாம். மாறாக, தமிழ் புத்தாண்டு இந்த நாள் தான் என அறிவித்து, வாத, பிரதிவாதங்களில் கவனம் செலுத்தாமல், மாநில நிர்வாகத்தில் கவனமாக இருக்கலாம்.
அவமானம்
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம்எப்போது வழங்கப்படும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில், மக்கள் எண்ணத்திற்கு முற்றிலும் மாறான வகையில், 2022ம் ஆண்டு பொங்கல் பரிசு பையின் முகப்பில், 'இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்' என்று குறிப்பிட்டிருப்பது, தமிழக மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் விதமாக அமைந்துள்ளது. மக்களின் உணர்வுகளை மதிக்காமல், 'தை மாதம் முதல் நாளே தமிழ் புத்தாண்டு' எனும் சட்டம், முந்தைய தி.மு.க., அரசால், 2008-ல் இயற்றப்பட்டது.
ஆனால், யாரும் அந்த நாளில் தமிழ் புத்தாண்டை கொண்டாடவில்லை. இது, அப்போதைய மாநில அரசுக்கு ஏமாற்றம் மட்டுமல்ல; அவமானமும் கூட.தற்போதும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், வேதாளம் முருங்கை மரம் ஏறுவதை போல, தமிழர்களை ஏமாற்ற நினைத்து, தமிழ் புத்தாண்டு நாளை, தமிழக அரசு குழப்பிக் கொண்டிருக்கிறது.
உரிமையில் தலையீடு
தமிழர்களின் மத, வழிபாட்டு உணர்வு மற்றும் உரிமையில் தலையிடுவதே, தி.மு.க., அரசின் முக்கிய வேலையாக இருக்கிறது. தமிழகத்தின் தேவைகள், முன்னேற்றம் இவற்றில் அக்கறை- எடுத்துக்கொள்வதற்கு பதிலாக எந்த தேதியை மாற்றலாம்; அதன் மூலம் ஹிந்துக்
களின் மத உணர்வுகளை எப்படி காயப்படுத்தலாம் என்பதிலேயே குறியாக இருக்கிறது.ஏப்ரல் 14ல், சித்திரை முதல் நாள். அன்று தான், தமிழ் புத்தாண்டு என்று இந்தியா, இலங்கை, மொரீஷியஸ், சிங்கப்பூர், மலேசியா உட்பட உலகம்முழுதும் வாழும் தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஹிந்து மதத்தை பின்பற்றும் மக்கள் மட்டுமல்ல, அனைத்து தமிழர்களுமே தமிழ் புத்தாண்டை நல்ல காரியங்கள், தொழில்கள் துவங்குவதற்கு ஏற்ற நாளாக கருதி, மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.வலிமையை காட்டிடுவர்தமிழர்களின் நம்பிக்கையிலும், பழக்க வழக்கங்களிலும், அவசியமில்லாமல் மூக்கை நுழைப்பதும், பக்தர்களின் நம்பிக்கைகளை சிதைப்பதிலும், தி.மு.க., அரசுக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. இதை மக்கள் என்றென்றும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டார்கள். தகுந்த நேரத்தில் தங்கள் வலிமையை, தவறாமல் காட்டிடுவர்!ஆட்சி அதிகாரம் கையில் இருகிறது என்பதற்காக, தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றலாம் என்ற சதி திட்டத்தை கைவிடுவதே தமிழக அரசுக்கு
நல்லது!
எம்.ரேணுகா
சமூக ஆர்வலர்.
தொடர்புக்கு:
இ-மெயில்: renukamm85@gmail.com