இந்திய நிகழ்வுகள்
கள்ளநோட்டு பறிமுதல்
போபால்: மத்திய பிரதேச தலைநகர் போபாலில் கள்ளநோட்டுகளை சூதாட்டக்காரர்களுக்கு வினியோகிக்க சிலர் சதித் திட்டம் தீட்டி இருந்தது அம்பலமானது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அதில் சம்பந்தப்பட்ட இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
எச்சில் துப்பிய ேபாலீசார் நீக்கம்
ஷாதுல்: மத்திய பிரதேசத்தின் ஷாதுல் மாவட்டத்தில் உள்ள கோபாரு காவல் நிலையத்திற்கு எஸ்.பி., அவ்தேஷ் கோஸ்வாமி நேற்று வந்தார். அப்போது காவல் நிலையத்தின் சுவர்களில் புகையிலை மற்றும் குட்காவின் கரை இருந்ததை கவனித்தார். அதற்கு, சப் இன்ஸ்பெக்டர், இரண்டு உதவி சப் இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமை கான்ஸ்டபிளும் காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பணியில் இருந்து நீக்கி எஸ்.பி., அதிரடி உத்தரவு பிறப்பித்தார்
'ஒமைக்ரான்' பாதிப்பு உயர்வு
புதுடில்லி: நம் நாட்டில் மரபணு மாறிய 'ஒமைக்ரான்' வகை கொரோனா வைரசால் அச்சுறுத்தல் நிலவி வருகிறது. இதுவரை டில்லி, ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த வகை வைரஸ் பரவி உள்ளது. இந்நிலையில் ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்ரிக்காவுக்கு பயணித்து, சமீபத்தில் டில்லி திரும்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது நேற்று உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து நாட்டில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
ரூ.42 லட்சம் கொள்ளை
சிவபுரி: மத்திய பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை மூன்று ஏ.டி.எம்., மையங்களில் உள்ள இயந்திரங்களை மர்ம நபர்கள் சிலர் உடைத்துள்ளனர். மேலும் அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பிச்சென்றனர். அந்த ஏ.டி.எம்., மையங்களில் 42 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக அந்த திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. அவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன
உயிரிழந்த முதியவருக்கு தடுப்பூசி?
ராஜ்கர்: மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் புருஷோத்தம் ஷாக்யவார், 78, என்ற முதியவர் கடந்த மே மாதம் உடல் நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் அவருக்கு தற்போது கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் 'டோஸ்' செலுத்தப்பட்டுள்ளதாக அவர் பயன்படுத்திய மொபைல் போனுக்கு நேற்று குறுஞ்செய்தி வந்துள்ளது. மேலும் அதற்கான தடுப்பூசி சான்றிதழும் இணையதளத்தில் வெளியிடப்பட்டதால் பெரும் சர்ச்சையானது. கம்ப்யூட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த பிழை நடந்துள்ளதாக, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக நிகழ்வுகள்

திருச்சி அருகே பஸ் மீது பைக் மோதியதில் இருவர் பலி: பஸ் தீப்பிடித்ததால் போக்குவரத்து பாதிப்பு
புதுக்கோட்டை-திருமயம் அருகே, அரசு பஸ் மோதிய விபத்தில், பைக்கில் சென்ற இருவர் உயிரிழந்தனர். அரசு பஸ் தீ பிடித்து ம எரிந்ததில், போக்குவரத்து பாதித்தது.
நேற்று இரவு 10.50 மணிக்கு, காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் சென்றது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே, பாம்பாற்று பாலத்தில் சென்ற போது, திருமயம் நோக்கி, எதிரே வந்த பைக் மீது, பல் நேருக்கு நேர் மோதியது. இதில், தீப்பற்றியதில், பைக்கில் வந்த இருவர் மீது தீ பற்றி/ உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், அரசு பஸ் ம முழுமையாக தீப்பிடித்து எரிந்தது. அரசு பஸ்சில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அரசு பஸ், பைக் மீது மோதியதில், பைக் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்தாக கூறப்படுகிறது. விபத்தில், பைக்கும், அதில் வந்த இருவரும் முழுமையாக எரிந்துவிட்டதால், இறந்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இதனால், புதுக்கோட்டை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து, திருமயம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு, தீயணைப்பு வாகனங்கள் வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

குளோரின் கசிவு: உரிமையாளர் பலி
பவானி:குளோரின் வாயு கசிவால், கம்பெனி உரிமையாளர் இறந்தார். ஈரோடு மாவட்டம், சித்தோட்டை அடுத்த சந்தைமேட்டில், சேலம் - கோவை நெடுஞ்சாலையில், தனியார் குளோரின் கம்பெனி, 15 ஆண்டுகளாக செயல்படுகிறது.
இதன் உரிமையாளர் தாமோதரன், 44, சித்தோடு அ.தி.மு.க., ஏழாவது வார்டு செயலர்.குளோரின் கம்பெனியில் கிரேன் உதவியுடன் ஒரு சிலிண்டரில் இருந்து மற்றொரு சிலிண்டருக்கு குளோரின் வாயு மாற்றுவர். நேற்று மதியம், 1:30 மணியளவில் சிலிண்டரை மாற்றி வைக்கும் பணி நடந்தது. அப்போது திடீரென சிலிண்டரில் இருந்து வாயு கசிந்தது.
பணியில் இருந்த தாமோதரன் உள்ளிட்ட மூவருக்கு மூச்சுத்திணறல்ஏற்பட்டது. இதில் தாமோதரன் இறந்தார்.குளோரின் கம்பெனிக்கு அருகில் இருந்த தறிப்பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்த,13 தொழிலாளர்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர்.
மூன்று தீயணைப்பு வாகனங்கள், நான்கு, 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டன.கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, எஸ்.பி., சசி மோகன், மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் உதயகுமார் வாயு கசிவு ஏற்பட்ட கம்பெனியை ஆய்வு செய்தனர்.சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு: 7 பேர் கைது
விருதுநகர்:விருதுநகர் அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்த ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் ஊரக எஸ்.ஐ., வீராசாமி தலைமையிலான போலீசார் புல்லலக்கோட்டையில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வடமலைக்குறிச்சியைச் சேர்ந்த மாதவன், 39 மற்றும் 26 - 36 வயதுள்ள ஆறு ஆண்கள் நாட்டு வெடிகுண்டு தயார் செய்தது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அங்கிருந்த நான்கு நாட்டு வெடிகுண்டுகள், அலுமினிய பவுடர்,நுால்கண்டு, பால்ரஸ் குண்டுகள், ரப்பர் பேஸ்ட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. வடமலைக்குறிச்சி ஊராட்சி தேர்தல் தொடர்பாக தங்கப்பாண்டியன், மாதவன் தரப்பு இடையே பகை உள்ளது. இதனால் அக்கிராமத்தில் தொடர்ந்து கொலை, குற்றச்சம்பவங்கள்நடந்தன. இது தொடர்பாக 2013ல் கொலை வழக்கில் சிறை சென்ற மாதவன் இரண்டு மாதங்களுக்கு முன் விடுதலையானார்.

கம்பம் ஆண் செவிலியர் தற்கொலை: நர்ஸ் கொலை வழக்கில் விசாரணைக்கு அழைத்ததால் சோகம்
உத்தமபாளையம்:ஆண்டிபட்டி நர்ஸ் செல்வி 40, கொலை வழக்கில் விசாரணைக்கு அழைக்கப் பட்ட நிலையில் கம்பம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய ராமச்சந்திர பிரபு 38, விஷம் குடித்து தற்கொலை செய்தார்.
தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திர பிரபு. ஐந்து ஆண்டுகளாக கம்பம் அரசு மருத்துவமனை செவிலியராக பணியாற்றினார். மனைவி ஈஸ்வரி போடி அரசு மருத்துவ மனையில் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் டிச.,10ல் ராமச்சந்திர பிரபு மாயமானார். மனைவி கொடுத்த புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரித்தனர்.
அலைபேசி சிக்னலை கண்காணித்தனர். கம்பம் புதுப்பட்டியை காட்டியது. மனைவி, ராமசந்திர பிரபுவின் தம்பி வீரக்குமார் அங்கு சென்று பார்த்தனர். ஊத்துக்காடு செல்லும் ரோட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.
இவரை ஆண்டிப்பட்டி அருகே பாப்பம்மாள்புரத்தில் நவ.,24ல் நடந்த நர்ஸ் செல்வி 40, கொலை வழக்கு தொடர்பாக அல்லிநகரம் போலீசார் விசாரணைக்கு அழைத்த நிலையில் தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.செல்வி கொலை குறித்து ஆண்டிபட்டி டி.எஸ்.பி., தங்ககிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. நேற்று திண்டுக்கல் டி.ஐ.ஜி., விஜயகுமாரி, தேனி எஸ்.பி., பிரவின் உமேஷ் டோங்ரே ஆகியோர் பாப்பம்மாள்புரத்தில் செல்வி வசித்த வீட்டை ஆய்வு செய்து விசாரணை விபரங்களை கேட்டறிந்தனர்.
தற்போது தங்கபாண்டியன் தரப்பை தாக்குவதற்காக மாதவன் தரப்பினர் நாட்டு வெடிகுண்டு தயாரித்தது போலீஸ் விசாரணையில் தெரிந்தது.தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
பைக்குகள் மோதல்; தம்பதி உயிரிழப்பு
ஓமலுார்:கல்லுாரி மாணவர் ஓட்டிவந்த பைக் மோதியதில் தம்பதி உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம், கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பாலன், 34. நெசவு தொழிலாளி. இவரது மனைவி கற்பகம், 30. மகன் சந்தோஷ், 11. மகனுக்கு உடல் நிலை சரியில்லை. பாலன் மனைவி, மகனை மருத்துவமனைக்கு 'ஆக்டிவா' பைக்கில் அழைத்து சென்றார்.
மதியம், 1:30 மணிக்கு கமலாபுரம் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, கோவை தனியார் கல்லுாரியில் பயிலும் மாணவர் அயூப்பிரைட், 22, ஓட்டி வந்த 'பஜாஜ் கேடிஎம்' பைக் மோதியது. காயமடைந்த பாலன், கற்பகம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
பெண்ணுக்கு மொட்டை: உறவினர் கைது
செஞ்சி,:காதல் திருமணம் செய்த பெண்ணுக்கு மொட்டை அடித்து அவமானப்படுத்திய உறவினரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வெண்மணியாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ், 28. இவர் பூக்கடையில் பணிபுரிந்து வருகிறார்.சென்னையில் ஜவுளிகடையில் பணிபுரியும் 23 வயது பெண்ணை ஒன்பது ஆண்டுகளாக காதலித்து வந்தார். ஒரே சமூகத்தைச் சேர்ந்த இவர்களின் திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இருவரும் 9ம் தேதி சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.தகவல் அறிந்து வந்த பெண்ணின் பெற்றோர், சகோதரர்கள், உறவினர்கள் பெண்ணைத் தாக்கி, தென்பாலை கிராமத்தில் உள்ள உறவினர் அண்ணாமலை, 63; என்பவரின் வீட்டிற்கு அழைத்துச்சென்றனர்.
அன்று மாலை அங்குள்ள முனீஸ்வரன் கோவிலில் பெண்ணுக்கு மொட்டை அடித்தனர்.பின் அப்பெண்ணை புதுச்சேரி அடுத்த காலாப்பட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்துஇருந்தனர்.
இது குறித்து யுவராஜ் அளித்த புகார்படி செஞ்சி போலீசார் பெண்ணின் தந்தை சாமிநாதன் உட்பட ஐந்து பேர் மீது வழக்குப் பதிந்து பெண்ணை மீட்டனர். பெண்ணின் உறவினர் அண்ணாமலையை கைது செய்தனர்.
வாலிபர் போக்சோவில் கைது
திருப்புத்துார்--திருப்புத்துார் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவரை போலீசார் போக்சோ பிரிவின் கீழ் கைது செய்தனர்.ஆறுகுடிப்பட்டியைச் சேர்ந்தவர் மலைச்சாமி 20. இவர் திருப்புத்துார் ஒன்றிய கிராமத்தை சேர்ந்த உறவுக்கார பிளஸ் 1 படிக்கும் சிறுமியை 3 ஆண்டுகளாக காதலித்துள்ளார். கடந்த 3 மாதத்திற்கு முன்பு சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் 3 மாத கர்ப்பமான சிறுமிக்கு மலைச்சாமி கர்ப்பத்தை கலைக்க மாத்திரை வாங்கி கொடுத்துள்ளார். சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிறுமியின் தாயார் திருப்புத்துார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சித்திரைச்செல்வி, எஸ்.ஐ., சவுதாம்மா, மலைச்சாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று அவரை கைது செய்தனர்.
பால் வேன் மோதல் : பெண்கள் இருவர் பலி
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், கண்டிகையைச் சேர்ந்தவர்கள் அர்ச்சனா, 28, லட்சுமி, 70. இவர்கள் ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்தனர்.
இருவரும் வேலைக்கு செல்வதற்கு கண்டிகை பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற பால் வேன், அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு இருவரும் இறந்தனர்.

போலீஸ் ஸ்டேஷனில் வெடித்த பட்டாசுகள்
நாகர்கோவில்:போலீஸ் ஸ்டேஷனில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்ததால் சுவர்களில் விரிசல் விழுந்தது, கூரை சேதமானது.
குமரி மாவட்டத்தில், தீபாவாளியின் போது அனுமதி இல்லாமல் பல இடங்களிலும் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவை தக்கலை போலீஸ் ஸ்டேஷன் மாடியில்பிளாஸ்டிக் ஷீட் கூரையின்கீழ் வைக்கப்பட்டிருந்தது. நேற்று மதியம் திடீரென அந்த பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்தது. போலீசார் வெளியே ஓடினர். தக்கலை தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். எஸ்.பி., பத்ரிநாராயணன் பார்வையிட்டார். இதில் கூரை சேதமானதோடு, சுவர்களில் விரிசல் ஏற்பட்டது.
ஆன்லைனில் வேலை: ரூ 2.21 மோசடி
தஞ்சாவூர்:'ஆன்லைனில்' பகுதிநேர வேலை எனக் கூறி, வாலிபரிடம் 2.21 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர்களை, சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 27. அக்டோபர் 30ம் தேதி, ஆன்லைனில் பகுதி நேர வேலை உள்ளதாக, அவரது, 'வாட்ஸ் ஆப்'பிற்கு மெசேஜ் வந்துள்ளது. அதில் வந்த 'லிங்'கை ஓபன் செய்த மணிகண்டன், '100 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து கொடுத்தால், கமிஷன் கிடைக்கும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து அவர் 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தார். தொடர்ந்து, அவருக்கு ஒரு 'டாஸ்க்' கொடுத்து, அதை உடனடியாக முடித்ததும், அவரது கணக்கிற்கு, ஒரு குறிப்பிட்ட தொகை கிரெடிட் செய்துள்ளனர். அடுத்தடுத்து, ஆன்லைனில் கொடுத்த டாஸ்க்குகளை முடித்த வகையில், பணம் கிடைத்துள்ளது.தொடர்ந்து, டாஸ்க் கிடைக்க, 18 ஆயிரம் ரூபாய், வங்கி கணக்கில் செலுத்த வேண்டும், என தெரிவித்ததால், மணிகண்டன் மர்ம நபர் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியுள்ளார்.
ஆனால், அதன் பின் பல டாஸ்க்குகளை முடித்த மணிக்கண்டனுக்கு பணம் வரவில்லை. மணிகண்டன் தொடர்பு கொண்ட போது, 2.3 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என மர்ம நபர் தெரிவித்துள்ளார். 2.21 லட்சம் ரூபாய் வரை, குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்தியும், மணிகண்டனுக்கு டாஸ்க் மற்றும் பணம் வரவில்லை.அதிர்ச்சியடைந்த மணிகண்டன் தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார்மோசடி செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE